சினிமாவை விட சீரியல் மேல்… களமிறக்கும் நிறுவனங்கள்
தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கும் சசிகுமாரின் கம்பெனி புரடெக்சன்ஸ், லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ், ஞானவேல்ராஜாவின் ஸ்டூடியோ கிரின்ஸ் நிறுவனங்கள் டிவி சீரியல்கள் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் டிவி சேனல்களில் போட்டி அதிகமாகிவிட்டது. சமீபத்தில் தொடங்கப்பட்ட புதிய சேனலில் சினிமாவில் பிரபலமாக உள்ள நடிகைகளின் சீரியல்கள், நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன.
ஏற்கெனவே இருக்கிற சேனல்களும் புதிய சேனல்களின் அதிரடியை சமாளிக்க தற்போது செலவைப் பற்றி கவலைப்படாமல் சீரியல்களில் பிரமாண்டத்தை கூட்ட இருக்கிறது.

சினிமா கம்பெனிகள்
புதிய சேனல் சில திரைப்பட கம்பெனிகளை சீரியல் தயாரிக்கச் சொல்லி இருக்கிறது. அதேபோல பழைய சேனல்களும் சீரியல் தயாரிக்க விருப்பம் உள்ள தயாரிப்பு நிறுவனங்களை தேடி வருகிறது.

ஏவிஎம் – வாசன்
சினிமா உலகில் ஜாம்பவான்களாக திகழ்ந்த ஏ.வி.எம், வாசன் நிறுவனங்கள் சீரியல் தயாரிப்பில் இறங்கி வெற்றி பெற்றுள்ளன.

பாலச்சந்தர் – பாரதிராஜா
தமிழ்சினிமாவில் சிகர இயக்குநர்கள் பாலச்சந்தர், பாரதிராஜா போன்ற இயக்குநர்களும் பிரபல சேனல்களில் சீரியல் தயாரித்து இயக்கி வருகின்றனர்.

தேவர் பிலிம்ஸ்
சத்யஜோதி பிலிம்ஸ், சோழா கிரியேஷன்ஸ் உள்ளிட்ட பல திரைப்பட நிறுவனங்கள் சீரியல் தயாரித்து வருகிறது. தேவர் பிலிம்ஸ் நிறுவனமும் தற்போது சீரியல் தயாரிப்பில் இறங்கியுள்ளது.

ராதிகா – குஷ்பு
ஏற்கெனவே ராதிகா சரத்குமாரின் ராடன், குஷ்புவின் அவ்னி சினி மேக்கர்ஸ், குட்டிபத்மினி, போன்றோரும் சீரியல் தயாரிப்பில் பிரபலமடைந்துள்ளனர்.

சமுத்திரகனி – சசிகுமார்
பிரபல இயக்குநரும் நடிகருமான சமுத்திரகனி புதுயுகம் டிவியில் சீரியல் தயாரித்து வருகிறார். அந்த வரிசையில் சசிகுமாரின் கம்பெனி புரடெக்சன் நிறுவனம் சீரியல் தயாரிக்க பேச்சு வார்த்தை நடத்தி வருகிறதாம்.

திருப்பதி பிரதர்ஸ் – ஸ்டூடியோ கிரீன்
தற்போது பரபரப்பாக படங்களை தயாரித்து வரும் நிறுவனங்களாக லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனமும், கே.ஞானவேல்ராஜாவின் ஸ்டூடியோ கிரின்ஸ் நிறுவனமும் சீரியல் தயாரிப்பில் இறங்கியுள்ளனவாம். பிரபல சேனல்களில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
பெரிய பணபலத்துடன் வரும் புதிய சேனல்கள் ஏற்கெனவே மக்கள் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கும் சேனல்களில் இருந்து அவர்களை திசை திருப்ப அதிரடியாக சில நிகழ்ச்சிகளையும், திரைப்படத்தின் பிரமாண்டத்துக்கு இணையான சீரியல்களையும் வழங்க களம் இறங்கி உள்ளது.

நிரந்தர வருமானம்
சினிமா தயாரிப்பில் லாபமும் நஷ்டமும் மாறி மாறி வரும். ஆனால் ஒரு நிரந்தர வருமானத்துக்காக சீரியல் தயாரிக்க இந்த நிறுவனங்கள் முடிவு செய்திருக்கிறது. நஷ்டம் வருவது போல தெரிந்தால் சீரியலை நிறுத்தி விடலாம்.

டென்சன் இல்லை
சீரியலில் ஒரு நடிகரோ, நடிகையோ நடிக்க வராமல் பிரச்னை செய்தால், "அவருக்கு பதிலாக இவர்" என்று போட்டு இன்னொருவரை நடிக்க வைத்து விடலாம். தியேட்டர் கிடைக்கல, படம் பிசினசாகல என்று டென்ஷன் பண்ணிக்கொள்ள வேண்டாம். இப்படி பல வசதிகள் சீரியலில் இருப்பதால் சினிமா தயாரிப்பு நிறுவனங்கள் சீரியல் தயாரிக்க ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











