twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மறக்கமுடியுமா? டிடியை... சில நினைவலைகள்...

    By Mayura Akilan
    |

    பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்து கிளித்தட்டு, நொண்டி, கபடி ஆடிக்கொண்டிருந்த காலம் அது... வீடுகளில் ரேடியோவும், டேப் ரெக்கார்டரும் இருந்தாலே பணக்காரர்களாக கருதப்பட்ட காலம் அது. எங்கள் கிராமத்தில் முதன் முதலாக ஒரு வீட்டில் டிவி வந்தது. ரேடியோவில் பாட்டு தானே கேட்கமுடியும்... ஆனால் இதில் உருவமும் வருதே என்று ஆச்சரியப்பட்டு ஊரே வந்து பார்த்தது. அது முதல் அவர்கள் வீடு டிவிகாரம்மா வீடாகி விட்டது.

    1984 அக்டோபர் 31ல் இந்திரா காந்தி படுகொலை சம்பவமும் அதை தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற்ற நேரடி ஒளிபரப்பையும் பார்க்க ஊரே ஒன்று கூடியது. மைதானம் போல் இருந்த டிவிக்காரம்மா வீட்டு முன்பு பந்தல் போட்டு ஊரே கண்ணீர் விட்டபடி இந்திரா காந்தியின் இறுதி நிகழ்ச்சியை பார்த்தது.

    புதன்கிழமை சித்ரகார், வெள்ளிக்கிழமை சித்ரமாலா என இந்திப்பாடல்களும், அதில் ஸ்ரீதேவி, ஹேமாமாலினி நடித்த படங்களின் பாடல்கள் வந்தால் கூடுதல் உற்சாகம். ஞாயிறுகளில் ராஜேஸ்கண்ணா நடித்த படங்கள் போட்டால் தனி சந்தோசம்தான்.

    இலங்கையின் ரூபாவாகினியில் போடப்படும் தமிழ்படத்தைப் பார்க்க நள்ளிரவுவரை காத்திருந்த காலமெல்லாம் ஒரு பொற்காலம் என்றே சொல்லலாம்.

    பக்கத்து வீட்டில் போய் நம்ம வீட்டு பெண் டிவி பார்ப்பதா என்று நினைத்த தாத்தா 87களில் கதவு போட்ட சாலிடர் டிவி வாங்கி வந்து ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். எங்கள் வீடே திருவிழா கோலம்தான் காணும். வெள்ளிக்கிழமை ஒளியும் ஒளியும் பார்க்கவும், ஞாயிறு படங்கள் பார்க்கவும் கூட்டம் சும்மா அம்மும். அதோடு ராமானந்த சாகரின் ராமாயணம் ஒளிபரப்பான காலத்தை யாராலும் அத்தனை எளிதாக மறக்க முடியாது.

    ராமருக்கு ஆரத்தி

    ராமருக்கு ஆரத்தி

    ஞாயிறு தோறும் காலையில் அவசரம் அவசரமாக அள்ளிவிழுங்கிவிட்டு ஒன்பதரைக்கே ஊரடங்கிவிடும். டிவி பெட்டியில் வந்த ராமருக்கு கற்பூர ஆரத்தி காட்டி கும்பிட்ட காலம் அது. கண்டிப்பாக இதிகாச காலத்து ராமர் இவரைப்போலத்தான் இருந்திருக்க வேண்டும். அத்தனை அழகு... அவரது முகத்தில் இருந்த மாறாத புன்னகை தேசத்தையே கொள்ளை கொண்டது.

    மகாபாரதம்

    மகாபாரதம்

    அதற்குப் பின் ஒளிபரப்பான சோப்ராவின் மகாபாரதமும் அதே அளவு புகழ்பெற்றது. அழகான கிருஷ்ணன், அசத்தலான அர்ஜூனன், பீமன் என்ற பெயருக்கு ஏற்ற மாதிரி பிரம்மாண்ட நடிகர், துரியோதனன், திரௌபதியின் அசத்தலான நடிப்பு என அனைவரையும் கவர்ந்தது. இதனையடுத்து ஒளிபரப்பான தி ஸ்வாட் ஆப் திப்புசுல்தான், சந்திரகாந்தா என வரிசையாக ஞாயிறு காலைகளில் ஒளிபானது.

    மனதை கவர்ந்த நிகழ்ச்சிகள்

    மனதை கவர்ந்த நிகழ்ச்சிகள்

    வயலும் வாழ்வும், வாழ்க்கைக் கல்வி, யுஜிசி கல்வி ஒளிபரப்பு, காது கேளாதோருக்கான செய்திகள், அவ்வளவு ஏன் நேயர் விருப்பம் கடிதம் படிக்கும் நிகழ்ச்சியைக் கூட விடாமல் ரசிப்பார்கள் பயபுள்ளைகள். எஸ்.வி.சேகர், கிரேஸி மோகன், மனோரமா ஆச்சி, விவேக், நடித்த நாடகங்கள் பார்க்க க்யூ கட்டி நிற்கும் கூட்டம்.

    ரயில் சிநேகம்

    ரயில் சிநேகம்

    ஒரே செட்டில் நாடகம் பார்த்து பழகியவர்களுக்கு பாலச்சந்தரின் ரயில் சிநேகத்திற்கு தனி ரசிகர்கள் உண்டு. அதுவும் ரம்மியமான சூழலில் ரசனையாய் எடுத்து இதிலும் தான் வித்தியாசமானவன் என்று நிரூபித்திருப்பார். அடுத்த வாரம் எப்போது வரும் ஏங்க வைத்திருப்பார்.

    புறக்கணிக்க முடியுமா?

    புறக்கணிக்க முடியுமா?

    இந்தியத் தொலைக்காட்சிகளுக்கு அடிப்படை வகுத்துக் கொடுத்த நிறுவனம் என்கிற வகையில் தூர்தர்ஷனின் பங்களிப்பைப் புறக்கணிக்க முடியாது. பெருந்தலைவர்கள் யாரேனும் இறந்துவிட்டால் ஒலிக்கும் இசைபோலவே இன்றைக்கும் ஒலிக்கும் அதன் சிக்னேச்சர் இசையை பாலசந்தர் தனது அழகன் திரைப்படத்தில் அமைத்து பெரிய ஹிட் ஆக்கியிருப்பார்.

    பெயர்தான் மாறுதே தவிர…

    பெயர்தான் மாறுதே தவிர…

    டிடி5, மெட்ரோ சேனல், பொதிகை என பெயர் மாறினாலும் நிகழ்ச்சியின் தரத்தில் மாற்றங்கள் ஏற்பட்டதாக தெரியவில்லை.சேட்டிலைட் சேனல்களின் வருகையால் தூர்தர்சனின் புகழ் படிப்படையாக மங்கத் தொடங்கியது. பார்வையாளர்கள் குறைவுதான் என்றாலும் தனது வழக்கமான பாணியில் ஒளிபரப்பை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

    English summary
    The 80s was the era of Doordarshan with soaps like Hum Log, Buniyaad and comedy shows like Yeh Jo Hai Zindagi which made Doordarshan a household name. The characters of Ramayan and Mahabharat were almost worshiped like God and Goddess throughout the country.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X