MahaNadigai: நடிப்பை கனவாகக் கொண்ட பெண்களுக்கு சூப்பர் வாய்ப்பு.. ‘மகாநடிகை 2’வில் ராதிகா சரத்குமார்
சென்னை: தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ராதிகா சரத்குமார், சமீபத்தில் வெளியான தாய்கிழவி படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். தனது அனுபவமும், தனித்துவமான நடிப்பும் மூலம் அந்த திரைப்படத்தில் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்த ராதிகா, தற்போது சின்னத்திரை ரசிகர்களுக்காக புதிய முயற்சியில் களமிறங்கியுள்ளார்.
'ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இன்று முதல் ஒளிபரப்பாக இருக்கும் மகா நடிகை சீசன் 2 நிகழ்ச்சியில் அவர் நடுவராக கலந்துக் கொள்ள இருக்கிறார். பெண்களின் நடிப்பு திறமையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி இன்று முதல் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாக உள்ளது. அதன் பின்
ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும். ஏற்கனவே முதல் சீசன் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், தற்போது இரண்டாவது சீசன் மேலும் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
மகாநடிகை: இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக மூன்று முக்கிய பிரபலங்கள் நடுவர்களாக இணைந்துள்ளனர். தேசிய விருது பெற்ற இயக்குநர் சேரன், அனுபவம் மிக்க நடிகை ராதிகா சரத்குமார் மற்றும் லப்பர் பந்து திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த நடிகை ஸ்வாதிகா ஆகியோர் போட்டியாளர்களின் நடிப்பை மதிப்பீடு செய்து வழிகாட்ட உள்ளனர். நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட பல இளம் பெண்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்த உள்ளனர். அவர்களுக்கு சரியான பயிற்சி, தன்னம்பிக்கை மற்றும் நடிப்பு நுணுக்கங்களை வழங்கும் பொறுப்பை இந்த மூன்று நடுவர்களும் ஏற்றுள்ளனர். குறிப்பாக ராதிகா போன்ற அனுபவம் மிக்க நடிகையின் ஆலோசனைகள் போட்டியாளர்களுக்கு பெரிய பலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராதிகா சரத்குமார்: சமீபத்தில் தாய்கிழவி திரைப்படத்தில் ராதிகா வெளிப்படுத்திய ஆழமான நடிப்பு பெண்களிடையே பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியதாக பாராட்டப்பட்டது. வயதான பெண்களின் வாழ்க்கை, உணர்வுகள் மற்றும் சமூகத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மிக இயல்பாக அவர் வெளிப்படுத்தியிருந்தார். அந்த திரைப்பட வெற்றிக்குப் பிறகு தற்போது இயக்குநர் கோபி நாயனார் இயக்கத்தில் உருவாகி வரும் காலனி திரைப்படத்திலும் ராதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்.
இதற்கிடையில், மீண்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடுவராக அவர் பங்கேற்பது ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே திறமையான போட்டியாளர்களாலும், சுவாரஸ்யமான சுற்றுகளாலும் கவனம் பெற்றிருந்த மகா நடிகை நிகழ்ச்சி, தற்போது ராதிகா - சேரன் - ஸ்வாதிகா என்ற வலுவான நடுவர் குழுவால் இன்னும் பிரம்மாண்டமாக மாறியுள்ளது. நடிப்பை கனவாகக் கொண்டிருக்கும் பெண்களுக்கு இந்த நிகழ்ச்சி ஒரு பெரிய வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications