அப்பாடா! அத்திப்பூக்கள் முடிஞ்சு போச்சு…!.
சன் தொலைக்காட்சியில் 1270 நாட்கள் இல்லத்தரசிகளை அழவைத்த அத்திப்பூக்கள் தொடர் இன்றோடு முடிவுக்கு வந்துவிட்டது. அதற்கு பதிலாக திங்கட்கிழமை முதல் நடிகை உமா நடித்த வள்ளி தொடர் ஆரம்பமாகிறது.
முன்பெல்லாம் சின்னத்திரை தொடர்கள் 100 எபிசோடு தாண்டுவதே சாதனையாக பேசப்பட்டது. இந்த தொடர் அசால்டாக நான்கு ஆண்டுகளை கடந்தது. 1273 எபிசோடுகள் வரை ஒளிபரப்பாகி சாதனை படைத்துள்ளது அத்திப்பூக்கள்.
இந்த தொடர் டிசம்பர் 14ம் தேதியுடன் முடிவுக்கு வந்தது. அத்திப்பூக்கள் முடியப்போகிறது என்பதை ஏதோ சொந்தக்காரங்க நம்ம வீட்டை விட்டு போறாங்களாமே என்ற ரேஞ்சுக்கு பேச ஆரம்பித்திருக்கின்றனர் இல்லத்தரசிகள்.

தேவதர்ஷினியின் பயணம்
சரிகம நிறுவனம் தயாரித்த அத்திப்பூக்கள் தொடரில் கணவன் மனைவியான சேத்தன், தேவதர்ஷினி தம்பதியர்தான் ஜோடியாக நடித்தனர். பின்னர் கதையின் போக்கு மாறவே சேத்தன் இந்த தொடரில் நடிக்கவில்லை. அவருக்கு பதிலாக சதீஸ் நடிக்க ஆரம்பித்தார். இந்த தொடர் தேவதர்ஷினிக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது.

அஞ்சலியின் வில்லத்தனம்
அத்திப்பூக்கள் தொடரில் அனைவரையும் கவர்ந்த பாத்திரம் அஞ்சலி. இவர் கதாநாயகி பத்மாவின் நாத்தனார். இருவரையும் மையமாக வைத்து உருவாக்கப்பட்ட கதைதான் என்றாலும் இடை இடையே கிளைக் கதைகள் வேறு நாட்களை கடத்த உதவியது.

சின்னப்புள்ளை தனமா இருக்கே
இந்தத் தொடரில் வந்த போலீஸ் கதாபாத்திரங்கள் எல்லாமே சின்னப்புள்ளதனமா இருக்கே என்ற ரீதியில் பேசவைக்கப்பட்டன. அதேபோல் உதவி கமிஷனர் ரெஜினா முதல், இன்ஸ்பெக்டர் வரை எல்லோருமே சொல்லி வைத்த மாதிரி கடைசி வரைக்கும் காவல்துறையின் மாண்பை காப்பற்றவே இல்லை என்று விமர்சனம் எழுந்தது.

ரொம்ப கொடூரமா இருக்கே
இந்த தொடரில் அண்ணி - நாத்தனார் பழிவாங்கல் கதைதான் என்றாலும் குரூரத்தனமான சீன்களை வைத்து வெறுப்பேற்றியிருந்தனர். கர்ப்பிணியை வழுக்கி விழ வைப்பது. கருவை அழிக்க விஷம் வைப்பது. நாத்தனாரின் கணவரை லாரியை விட்டு மோதி கொலை செய்ய தூண்டுவது போன்ற காரியங்களை ஒரு பெண் செய்வதுபோன்று குரூரமாக வைத்திருந்தனர்.

கதாநாயகன் மாறிய கதை
பெரும்பாலான தொடர்களில் இவருக்கு பதில் இவர் என்று கார்டு போட்டு வேறு யாரையாவது நடிக்க வைப்பார்கள். சின்னச் சின்ன கதாபாத்திரங்களில் நடித்தவர்கள்தான் ஆள் மாறுவார்கள். ஆனால் இந்த அத்திப்பூக்கள் தொடர் தொடங்கி சில நூறு எபிசோடுகளில் கதாநாயகன் சேத்தனுக்கு பதில் சதீஸ் மாறினார். இந்த தொடரில்தான் கதாநாயகனே மாறிய கதை நடந்தது.

அசராமல் பார்த்த அம்மணிகள்
என்னதான் தெரிந்த கதை என்றாலும் அது எப்படி இருந்தாலும் நாங்கள் விடப்போவதில்லை என்று தொடர்ந்து 1270 எபிசோடுகளை பார்த்து தீர்த்தனர் இல்லத்தரசிகள். நேற்றுவரை நம்முடன் இருந்த பத்மா, அஞ்சலி, கற்பகம் இனி வரமாட்டாங்களா? என்று துக்கம் விசாரிக்கவும் ஆரம்பித்துவிட்டனர். கவலைப்படாதீர்கள் அதற்கு பதிலாக ‘வள்ளி' வரப்போறா என்று இப்போதே முன்னோட்டம் போட ஆரம்பித்துவிட்டனர் தொலைக்காட்சி நிறுவனத்தினர்.


Click it and Unblock the Notifications











