ரூ.500 கோடிக்கு அக்ரிமென்ட்: சல்மான்கானை வளைத்த டிவி நிறுவனம்
மும்பை: சல்மான் கானின் பிரபலம் அவரை 500 கோடிக்கு அக்ரிமென்ட் போட வைத்துள்ளது. சல்மான் கானின் திரைப்படங்களை 5 ஆண்டுகளுக்கு ஒளிபரப்புவதற்காக பிரபல தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று கோடி கோடியாய் கொட்டி கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வயசானாலும் அழகும் புகழும் மாறவே இல்லை என்ற வார்த்தை சல்மான் கானுக்கு மட்டுமே பொருந்தும். மெய்னே ப்யார் க்யாவில் சாக்லேட் பாய் தோற்றத்தில் அறிமுகமான சல்மான்கானை விழுந்து விழுந்து ரசித்தார்கள் இளைஞிகள்.
துடிப்போடு நடிக்கவும் செய்த சல்மான்கானுக்கு படங்கள் வரிசையாக கிடைத்தன புகழும் உயர்ந்தது. ஷாருக்கான் வருகைக்குப் பின்னர் சல்மான்கான் புகழ் சற்றே குறையத்தொடங்கியது. காதல் பிரச்சினை, கார் விபத்து, மான்வேட்டை போன்ற சர்ச்சைகளில் சிக்கி சில காலம் காணாமல் போனார்.

சரிந்த மார்க்கெட் உயர்ந்தது
சல்மான் கானின் சரிந்த மார்க்கெட்டை கடந்த 2009 ம் ஆண்டு ‘வான்டட்' திரைப்படம் மூலம் தூக்கி நிறுத்தினார் நம் ஊர் பிரபுதேவா. விஜய் நடித்த போக்கிரிதான் அங்கே ‘வான்டட்' ஆக மாறியது. ஆனாலும் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடித்தது. பாலிவுட் திரையுலகில் மீண்டும் வலுவாக கால் பதித்தார். அதன் பிறகு அவருக்கு ஏறுமுகம்தான். வெளியான அனைத்து படங்களுமே சூப்பர் ஹிட். 47 வயதான சல்மான்கான் இன்றைக்கும் பாலிவுட் உலகின் சூப்பர் ஸ்டாராகவே வலம் வருகிறார்.

டிவி ரேட்டிங்கில் உயர்ந்த சல்லு
இதனைத் தொடர்ந்து டிவியில் ‘பிக் பாஸ்' தொகுத்து வழங்கினார். அதுவும் வெற்றி பெற்றது. சமீபத்திய புள்ளி விவரங்களின்படி, சமூக ஊடகங்களிலும் அவர் மிகவும் பிரபலமானவராக விளங்கி வருகிறார். அவருடைய டி.வி நிகழ்ச்சிகள் அனைத்து வயதினரையும் கவர்ந்து சல்மான்கானை மிக உயர்ந்த இடத்தில் தூக்கி நிறுத்தியுள்ளன.

சேட்டிலைட் உலகில் சல்மான்
சல்மான் கான் நடித்த வான்டட், தபாங், ரெடி, பாடிகாட் உள்ளிட்ட படங்கள் பல கோடி ரூபாய் சேட்டிலைட் உரிமைக்கு விற்றுத் தீர்ந்துள்ளது. ஸ்டார் கோல்ட் டிவியில் ஒளிபரப்பான பாடிகார்ட் திரைப்படம்தான் இதுவரை 10.3 சதவிகிதம் டிஆர்பி ரேட்டிங்கை தக்கவைத்துள்ளது இது மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது.

ரூ. 500 கோடி ஒப்பந்தம்
இந்த நிலையில், யாருமே நம்ப முடியாத அளவுக்கு பொழுதுபோக்கு டி.வி சேனல் ஒன்று சல்மான்கானை ரூ .500 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளதாக செய்தி கசிந்துள்ளது.சல்மான் நடித்து அடுத்த ஐந்து ஆண்டுகளில் வெளியாகவிருக்கும் அனைத்து திரைப்படங்களையும் ஒளிபரப்பு செய்யும் உரிமையும் இந்த ஒப்பந்தத்தில் அடங்கும். நாட்டிலேயே முதல் முறையாக பாலிவுட் ஹீரோ ஒருவர் 500 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பது இதுதான் முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது. சல்மான்கானின் இந்த வெற்றி அவருடைய ரசிகர்களுக்கு மிகவும் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.


Click it and Unblock the Notifications











