பஸ்ஸில் பெண்களை உரசிய விவகாரம்.. கண்டித்த பிக்பாஸ்..பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார் சரவணன்!
Recommended Video
சென்னை: பஸ்ஸில் பெண்களை உரசியதை பிக்பாஸ் நிகழ்ச்சியில் பெருமையாக கூறிய சரவணன், அதற்காக நேற்று பகிரங்கமாக மன்னிப்பு கோரினார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ஹவுஸ்மேட்ஸ்களை, கடந்த சனிக்கிழமை நடிகர் கமல்ஹாசன் அகம் டிவி வழியாக சந்தித்தார். அப்போது சேரன் மீதான மீரா மிதுனின் பாலியல் குற்றச்சாட்டுக் குறித்து விசாரித்தார் கமல்.
அப்போது, இதையெல்லாம் பெரிது படுத்தினால் நீங்கள் பஸ்ஸில் பயணம் செய்ய முடியாது. சிலர் பேருந்துகளில் இடிப்பதற்கு என்றே வருவார்கள் என்று கூறினார் கமல்.

நானே உரசியிருக்கிறேன்
அப்போது சரவணன் நானே அதை பல முறை செய்திருக்கிறேன் என பெருமையாக கூறினார். இதனை கேட்ட பார்வையாளர்களும் கைதட்டினார்கள். கமல்ஹாசனும் சிரித்தார்.

சின்மயி கண்டனம்
இதற்கு சமூக வலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து பாடகி சின்மயியும் டிவிட்டரில் கண்டனம் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் பதிவிட்ட டிவிட்டில் பெண்களை பலவந்தம் செய்வதற்காக நான் பஸ்சில் பயணம் செய்தேன் என்பதை ஒளிபரப்பு செய்கின்றனர்.

கேவலமாக இருக்கிறது
இது பார்வையாளர்களுக்கும், பெண்களுக்கும் நகைச்சுவையாக தெரிகிறது. அவர் பேசியது கேவலமாக இருக்கிறது என்று சாடியிருந்தார் சின்மயி. இதுதொடர்பான செய்திகள் பல்வேறு ஊடங்களிலும் ஒளிபரப்பானது.

சரவணனை கண்டித்த பிக்பாஸ்
இந்நிலையில் நேற்றைய எபிசோடில் இதுதொடர்பாக நடிகர் சரவணனை கன்ஃபெஷன் ரூமுக்கு அழைத்தார் பிக்பாஸ். அப்போது, பெண்களை இழிவுபடுத்துவதை பிக்பாஸ் நிகழ்ச்சியும் ஏற்றுக்கொள்ளாது, இந்த சேனலும் ஏற்றுக்கொள்ளாது, ஆகையால் சரவணன் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.

நான் சொல்லவந்ததே வேறு
இதையடுத்து விளக்கம் அளித்த சரவணன், நான் சொல்லவந்ததை முழுமையாக சொல்ல முடியவில்லை. நான் அப்படியான தவறுகளை செய்திருக்கிறேன். என்னைப்போல் நீங்களும் அந்த தவறுகளை செய்யாதீர்கள், தண்டனை கிடைக்கும் என்றுதான் கூறவந்தேன்.

மன்னிப்பு கேட்டார் சரவணன்
வேறு எந்த உள்நோக்கமும் இல்லை, அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றார் சரவணன். ஒரு வழியாக தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்டுவிட்டார் சரவணன்.


Click it and Unblock the Notifications











