இந்த கொசு தொல்லை வேற தாங்க முடியல.. விஜய், அஜித், சூர்யாக்கு அடுத்து திவாகர் தானாம்?
சென்னை: பிக்பாஸ் தமிழ் சீசன் 9ல் போட்டியாளராக களமிறங்கி உள்ள தர்பூசணி திவாகரின் நடவடிக்கைகள் பல நேரங்களில் எரிச்சலூட்டும் விதமாக இருந்தாலும், சில நேரங்களில் அவர் பல்பு வாங்குவதை பார்க்கும் போது சிரிப்பை அடக்க முடிவதில்லை. கானா வினோத்துக்கும் அவருக்கும் இடையில் நடக்கும் பேச்சு வார்த்தையைப் பார்க்க பார்க்க நன்றாக உள்ளது. ஆனால் சில நேரங்களில் திவாகர் செய்யக்கூடிய விஷயங்களைப் பார்க்கும் போது அதை அவர் தெரிந்து செய்கிறாரா? இல்லை தெரியாமல் செய்கிறாரா என்ற கேள்வி எழாமல் இல்லை. அப்படியான ஒரு சம்பவம் தான் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
அடிப்படையில் பிசியோதெரபி மருத்துவரான திவாகர், ரீல்ஸ் செய்து பதிவேற்றிய வீடியோக்களைப் பார்த்த இணையவாசிகள் சிலர் அவரை நடிப்பை பார்த்து காமெடியாக இருக்கிறதே என்று லைக்குகளை வாரி வழங்கி உள்ளனர். அதன் பின்னர் தர்பூசணி திவாகர் என்று அழைக்கப்பட்டதில் இருந்து அவர் பிரபலமடைந்தார். சினிமாக்களில் மிகவும் சீரியஸான காட்சிகளை இவர் ரீல்ஸ் செய்து பகிர்ந்தாலும் அது சிரிப்பைத்தான் வரவழைக்கிறது.

சக மனிதர்களை தனது நடிப்பின் மூலம் சிரிக்க வைப்பது என்பது மிகவும் சவாலான காரியம். அதை திவாகர் செய்து வருகிறார். இங்கு என்ன பிரச்னை என்றால், திவாகர் தன்னை ஒரு நகைச்சுவை நடிகராக ஏற்றுக் கொள்ளத் தயங்குகிறார். மாறாக, தன்னை ஆக்ஷன் கதாநாயகராக நினைத்துக் கொண்டு இருக்கிறார் என்று அவரது நடவடிக்கைகளைப் பார்த்தாலே தெரிகிறது என்று, இணையவாசிகள் தொடங்கி பலரும் தெரிவித்தார்கள். திவாகர் தன்னை கதாநாயகன் மெட்டீரியலாகவே நினைக்கட்டும் அது, அவரது விருப்பம். ஆனால் அவரை அங்கீகரிக்கும் இடத்தில் மக்கள் இருக்கிறார்கள் என்பதையும் அவர் புரிந்து கொண்டால் பிழைத்துக் கொள்வார்.
கொசுத் தொல்லை: பிக் பாஸ் வீட்டில் டாஸ்க்கை சிறப்பாக செய்கிறாரோ இல்லையோ, எல்லா கேமராக்கள் முன் சென்றும் ரீல்ஸ் செய்து வருகிறார். இது ஒரு கட்டத்திற்கு மேல் எரிச்சலை உண்டாக்குகிறது. இப்படி இருக்கையில் தற்போது அவர் தனது சொந்த வசனத்தைப் பேசி பிக் பாஸ் வீட்டிற்குள் ரீல்ஸ் செய்துள்ளார். அதில், அஜித் சார் கார் ரேஸ்க்கு போய்விட்டார். விஜய் சார் அரசியலுக்கு போய்விட்டார், சூர்யா சார் பாம்பேவுக்கு போய்விட்டார், விஜய் சேதுபதி சார் பிக் பாஸ் போய்விட்டார், அடுத்து இந்த தமிழ் சினிமாவை யார் காப்பாற்ற போகிறார் என்று பார்த்தால், வாட்டர்மெலன் ஸ்டாரின் என்ட்ரி பயங்கரமா இருந்துச்சு. அதனால் தமிழ் திரையுலகை நான் தான் காப்பாற்றப் போகிறேன் என்று வாட்டர்மெலன் ஸ்டாராக நான் களமிறங்கி உள்ளேன்" என்று பேசியுள்ளார்.

எவிக்ஷன்: இவரது இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. சிலரோ இவரைப் போன்ற தைரியம் அனைவருக்கும் இருக்க வேண்டும் என்று ட்ரோல் செய்து வருகிறார்கள். மேலும் சிலரோ இந்த கொசுத் தொல்லை தாங்க முடியல என்றும் பதிவிட்டு வருகிறார்கள். திவாகர் இந்த வார நாமினேஷனிலும் இருக்கிறார். அவர் வெளியேறுவதற்கான வாய்ப்புகளும் இருப்பதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











