பொன்னி வள வீர சரித்திரம் டிவி தொடர் நிறுத்தம்: நடிகர் சிவகுமார்
சென்னை: தந்தி டிவியில் ஒளிபரப்பாகும் சர்ச்சைக்குரிய தொடரான பொன்னி வள வீர சரித்திரம் நிறுத்தப்படுவதாக நடிகர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
பொன்னி வள வீர சரித்திரம் தொடர் தந்தி டிவியில் வாரந்தோறும், சனி, ஞாயிற்று கிழமைகளில், மாலை, 5:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இந்த தொடரில் சில மணித்துளிகள் மட்டுமே பின்னணி குரல் கொடுத்துள்ள நான் எந்த ஒரு இனத்தின் மனதையும் புண்படுத்தும் வகையில் ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்பது இந்த தொடரை பார்த்தவர்களுக்குப் புரியும்.

கொங்கு நாட்டு மக்கள்
எப்படியிருப்பினும், நான் பிறந்த கொங்கு மண்ணில் வாழும் சகோதார இனத்தவர்களுக்கு இந்த தொடர் சிறிது வருத்தத்தை அளித்திருப்பதாக உணர்கிறேன்.

டிவி தொடர் நிறுத்தம்
அந்த சகோதர்களின் உணர்வை மதிக்கின்ற வகையில், தந்தி தொலைக்காட்சியினரிடம் பேசி இத்தொடரினை இத்துடன் நிறுத்திக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டுள்ளேன். பொன்னி வள வீர சரித்திரம் தொடரினை நிறுத்திவிடுவாக அவர்கள் தெரிவித்துள்ளனர் என்று நடிகர் சிவகுமார் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கொடும்பாவி எரிப்பு
நடிகர் சிவகுமார், தன்னுடைய ஜாதியை விளம்பரப்படுத்தும் விதமாகவும், பிற சமுதாயத்தை இழிவுபடுத்தும் நோக்கிலும் பேசி வருகிறார் எனக்கூறி, இரு தினங்களுக்கு முன் ஈரோட்டில் கொங்கு நாடு வேட்டுவ கவுண்டர் இளைஞர் நலச்சங்கத்தினர், நடிகர் சிவகுமார் கொடும்பாவி எரித்தனர்.
அப்போது அவர்கள், "பொன்னி வள ஒரு வீர சரித்திரம்' என்ற தொடரில், நடிகர் சிவகுமார், தன்னுடைய ஜாதியை விளம்பரப்படுத்தும் விதமாகவும், பிற சமுதாயத்தை இழிவுபடுத்தும் நோக்கிலும் பேசி வருகிறார். இதைக் கண்டித்து, ஈரோடு மற்றும் நாமக்கல் கலெக்டர்களிடம் மனு கொடுத்தும், எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, நடிகர் சிவகுமாரின் கொடும்பாவியை எரித்தோம். என்று தெரிவித்தனர்.

அறிக்கை
போலீசாரிடம், இதற்கான அனுமதி கோரவில்லை; போலீசாரும், யாரையும் கைது செய்யவில்லை. மாறாக, கொடும்பாவி எரிப்புக்கு பின், அனைவரையும் கலைந்து போகுமாறு அறிவுறுத்தினர்.
இந்த நிலையில் தொடர் நிறுத்தப்படுவதாக நடிகர் சிவகுமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











