சின்னத்திரை ஸ்ரேயா - சித்துவின் புதுவீடு.. பால் பொங்க பொங்க ஒரே ஆனந்த கண்ணீர்!
சென்னை: பிரபலங்களின் வாழ்க்கை என்பது மிகவுமே சவாலானதாக மாறி வருகிறது. அதுவும் தமிழ்நாட்டில் பிரபலங்கள் என்றாலே சொகுசான வாழ்க்கை வாழ்பவர்கள் என்ற மாயத்தோற்றம் ரசிகர்கள் மத்தியில் உருவாக்கப்பட்டு விடுகிறது. ரசிகர்களும் பிரபலங்கள் என்றாலே பண பிரச்சனைகள் இல்லாத நபர்கள், சொகுசாக வாழக்கூடியவர்கள் என்று எல்லாம் கற்பனை செய்து கொள்கிறார்கள். ஆனால் எல்லா பிரபலங்களுக்கும் பெரும் நெருக்கடிகள் இருக்கிறது. அதைக் கடந்து தான் அவர்கள் தங்களது கனவுகளை அடைகிறார்கள்.
வீடு என்பது அனைவருக்குமே இன்றியமையாத ஒன்று. இப்படி இருக்கும்போது சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை உள்ள பிரபலங்கள் அனைவருக்குமே அவர்களின் கனவு இல்லத்தை கட்டி எழுப்புவது என்பது, கிட்டத்தட்ட ரத்தக் கண்ணீர் வடிப்பதற்கு சமமான ஒன்றுதான். சின்னத்திரை உலகமோ, வெள்ளித்திரை உலகமோ, ஒரு அடிப்படையான மரியாதையைப் பெறுவதற்கு கூட பிரபலங்கள் தங்களை கொஞ்சம் காஸ்ட்லியானவர்களாக காட்டிக் கொள்ள வேண்டிய நிர்பந்தம் என்பது பிரபலங்கள் மீது திணிக்க பட்டுவிடுகிறது.
தங்களை காஸ்ட்லியானவர்களாக காட்டிக் கொள்வதற்காக தங்களின் சம்பாத்தியத்தில் பெரும் பகுதியை செலவிட வேண்டி உள்ளது. இப்படி இருக்கும்போது, பிரபலங்கள் தங்களது கனவு வீட்டை கட்டி எழுப்புவது என்பதோ, அல்லது வாங்குவது என்பதுவுமே பெரும் பாடுதான். அண்மையில் கூட நடிகர் ரவி மோகனின் வீடு ஜப்தி செய்யப்பட்டது. நடிகை ஆண்ட்ரியா தனது வீட்டை அடமானம் வைத்து மாஸ்க் படத்தை இணைந்து தயாரித்துள்ளதாக அறிவித்தார்.

சித்து - ஸ்ரேயா அஞ்சன்: இப்படி இருக்கும்போது சின்னத்திரை பிரபலங்களான நடிகர் சித்து மற்றும் நடிகை ஸ்ரேயா அஞ்சன் தம்பதியர் தங்களது புதுமனை புகுவிழாவை வெகு சிறப்பாக நடத்தி உள்ளார்கள். அதுவும் புது வீட்டில் பால் பொங்கி வரும்போது, மிகவும் எமோஷனலாகி கண்ணீர் விட்டு அழுதது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில், இவர்கள் இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தங்களது புது வீடு குறித்தும் அதற்காக அவர்கள் எப்படி எல்லாம் உழைத்து இந்தக் கனவை நனவாக்கினார்கள் என்பது குறித்தும் பகிர்ந்துள்ளார்கள்.
எமோஷ்னல் போஸ்ட்: அதாவது, " எங்கள் இதயங்கள் இப்போது முழுமையாக நிரம்பியிருக்கிறது, சில உணர்வுகளுக்கு வார்த்தைகள் போதாது என்பர்களே, அது போல தான் இதுவும். ஆனால் இதயம் எல்லாவற்றையும் ஆழமாக புரிந்து கொள்கிறது. இந்தத் தருணம் ஏதோ, எளிதாக வரவில்லை, ஆனால் அது மிக அழகாக வந்திருக்கிறது. வாழ்க்கை எங்களை எத்தனையோ முறை சோதித்தது, ஆனால் நாங்கள் இருவரும் ஒரே நம்பிக்கையை இறுகப் பிடித்துக்கொண்டோம். அபப்டி இருக்கும்போது கண்ட கனவுதான் எங்களுக்கு என்று ஒரு வீடு.
கனவு: அதற்காக உழைத்தோம், அதற்காக இரவு பகலாக வேண்டிக் கொண்டே இருந்தோம். இன்று நாங்கள் அந்தக் கனவின் நடுவே நின்று கொண்டிருக்கிறோம் இந்த வீட்டின் ஒவ்வொரு செங்கல்லும், ஒவ்வொரு மூலையும் எங்கள் பயணத்தின் கதையைச் சொல்கிறது. சில கனவுகள் தாமதமாகத்தான் நிறைவேறும், சில பாதைகள் உன் பொறுமையை சோதிக்கும், ஆனால் சரியான மனிதர் பக்கத்தில் இருந்தால் சாத்திய மற்றவையும் மெல்ல சாத்தியமாகும். இது எங்கள் முதல் வீடு, எங்கள் ஒவ்வொரு பிரார்த்தனையும், ஒவ்வொரு போராட்டமும், நாங்கள் எடுத்து வைத்த ஒவ்வொரு சிறிய அடியும் இன்று எங்களை இங்கே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. இப்போது நாங்கள் இதுவரை இல்லாத அளவு மகிழ்ச்சியாக சிரிக்கிறோம். ஏனென்றால், நாங்கள் அதை ஒன்றாக சாதித்து விட்டோம். இறைவனுக்கு நன்றி, வாழ்க்கைக்கு நன்றி. இப்படிக்கு சித்து - ஸ்ரேயா" என்று பதிவிட்டுள்ளார்கள். இவர்களின் இந்த பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











