Bigg Boss 7: பாதிக்கப்பட்டது பிரதீப் தான்.. எல்லாமே டிஆர்பிக்காக தான்.. ஆதங்கப்பட்ட சினேகன்!
சென்னை: வலிமையான போட்டியாளராக கருதப்பட்ட பிரதீப் ஆண்டனி வெளியேற்றப்பட்டது வருத்தமளிப்பதாக சினேகன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தொடங்கிய முதல் வாரத்தில் இருந்தே அனல்பறக்கும் விவாதங்கள் மற்றும் சண்டைகள் நடைபெற்று வருகிறது.
இந்த சீசனில் மக்கள் மத்தியில் அதிக செல்வாக்கு மிக்க போட்டியாளராக பிரதீப் இருந்து வந்தார். அவருக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றியது தான் தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது.

பிரதீப்பிற்கு ரெட் கார்டு: பிக் பாஸ் சீசனில், இதற்கு முன் மகத் அடிதடியில் இறங்கியதற்காக ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார். அதையடுத்து தற்போது பிரதீப், பெண்களிடம் கெட்டவார்த்தையில் பேசுகிறார், பெண்களை முகம் சுளிக்கும் வகையில் பேசியதற்காகவும், அவரால் அந்த வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பாதுகாப்பில்லை எனக்கூறியும் அவருக்கு எதிராக பல பெண்கள் உரிமைக்குரல் கொடுத்ததை அடுத்து அவர் அதிரடியாக ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார்.
தவறான முடிவு: பிரதீப்பை இப்படி திடீரென வெளியே அனுப்பி உள்ளது அவரது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. விசித்ரா சொன்னது போல் அவரை எச்சரித்து, அவருக்கு ஒரு சான்ஸ் கொடுத்திருக்க வேண்டும் என பல ரசிகர்கள் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர். பிரதீப்புக்கு எதிராக கமல் எடுத்த இந்த முடிவு முற்றிலும் தவறானது என்று பலர் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
சினேகன் பேட்டி: இதுகுறித்து பேட்டி அளித்துள்ள சினேகன், இந்த நிகழ்ச்சியை நான் 24 மணி நேரமும் பார்த்தது இல்லை. இதனால், யார் செய்தது சரி… யார் செய்தது தவறு என்று எனக்கு தெரியாது. அதே போல அவர் தவறாக பேசிவிட்டார் என்ற குற்றம்சாட்டப்படுகிறது. இதற்கு வாய்ப்பு இருக்கு, ஏன் என்றால், ஒரு விளையாட்டில் ஒரு மனிதன் வார்த்தை தடுமாறுவது இயல்பான ஒன்று தான். ஆனால், பிரதீப் திட்டமிட்டு பேசினார் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
வருத்தமாக உள்ளது: பிரதீப் விளையாடி இருப்பதை நான் பார்த்து இருக்கிறேன். அவர், யார் திட்டினாலும், அதை எதார்த்தமாக கடந்து போகக்கூடிய மனிதர். ஆனால், அனைவரும் சேர்த்து அவரை தனித்து ஒதுக்கியதைப் பார்த்து நான் மிகவும் வருத்தப்பட்டேன். பாதிக்கப்பட்டவனின் பக்கத்தில் இருப்பது தான் அறம். தூக்கு தண்டனை கைதிக்கு கூட கடைசி ஆசை என்ன என்று கேட்கப்படுகிறது. அவரிடம் அதுகூட கேட்காமல் வெளியேற்றப்பட்டது வருத்தமளிக்கிறது என்று சினேகன் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











