ஏ.ஆர்.ரஹ்மான் கச்சேரியுடன் ஒளிபரப்பை தொடங்க போகும் புதிய தமிழ் செய்தி சேனல்
சென்னை: தமிழிலில் புதிதாக ஒரு 24 மணி நேர செய்தி தொலைக்காட்சி தொடங்கப்பட உள்ளது.
பெரும் செல்வந்தர்கள் தொலைக்காட்சி சேனல்களை துவங்குவது தமிழகத்தில் தொடர் கதையாகி உள்ளது. முதலில் அரசியல் கட்சியினர் தொலைக்காட்சிகளை தொடங்கிய நிலையில், இப்போது தொழிலதிபர்கள் தொலைக்காட்சி சேனல் தொடங்குவது பேஷனாகியுள்ளது. ஒருவகையில் அரசியல், போலீஸ் நெருக்கடியில் இருந்து இது பாதுகாப்பையும் தருகிறது.
இதற்கு தற்போதைய செய்தி தொலைக்காட்சி சேனல்கள் சிலவற்றை உதாரணமாக கூற முடியும். மூத்த மற்றும் திறமையான பத்திரிகையாளர்களை அதிக சம்பளம் கொடுத்து பணியில் சேர்க்கும் இதுபோன்ற சில டி.வி.சேனல்கள், மக்கள் மத்தியில் சற்று பெயர் வாங்கியதும், அதன்பிறகு பத்திரிகையாளர்களுக்கு ஊதிய உயர்வு தராமல், அதிக பணிச்சுமை கொடுத்து விரட்டும் சம்பவமும் நடந்துதான் வருகிறது.

நியூஸ்-7
இந்நிலையில்தான், தமிழகத்தில் அடுத்த மாதம் முதல் புதிதாக ஒரு 24 மணி நேர செய்திச் சேனல் தொடங்கப்பட உள்ளது. நியூஸ்-7 என்பது அந்த சேனலின் பெயர். அக்டோபர் 3ம்தேதி முதல் ஒளிபரப்பை துவங்க உள்ளதாம் இந்த சேனல்.

ஆங்கில ஊடகத்தில் பணியாற்றியவர் எடிட்டர்
ராஜேஷ் சுந்தரம் என்பவர் தான் இதன் தலைமை எடிட்டராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்பு இவர் 'ஹெட்லைன்ஸ் டுடே' உள்ளிட்ட ஆங்கில ஊடகங்கள் சிலவற்றில் டெல்லியில் வேலை பார்த்த அனுபவம் உள்ளவராம். தற்போது முன்னணியில் உள்ள செய்தி சேனலில் இருந்து சில உதவி ஆசிரியர்கள், நிருபர்கள் நியூஸ்7 சேனலுக்கு இடம் பெயர்ந்துவிட்டனர். ஊதிய உயர்வு இதற்கு காரணம்.

தாது மணல் பணத்தில் டிவியா?
இந்த சேனலை நெல்லை, தூத்துக்குடி மாவட்ட கடலோரத்தில் தாது மணலை அள்ளியெடுத்து கொள்ளையடித்ததாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர்தான் ஆரம்பிப்பதாகவும், ஆனால் தொலைக்காட்சியில் அவரது பெயர் அடிபடாமல் பார்த்துக்கொள்வதாக கூறுகிறார்கள்.

ரஹ்மான் கச்சேரி
இந்த சேனல் துவக்க விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் கச்சேரி நடத்தப்போவதுதான் சுவாரசியம். 3ம்தேதி சேனல் ஒளிபரப்பை துவங்க உள்ள நிலையில், 2ம்தேதி மாலை 6 மணி முதல் சென்னை ஜவகர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் ஏ.ஆர்.ஆர் கச்சேரி தொடங்குகிறது.


Click it and Unblock the Notifications











