பாரம்பரிய உணவுகளை மெல்லக் கொல்லும் வெளிநாட்டு உணவுகள்... நீயா நானாவில் எச்சரிக்கை
பழையன கழிதலும் புதிய புகுதலும் இயல்பானதுதான். அது உணவில் புகும் போது எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர் பாரம்பரிய உணவினை உண்பவர்கள்.
இந்தியாவில் தினை, சாமை, கேழ்வரகு என சிறு தாணியங்கள் ஆதிக்கம் செலுத்திய காலம் உண்டு. அவை நம்முடைய நிலத்தில் நம் நாட்டு மக்களுக்காக விளைவிக்கப்பட்டவை.
பின்னர் அரிசியின் வருகை சிறு தாணியங்களை மெல்ல மெல்ல அழிவிற்கு கொண்டு சென்றது. அசைவ உணவுகளில் ஆடு, நாட்டுக்கோழி, மீன் என உண்டு களித்த மக்கள் இன்றைக்கு வெளிநாடுகளில் இருந்து ரசாயனங்கள் கலக்கப்பட்ட டின்னில் அடைக்கப்பட்ட மாமிச உணவுகளை உட்கொள்கின்றனர். இந்த உணவுகளினால் இந்தியாவின் வர்த்தக சந்தையை கைப்பற்ற நினைக்கின்றன அந்நிய நிறுவனங்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளது.
நூடுல்ஸ், பீட்சா, பாஸ்தா, உள்ளிட்ட அந்நிய நாட்டு உணவுகளை எப்போதாவது சாப்பிடுவதில் தவறேதும் இல்லை அதே சமயம் நாம் நம்முடைய இளைய தலைமுறையினருக்கு இந்த உணவுகளை அறிமுகம் செய்து அடிக்கடி அவற்றை வாங்கிக் கொடுப்பதன் மூலம் அவை எதிர்காலத்தில் அத்தியாவசிய உணவாகிவிடும் என்கின்றனர் பாரம்பரிய உணவை விரும்புபவர்கள். இந்த உணவுமுறைகளில் புகுத்தப்படும் அரசியல் பற்றியும் அதில் உள்ள வர்த்தகரீதியான செயல்பாடு பற்றியும் இந்த வாரம் நீயா நானா நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்டது.

அடிமையாகும் குழந்தைகள்
நாம் நம்முடைய குழந்தைகளுக்கு சமைத்த உணவுகளை கொடுப்பதை விட ரெடிமேடாக இரண்டு நிமிடத்தில் தயாராகும் உணவுகளை கொடுக்கிறோம். இதனால் இவற்றை உண்ணும் குழந்தைகள் நாளடைவில் அடிமையாகிவிடுகின்றனர்.

பெற்றோர்கள் கொடுப்பதில்லை
நம்முடைய உணவுகளை இன்றைய பெற்றோர்கள் சமைத்து தருவதில்லை. தவிர அவை மிருதுவாகவும் வண்ணமயமாகவும் இருக்கும் என்பதால் குழந்தைகள் விரும்புவதாக கூறுகின்றனர் மாடர்ன் உணவுகளை விரும்பும் பெற்றோர்கள்.

பாரம்பரிய உணவுகளை சாப்பிடுங்களேன்.
இந்தியாவில் பயறு வகைகள், பருப்பு வகைகள் உள்ளன அவற்றை அவித்து தரலாம், அதேபோல் முருக்கு, சீடை, அதிரசம், என அரிசி, வெல்லம் கலந்து செய்த உணவுகள் இருக்கின்றன. அதை விடுத்து கான்ப்ளக்ஸ், ஐஸ்கிரீம், கேக் வகைகளையும், பர்க்கர், பீட்சா என அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கின்றன.

பனியாரம் சாப்பிட்ட குழந்தைகள்
நம் வீட்டுகளில் பனியாரம் சுட்டு கொடுப்பார்கள். இன்றைக்கு இட்லிக்கே யாரும் மாவு ஆட்டுவதில்லை அதற்கே ரெடிமேடு மாவுதான் வாங்குகின்றனர். பனியாரம், கொலுக்கட்டை செய்து தர நேரம் இருப்பதில்லை என்பதால் மாடர்ன் உணவுகளுக்கு மாறிவிடுவதாக கூறுகின்றனர்.

இட்லி தோசை போரடிக்குதுங்க
வீட்டில் சமைக்கப்படும் இட்லி தோசை போரடிப்பதால் பீட்சாவிற்கு மாறிவருவதாக கூறுகின்றனர். வகை வகையாக விதம் விதமான உணவுகளை சாப்பிடுவதே ஒரு அனுபவம்தான் என்பது அவர்களின் வாதம். சம்பாதிப்பது சாப்பிடுவதற்குத்தான் அதை மனதிற்கு பிடித்த வகையில் சாப்பிடுவதில் தவறொன்றும் இல்லையே என்று கூறினர் நவீன உணவுகளை விரும்புவர்கள்.

ஆரோக்கியம் போயிடுமே
இதுபோன்ற அந்நிய உணவுக்களை உண்பதன் மூலம் ஆரோக்கியம் கெட்டுப்போவது ஒருபுறம். இந்திய சந்தையை குறிவைத்து கொண்டுவரப்படும் இந்த அந்நிய உணவுகள் நாளடைவில் வருங்கால சமுதாயத்தினரின் அத்தியாவசிய உணவாக மாறிவிடும் என்று அச்சம் தெரிவித்தனர் பாரம்பரிய உணவாளர்கள்.

கெமிக்கல்ஸ் இருக்குப்பா
நவீன உணவுகளில் அதிக அளவில் ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. இதனால் ஆரோக்கிய கேடுதான் என்றனர். அதற்கு பதிலளித்த நவீன உணவு விரும்புபவர்கள் என்ன வேண்டுமானாலும் சாப்பிடலாம். நல்லா உழைத்தால் பிரச்சினை இல்லை என்றனர். ஆரோக்கியத்தைப் பற்றி கவலையில்லை என்றனர்.

அத்தியவசியமாகிவிடும் என்ற அச்சம்
பாரம்பரிய உணவுகள் சந்ததியை குறிவைத்து சமைக்கப்படுகின்றன. அதே சமயம் நவீன உணவுகள் சந்தையை குறிவைத்து கொண்டு வரப்படுகின்றன. என்ன விலை என்றாலும் கொடுத்து சாப்பிட்டுவிட்டுதான் வருகிறோம் என்றார் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் டாக்டர் சிவராமன். மக்களை சுவைக்கு அடிமையாக்கி அவற்றை அத்தியாவசிய உணவாக மாற்றுவதுதான் அந்நிய நிறுவனங்களின் வேலை என்றார் டாக்டர் சிவராமன்.

நோய்களில் சிக்கும் தலைமுறை
ரெடி மேட் உணவுகள், பழச்சாறுகளை உட்கொள்வதன் மூலம் புற்றுநோய் தாக்கம் அதிகரித்து வருவதாக அச்சம் தெரிவித்தார் சிவராமன். எனவே அவற்றை தவிர்ப்பதில் தவறேதும் இல்லை என்றார். பல அரசியல் இவற்றில் பொதிந்துள்ளது என்றார் டாக்டர் சிவராமன்.

மக்கள் தொகை அதிகமாகிறதே?
மக்கள் தொகை அதிகமாக அதிகமாக உணவுகளும் மாறிக் கொண்டே வருகின்றன. இந்த மாற்றம் தவிர்க்க முடியாது என்றார் எழுத்தாளர் ஷாஜி. பிள்ளைகளுக்கு வீட்டில் தயாரித்து கொடுக்க வேண்டிய உணவுகளை கொடுக்காமல் கடைகளில் விற்கப்படும் உணவுகளை வாங்கிக் கொடுப்பதில்தான் அரசியலும், வணிகமும் கலந்திருக்கிறது என்றார் கோபிநாத். எந்த சமூகம் ஆரோக்கியமாக இருக்கிறதோ அந்த சமூகம்தான் சிந்திக்கும். சந்தோசத்திற்காக சாப்பிடலாம். ஆனால் அடிமையாகிவிடாதீர்கள். நம் தேசத்திற்கு எதிராக மிகப்பெரிய போர் இது என்றும் கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார் தொகுப்பாளர் கோபிநாத்.


Click it and Unblock the Notifications











