வானவில் வண்டி ஓட்டுதே… நீயா? நானா?வில் அழகான விவாதம்
ஆண்கள் மட்டும்தான் இருசக்கர வாகனம் ஓட்டனுமா? நாங்களும் ஓட்டுவோம்ல என்று இன்றைக்கு பெண்கள் பட்டாம்பூச்சிகளாய் இரு சக்கர வாகனங்களில் பறக்கின்றனர்.
ஸ்கூட்டி உள்ளிட்ட பெண்கள் மட்டுமே ஓட்டும் வாகனங்கள் மட்டுமல்ல ஆண்கள் ஓட்டும் வாகனங்களையும் இன்றைக்கு அனாயசமாக பெண்கள் ஓட்டுகின்றனர்.
சாலைகளில் பெண்கள் இருசக்கர வாகனங்களை ஓட்டும் போது அதை கண்டு வயிற்றெரிச்சல் படும் ஆண்கள் ஒருபுறம் இருக்கின்றனர். அதே சமயம் அதை அழகியலோடு ரசிக்கும் ஆண்களும் இருக்கத்தான் செய்கின்றனர். நேற்றைய நீயா நானா நிகழ்ச்சியில் டூவீலர் ஓட்டும் பெண்களும், டூவீலர் ஓட்ட பயப்படும் ஆண்களும் சுவாரஸ்யமாக விவாதித்தனர்.

தேவதையாய் உணர்ந்தேன்
நடந்து போன நாட்கள், பேருந்து, ஆட்டோக்களில் பயணம் செய்த நாட்கள் போய் புதிதாய் இருசக்கர வாகனம் வாங்கிய உடன் தேவதையாய் உணர்ந்ததாக பெண்கள் கூறினர். வாகனம் ஓட்டுவதற்காகவே தங்களை அழகுப் படுத்திக் கொண்ட பெண்களும் அதிகம்.

வயலின் வாசிக்கும்
தன்னுடன் சாலையில் ஒருபெண் இருசக்கர வாகனத்தில் வந்தால் அழகாய் உணர்வதாக ஆண்கள் கூறினர். நம்மைக் கடந்து வாகனத்தில் ஒரு பெண் போனால் மனசுக்குள் வயலின் வாசிக்கும் உணர்வு இருக்கும் என்றார் இளைஞர் ஒருவர்.

திமிரு அதிகமோ?
பெண்கள் வண்டி ஓட்டுவது பற்றி கமெண்ட் செய்த ஆண்கள், அவர்கள் திமிராகப் போவதாக கூறினார்கள். ஒருவித அலட்சியம் இருக்கிறது என்றும், ஆண்களையும், சாலையில் பின்னால் வருபவர்களைப் பற்றி கண்டு கொள்வதில்லை என்றும் கூறினார்கள்.

மன உளைச்சல் தருகிறது.
பைக் ஓட்டும் போது ஆண்கள் பாலோ செய்வது, பார்த்துக் கொண்டே வருவது, எங்களுக்கு சிரமமாக இருக்கிறது என்றனர் பெண்கள். ஆனால் நாங்கள் அழகையும், அழகான பெண்களையும் ரசிக்கின்றனர் என்றனர் ஆண்கள்.

நம்ம கைய விட்டுப் போகுதே
ஆண்களின் பின்னால் பில்லியலின் பெண்கள் அமர்ந்து வருவதைத்தான் பெரும்பாலான ஆண்கள் விரும்புகின்றனர். அதனாலேயே தனியாக வாகனம் எதுவும் வாங்கித் தர யோசிக்கின்றனர். தனியாக வாகனம் ஓட்டினால் நம்மை மதிக்க மாட்டார்கள், சொல் பேச்சு கேட்க மாட்டார்கள் என்பது ஆண்களின் எண்ணம்.

சுதந்திரமாக உணர்கிறோம்
இருசக்கர வாகனம் ஓட்டும் பெண்கள் எல்லோருமே சுதந்திரமாக உணர்வதாக கூறினார்கள். இது பெண்களின் சுதந்திரம் சார்ந்த தொடர்புடையதாக இருக்கின்றன.

கவனச் சிதறல் அதிகம்
பெண்கள் வண்டி ஓட்டினால் தவறாகத்தான் ஓட்டுவார்கள் என்பது ஆண்களின் எண்ணம்.கவனச்சிதறல் அதிகம் என்பது ஆண்களின் வாதம். சிந்தனையை எங்கோ வைத்துக் கொண்டு வாகனம் ஓட்டுவார்கள் என்றனர். ஆனால் அப்படியில்லை எங்களுக்கு அனைத்து பகுதிகளையும் பார்த்துக் கொண்டு கவனமாகத்தான் வண்டி ஓட்டுகிறோம் என்பது பெண்களின் கருத்து.

ஊர்சுற்றுகிறோமோ?
வண்டி ஓட்டும் பெண்கள் திமிராகத்தான் இருப்பார்கள் என்ற எண்ணம் அதிகம். ஊர் சுற்றுவார்கள் என்றும் உறவினர்களே பேசுவார்கள். அதைவிட ஆண்கள் செய்யும் கமெண்ட் அதீதமான என்றனர் பெண்கள். தனிமைப் படுத்திப் பார்க்கின்றனர். கமெண்ட் கேவலமாக இருக்கும். தலையில் அடித்துக் கொள்வார்கள். அடுப்பூதும் பெண்களுக்கு பைக் எதற்கு என்று ஆண்கள் கேட்பது மனதைக் காயப்படுத்துவதாக கூறினர்.

பயமா இருக்கே
இன்றைக்கு ஆண்கள் பலரும் வாகனம் ஓட்ட பயப்படுகின்றனர். எதனால் வாகனம் ஓட்ட தங்களுக்கு அச்சம் ஏற்படுகிறது என்றும் ஆண்கள் தெரிவித்தனர். விபத்து ஏற்பட்டு விடுமோ என்பதுதான் பெரும்பாலோனோரின் கருத்து.

தாழ்வு மனப்பான்மை
பெண்கள் வண்டி ஓட்டுவதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அது எங்களுக்குத் தாழ்வு மனப்பான்மை தருகிறது என்றனர் ஆண்கள். பெண்களின் குணமே மாறிவிடுகிறது என்றும் குற்றம் சாட்டினர்.

கம்பேர் செய்யாதீர்கள்
எங்களை ஜெயிக்க ஏன் போராடுகிறீர்கள்? சாலையில் போகும் போது ஆண்களை விட அதிகம் வேகத்தோடு போய் விபத்தில் சிக்கிக் கொள்வீர்களோ என்ற அச்சம் ஆண்களிடம் இருக்கிறது.

இது சமூகத்தின் வளர்ச்சி
உலகில் நாகரீக வளர்ச்சியே சக்கரத்தினால்தான் வந்தது. இரு சக்கர வாகனம் பெண்களின் நகர்தலை அதிகமாக்கியது. வெளியே செல்ல யாரையும் சார்ந்திருக்க வேண்டியதில்லை என்ற எண்ணம் உருவானது. எனவே இதை ஆண்கள் தவறாக நினைக்க வேண்டியதில்லை என்று கூறிய கோபிநாத், அதே சமயம் கொஞ்சம் கவனமும் வேண்டும் என்று பெண்களிடம் அறிவுறுத்தினார்.
பெண்கள் இரு சக்கர வாகனம் ஓட்டுவது சாதாரண விசயம்தான் என்று நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் இதற்குப் பின்னால் இத்தனை விசயங்களை இருக்கிறதா என்பதை உணர ஒரு வாய்ப்பாக அமைந்தது நேற்றைய நீயா? நானா? நிகழ்ச்சி.


Click it and Unblock the Notifications











