»   »  சீரியல் அண்ணிகள் எல்லாமே வில்லிகள்தானா?

சீரியல் அண்ணிகள் எல்லாமே வில்லிகள்தானா?

Posted By:
Subscribe to Oneindia Tamil
TV serial Actress
நெடுந்தொடர்களில் வரும் அண்ணி கதாபாத்திரம் பெரும்பாலும் வில்லியாக சித்தரிக்கப்படுவதால் அண்ணி என்றாலே அலறும் நிலைக்கு வந்து விட்டனர் சீரியல் பார்க்கும் திருவாளர் பொது ஜனங்கள். ரீல் அண்ணிகளினால் தியாக மனப்பான்மையுடன் இருக்கும் ரியல் அண்ணிகள் பாதிக்கப்படுகின்றனர் என்பது கண்கூடாக தெரியவந்துள்ளது. இதோ சிலரின் அனுபவங்கள் உங்களுக்காக.

“அவளுக்கு நிறைய சொத்து இருக்கு, அவளை விட நான் பெரிய பணக்காரி ஆகணும். அவளுக்கு குழந்தையே உருவாக கூடாதுன்னுதான் அவ கருவறைக்கே நான் விஷம் வைச்சேன்." என்ன இது? என்று படிப்பவர்கள் புலம்புவது கேட்கிறது. இது ஆயிரம் எபிசோடுகளை தாண்டி ஓடிக்கொண்டிருக்கும் பிரபலமான ஒரு நெடுந்தொடரில் அண்ணி கதாபாத்திரம் பேசும் வசனம் மத்தியான நேரத்தில் இரண்டு மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த தொடரை பார்த்தால்தான் மத்தியான சாப்பாடே சிலருக்கு வயிற்றுக்குள் இறங்குகிறது.

இந்த தொடரில் வரும் அண்ணி கதாபாத்திரம் உலக பிரசித்தம். கணவரின் தங்கைக்கு குழந்தை பிறக்கக் கூடாது என்று விஷம் வைக்கிறாளாம். அவளின் சொத்தை அபகரிக்க லாரியை ஏற்றி கணவரின் தங்கை குடும்பத்தையே அழிக்க நினைக்கிறாளாம். இதையே ஆயிரம் எபிசோடுவரை ஓட்டிவிட்டார்கள். இந்த தொடரை விடாமல் ஆவலுடன் பார்த்துக் கொண்டிருப்பதால் அதை கணக்கெடுத்த திருடர்கள் அந்த நேரத்தில் சிலிண்டர்களை ஆட்டையை போட்டு சென்றுவிடுகின்றனராம். ( பேப்பரில் வந்த செய்தி)

இதை விட இரவு நேரத்தில் 8 மணிக்கு ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகும் சீரியலில் வரும் அண்ணியோ கூட இருந்தே குழி பறிக்கும் கதாபாத்திரம். கணவரின் மூன்று தங்கைகளின் வாழ்க்கையும் அழிந்து போகவேண்டும் என்று விரும்பும் அந்த அண்ணி தனது அம்மா, அண்ணனுடன் சேர்ந்து கணவரின் குடும்பத்தையே கதற அடிக்கிறாள். ( அப்புறம் எப்படி அண்ணி என்றாலே ஒரு நம்பிக்கை வரும்)

சித்தி என்றாலே வில்லி என்று சித்தரித்து அந்த புண்ணியத்தை திரைப்படங்கள் கட்டிக்கொண்டன என்றால் அண்ணி என்றாலே அலறவைக்கும் வில்லி என்று கதாபாத்திரங்களை சித்தரிக்கின்றன டிவி தொடர்கள். இதனால் தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான குடும்பங்களில் அண்ணி என்றாலே எதிரியை பார்ப்பது போல பார்க்கத் தொடங்கிவிட்டனர். இதனால் குடும்பத்தில் குழப்பமும் விரிசலும் ஏற்படுகின்றன என்கின்றனர் ரியல் அண்ணிகள். (குடும்ப உறவுகளில் குழப்பத்தை ஏற்படுத்தும் இதுபோன்ற சீரியல்களை தடை செய்யவேண்டும் என்று மலேசியாவில் கூட தடை போட முடிவு செய்துள்ளனர் என்பது சந்தோச சமாச்சாரம். )

அதிலும் சில விலக்குகள் உண்டு மதியம் 12.30 மணிக்கு ஒளிபரப்பாகும் ஒரு தொடரில் சற்றே வித்தியாசமான நல்லது செய்யும் அண்ணி கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டுள்ளது. தனது கணவரின் குடும்பத்திற்காக அனைத்து தியாகங்களையும் செய்யும் அண்ணியாக வருகிறார் தேவயானி. ராதிகாவும் கூட நல்ல அண்ணியாகத்தான் நடித்திருக்கிறார். ஆனால் நம்ம மக்கள்தான் நல்லது சொன்னால் அதை ஏற்றுக்கொள்ள அதிக காலம் எடுத்துக்கொள்வார்களே. அதே சமயம் தீயதை ஒருமுறை சொன்னால் உடனே அதையே பின்பற்ற ஆரம்பித்து விடுவார்கள். எனவே இயக்குநர் பெருமக்களே இனியாவது அண்ணி கதாபாத்திரத்திற்கு என்று ஒரு மரியாதையை அளியுங்கள். ஏனென்றால் அண்ணி என்பவர் மற்றொரு அம்மா. நெடுந்தொடர்களில் வரும் அண்ணிகளால் எல்லா அண்ணிகளுமே பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது என்கின்றனர் தமிழ்நாட்டில் வசிக்கும் அண்ணிகள். சற்றே கவனிப்பார்களா?.

English summary
Tamil Nadu TV serials have now become an indispensable part of our lives and it is not surprising that most of the fans cannot differentiate reality from fiction. Many actors who have played negative roles have been at the receiving end of fans wrath. so many families affected in negative characters of sister in laws.
Please Wait while comments are loading...