மொத்தமா உடைஞ்சு போனேன்.. அந்த நாளை என்னால மறக்கவே முடியல.. கண்கலங்கிய ரேஷ்மா பசுபுலேட்டி!
சென்னை: தெலுங்கு தயாரிப்பாளரான பிரசாத் பசுபுலேட்டியின் மகளான ரேஷ்மா பசுபுலேட்டி, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் தான் "புஷ்பா" என்கின்ற கதாபாத்திரத்தில் நடித்து பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார். தற்போது பிஸியான நடிகையாக இருக்கும் இவர், தனது வாழ்க்கையில் சந்தித்த வேதனைகளை பேட்டி ஒன்றில் கண்ணீர் மல்க பேசி உள்ளார்.
சன் தொலைக்காட்சியில் வாணி ராணி, வம்சம், மரகதவீணை போன்ற சீரியலில் நடித்து வந்த நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி, கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேமஸ் ஆனார். வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் தான் "புஷ்பா" கதாபாத்திரம் இவருக்கு பெயரை பெற்றுத் தந்தது போல, விமல் நடித்த விலங்கு வெப் தொடரிலும், ஒரு விவகாரமான கேரக்டரில் நடித்து பெயர் எடுத்தார்.

நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி: சினிமாவில் ஹாட்டான கேரக்டரில் நடித்த ரேஷ்மா, விஜய் தொலைக்காட்சியில் பாக்யலட்சுமி சீரியலில் ஹீரோவின் இரண்டாவது மனைவியாக, வில்லத்தனம் கலந்து கேரக்டரில் நடித்து வருகிறார். அந்த சீரியலில், இவர் நடித்து வரும் ராதிகா கதாபாத்திரம் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. டிஆர்பி ரேட்டிங்கில் இந்த சீரியல் தான் முதல் இடத்தில் உள்ளது. இந்த தொடரைத் தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சீதா ராமன் என்கிற தொடரிலும் ரேஷ்மா நடித்து வருகிறார். இதுமட்டுமில்லாமல், இன்ஸ்டாகிராமில் 1.4 மில்லியன் பாலோவர்களை வைத்து இருக்கும் ரேஷ்மா, அவ்வப்போது ரசிகர்களுடன் கலந்துரையாடுவது, வீடியோ மற்றும் போட்டோக்களை வெளியிட்டு, தனது ரசிகர்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்து இருக்கிறார்.
மிகவும் கஷ்டப்பட்டேன்: இந்நிலையில், தனியார் நிகழ்ச்சி ஒன்றில் தனது வாழ்க்கையில் சந்தித்த வேதனையை பகிர்ந்து கொண்ட ரேஷ்மா பசுபுலேட்டி, நான் அமெரிக்காவில் இருந்தேன், என் கணவர் பாக்ஸர் அதற்காக அவர் நிறைய மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொண்டு இருந்தார். அப்போது, நான் நான்கு மாத கர்ப்பமாக இருந்தேன், அதை மறந்துவிட்டு என்னை அடித்துவிட்டார். அப்போது, குழந்தை வெளியில் வந்துவிட்டது. அவர் பயத்தில் என்னை விட்டு ஓடிவிட்டார். என்ன செய்வது என்று தெரியாமல், காரை எடுத்துக்கொண்டு தனியாக நானே மருத்துவமனையில் சேர்ந்தேன். நான்கரை மாத குழந்தையாக ராகுல் பிறந்தான். அப்போதில் இருந்து 9 மாதம் வரை அவன் இங்குபெட்டரில் இருந்தான். அவனுக்காக நான் பார்க்காத மருத்துவம் இல்லை, செய்யாத செலவு இல்லை. அந்த நிலையை சமாளிக்க முடியாமல் பெற்றோருடன் இங்கே வந்துவிட்டேன்.
வேதனை: ராகுல் பிறப்பதற்கு முன்பே எனக்கு ஒரு குழந்தை பிறந்து இறந்துவிட்டது. இதனால், ராகுலும் போய்விடுவானோ என்ற பயம் எனக்குள் இருந்தது. இதனால் நான் அவனை காப்பாற்ற போராடினேன். என் முதல் குழந்தையை அனைவரும் மறந்துவிட்டார்கள். ஆனால், என்னால் அந்த நாளை இன்று வரை மறக்கவே முடியவில்லை. வாழ்க்கையில் சிரித்துக்கொண்டே இருப்பவர்களின் வாழ்க்கைக்கு பின்னால் நிச்சயம் ஒரு சோகம் இருக்கும், என் வாழ்க்கைக்கு பின்னால் பல சோகம் இருக்கிறது. ஆனால், வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அது தெரியாது அவர்களுக்கு விமர்சிக்க மட்டும் தான் தெரியும் என்று ரேஷ்மா பசுபுலேட்டி அந்த பேட்டியில் வேதனையுடன் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











