ஆசை ஆசையாய் நடித்த சினிமா, சீரியல்கள் கைகொடுக்கலையே: சந்தோஷி
டிவியில் ஒளிபரப்பாகும் சில சீரியல்கள் வருடக்கணக்கில் ஒளிபரப்பாகும். சில சீரியல்கள் வந்த வேகத்தில் முடிக்கப்பட்டு விடும். ஜீ தமிழ் டிவியில் பரபரப்பான விளம்பரத்தோடு தொடங்கப்பட்ட பாவமன்னிப்பு தொடர் சட்டென்று முடிந்து போனதில் வருத்தப்படுகிறார் அதில் ஹீரோயினாக நடித்த சந்தோஷி.
பத்து வருடங்களுக்கு மேலாக சின்னத்திரை, பெரிய திரையில் நடித்து வரும் சந்தோஷி, தற்போது இளவரசி தொடரில் ஹீரோயினாகவும், 63 நாயன்மார்கள் தொடரில் காரைக்காலம்மையாராகவும் நடித்து வருகிறார்.
இளவரசி தொடர் சன் டிவியில் ஆயிரம் எபிசோடுகளுக்கு மேல் ஒளிபரப்பாகிவருகிறது. அதுவும் இன்னும் சில வாரங்களில் முடியப்போகிறதாம். சின்னத்திரையில் இருந்து சினிமாவிற்குப் போய் மீண்டும் சின்னத்திரைக்கு வந்துள்ளார். ஏற்றமும், ஏமாற்றமும் நிறைந்ததுதான் வாழ்க்கை என்று கூறும் சந்தோஷி இனிமேல் சினிமாவில் நடிக்க மாட்டேன் என்கிறார்.

எட்டு வயதில் இருந்து
அம்மா பூர்ணிமா முன்னாள் டிவி நடிகை. நான் எட்டு வயதில் இருந்து சீரியலில் நடிச்சுக்கிட்டு இருக்கேன். 13 வயதில் வாழ்க்கை சீரியலில் நடித்தது இன்னமும் என்னை அடையாளப்படுத்துகிறது.

சீரியல் பயணம்
அம்மு தொடரில் ஹீரோயின் ரேஞ்சுக்கு அறிமுகமானேன் அப்போது எனக்கு 18 வயசுதான். அதற்கு பிறகு நிறைய தொடர்களில் நடித்தேன்.

ராதிகாவின் சீரியல்கள்
ராதிகா மேடத்தின் அத்தனை தொடர்களிலும் நடித்தேன். அரசி' தொடரை பொறுத்தவரை பத்து சீரியல்ல நான் நடிப்பதை ஒரே சீரியல்ல நடித்தேன். அந்த எல்லா கேரக்டருமே ரொம்ப சேலஞ்சிங்கா இருந்தது.

ராதிகாவின் துணிச்சல்
ராதிகாவைப் பார்க்கும்போது எனக்கு பிரமிப்பாக இருக்கும் அவ்வளவு துணிச்சலான, திறமையானவங்களோட பக்கத்தில் இருந்தது பார்த்தது ரொம்ப சந்தோஷமா இருந்தது.

சினிமாவில் தோல்வி
சினிமா ஆசையால் ரொம்ப எதிர்பார்ப்போட பாபா படத்துல நடித்தேன். முதல் படமே சூப்பர் ஸ்டார் படம் சினிமாவில் நல்ல இடம் கிடைக்கும்னு நினைச்சேன். படம் தோல்வி அடைந்ததால் சினிமா வாய்ப்பும் இல்லாமல் சீரியல் வாய்ப்பும் இல்லாமல் தவிச்சேன்.

தங்கை வேடங்கள்
இடையில் உன்னை சரணடைந்தேன், ஆசை ஆசையாய் படங்களில் தங்கை கேரக்டரில் நடிச்சேன். அதிலிருந்து தங்கை கேரக்டர்களாக குவிந்ததால் போரடித்து சினிமாவிலிருந்து ஒதுங்கினேன்.

இளவரசியில் பிரேக்
பெரிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் ராதிகா மேடம் கைகொடுத்தாங்க. இளவரசி தொடர் மீண்டும் லைஃப் கொடுத்தது. அதில் ஜோடியாக நடிச்சவரே நிஜ வாழ்க்கையிலும் ஜோடியானார்.

ஸ்ரீகர் ஜோடியானார்
என்னையும், ஸ்ரீகரையும் சேர்த்து வைத்த சீரியல் இளவரசி, அதுவும் இன்னும் சில நாட்களில் முடியப்போகிறது வருத்தமாக இருக்கிறது.

காரைக்கால் அம்மையார்
இப்போது 63 நாயன்மார்கள் தொடரில் காரைக்காலம்மையராக நடிக்கிறேன். மனசுக்கு சந்தோஷமாக இருக்கிறது. ஏற்றமும், ஏமாற்றமும் நிறைஞ்சதுதான் வாழ்க்கை இரண்டையும் ஏத்துக்கிட்டு வாழ பழகணும் இது என்னோட அனுபவம் என்று தத்துவமாக பேசுகிறார் சந்தோஷி.


Click it and Unblock the Notifications











