பிக்பாஸ் ரஞ்சித் அப்படித்தான் இருப்பார்.. ஒரு நல்லதுக்காக செய்தோம்.. நடிகை பிரியா ராமன் விளக்கம்
சென்னை: கோலிவுட்டில் 90களில் நடிகராக வந்து சில படங்களில் நடித்தவர் ரஞ்சித். இவரது நடிப்பு மறுமலர்ச்சி, பாண்டவர் பூமி உள்ளிட்ட திரைப்படங்களில் வெகுவாகவே பேசப்பட்டது. முதலில் பிரியா ராமனை காதலித்து திருமணம் செய்துகொண்ட அவர்; விவாகரத்து பெற்று இன்னொரு பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். கடைசியாக அவர் கவுண்டம்பாளையம் படத்தை இயக்கி நடித்தார். இப்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனில் கலந்துகொண்டிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் பா.இரஞ்சித், வெற்றிமாறன், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர் முக்கியமான இயக்குநர்களாக வலம் வந்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் தங்களது படங்களில் ஒடுக்கப்பட்டவர்களின் குரலையும், சாதி பார்க்கக்கூடாது, அடுத்தவரை ஒடுக்கக்கூடாது என்ற கருத்தையும் ஓங்கி ஒலிக்கவிடுகிறார்கள். அப்படி அவர்கள் எடுக்கப்படும் படங்களுக்கு பலமான ஆதரவு இருந்தாலும் அவர்களுக்கு எதிர் தரப்பில் இயங்கும் இயக்குநர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

மோகன் ஜி: அப்படிப்பட்டவர்களில் ஒருவர் இயக்குநர் மோகன் ஜி. அவர் தனது படங்களிலும், தான் பேசும் மேடைகளிலும் ஆதிக்க வர்க்கத்தினருக்கு ஆதரவாகவும், பா.இரஞ்சித், வெற்றிமாறன், மாரி செல்வராஜ் உள்ளிட்டோருக்கு எதிராகவும் கடுமையாக பேசிவருகிறார். ஆனால் அவரது பேச்சை பலர் ட்ரோல் செய்துவருகிறார்கள் என்பதுதான் கள எதார்த்தம். சூழல் இப்படி இருக்க நடிகரும், இயக்குநருமான ரஞ்சித்தையும் அந்த வரிசையில் இணைத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.
கவுண்டம்பாளையம்: அதற்கு காரணம் அவர் இயக்கி நடித்த கவுண்டம்பாளையம் திரைப்படம். அந்தப் படத்தில் நாடக காதல் என்பதை வைத்துக்கொண்டு வேலை செய்திருந்தார். மேலும் தான் அளித்த பேட்டிகளிலும் ஆதிக்க சாதியினருக்கு சப்போர்ட் செய்யும் விதமாகவும், பிற்போக்குத்தனமாகவும் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார். கவுண்டம்பாளையம் படம் அண்மையில் வெளியாகி மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. தற்போது ஓடிடியிலும் ரிலீஸாகியிருக்கிறது.
பிக்பாஸ்: சூழல் இப்படி இருக்க யாரும் எதிர்பார்க்காத வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனில் கலந்துகொண்டிருக்கிறார் ரஞ்சித். முதல் வாரத்தில் அவரும், ரவீந்தரும் சேர்ந்து செய்த பிராங்க் பெரும் கண்டனத்தை ஹவுஸில் இருக்கும் பெண்களிடம் சம்பாதித்தது. மேலும் விஜய் சேதுபதியும் ரஞ்சித்தை கிடைக்கும் கேப்பில் வைத்து செய்துவருகிறார். இதற்கிடையே அவர் நடிகை பிரியா ராமனை காதலித்து திருமணம் செய்து பிரிந்து இப்போது மீண்டும் சேர்ந்திருக்கிறார்.
பிரியா ராமன் பேட்டி: இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரஞ்சித்தின் செயல்பாடு குறித்து பேசியிருக்கும் பிரியா ராமன், "பிக்பாஸில் ரஞ்சித் கலந்துகொள்வது என்பது கடைசி நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவு. நிகழ்ச்சியின் தொடக்க விழாவின்போது ஒரு இளம் ஜோடிக்கு எங்களால் நல்லது ஒன்று நடக்க வேண்டியதிருந்தது. அப்போது எங்கள் இருவரில் யாரேனும் ஒருவர் அந்த ஜோடியுடன் இருக்க வேண்டிய சூழல் இருந்தது. அதனால்தான் தொடக்க விழாவில் என்னால் கலந்துகொள்ள முடியவில்லை.
வேறு யாரும் இல்லை: அந்த இளம் ஜோடிக்கு எங்களை விட்டால் வேறு யாரும் இல்லை. தங்களுக்கு ஒரு நல்லது நடக்கும்போது எங்களில் யாரேனும் ஒருவராவது இருக்க வேண்டும் என்று அவர்கள் நினைத்தார்கள். எனவே ரஞ்சித்துக்கு பதிலாக நான் அந்த இடத்தில் இருந்து சில விஷயங்களை செய்து கொடுத்தேன். ரஞ்சித் ரொம்பவே இளகிய மனதுக்காரர். வெளியில் எப்படி இருக்கிறாரோ அதேபோல்தான் பிக்பாஸ் வீட்டுக்குள்ளும் இருக்கிறார். அவர் அங்கு நடிக்கவே இல்லை. ஏனெனில் நிஜ வாழ்க்கையில் அவரால் நடிக்கவே முடியாது. இன்னும் சில வருடங்கள் கழித்து அவரை பிக்பாஸ் ஹவுஸ் மேட்ஸ் புரிந்துகொள்வார்கள்" என்றார்.


Click it and Unblock the Notifications