For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரியாலிட்டி ஷோவா? ரீல் ஷோவா?: டிவிகளின் கட்டப்பஞ்சாயத்து-சில சந்தேகங்கள்!

By Mayura Akilan
|

Talk Show
இப்பொழுதெல்லாம் டாக் ஷோ, ரியாலிட்டி ஷோ என்ற பெயரில் தொலைக்காட்சி நிறுவனங்கள் கட்டப்பஞ்சாயத்து பண்ணும் வேலையை ஆரம்பித்துவிட்டன. நிகழ்ச்சிக்கு சுவாரஸ்யத்தை கூட்டுகிறேன். டிஆர்பி ரேட்டை அதிகரிக்கிறேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு திரியும் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் தங்கள் நிகழ்ச்சியின் வெற்றிக்காக எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பது கண்கூடாக தெரியவந்துள்ளது.

விஜய் டிவியில் 'கதையல்ல நிஜம்' நிகழ்ச்சியில் லட்சுமி ஆரம்பித்து வைத்த இந்த குடும்ப கட்டப்பஞ்சாயத்து இன்றைக்கு ஜீ, பாலிமர், கேப்டன் என தொடர்கிறது. இந்த கட்டப்பஞ்சாயத்து நிகழ்ச்சியை நடத்துபவர்கள் எல்லாம் மிகப்பெரிய ஆபத்பாந்தவன்கள் போலவும், ரட்சகர்கள் போலவும் பேசுவதுதான் நிகழ்ச்சியின் ஹைலைட்.

கதையல்ல நிஜம் நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்களுடன் லட்சுமியும் அழுது பிழிந்ததால் அந்த நிகழ்ச்சி வரவேற்பின்றி இழுத்து மூடப்பட்டது. அதன் அட்ட காப்பியாக கள்ளக்காதல், காதல் திருமணம், கணவன் மனைவி தகராறு என அடுத்தவர்களின் அந்தரங்கத்தை அரங்கத்தில் ஏற்றி அம்பலப்படுத்தும் நிகழ்ச்சியாக மாறிவருகின்றன இந்த நிகழ்ச்சிகள்.

நிகழ்ச்சி நடத்தும் 'வணக்கம்' புகழ் நிர்மலா பெரியசாமி கொஞ்சம் தைரியமான பெண்மணிதான். படப்பிடிப்பு நடக்கும் போது கணவன் மனைவி, கள்ளக்காதலி என மூவரையும் உட்கார வைத்து பிரித்து மேய்கிறார். இவரின் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஏமாற்றி அழைத்து செல்லப்பட்ட ஓய்வு பெற்ற மத்திய அரசு அலுவலரான மதுரை அய்யர்பங்களாவை சேர்ந்த பெர்னாட்ஷான் என்பவர் தனது நிகழ்ச்சியை ஒளிபரப்பக்கூடாது என்று கடந்த பிப்ரவரி மாதம் மதுரை ஐகோர்ட்டில் தடை வாங்கினார்.

குடும்பத்தில் உள்ள பிரச்சினைகளுக்கு சமரச தீர்வு ஏற்படுத்துகிறோம் என்ற பெயரில் பொது இடத்தில் அடுத்தவரின் குடும்ப வாழ்க்கையை கேவலப்படுத்துகின்றனர். எனவே ஜீ டி.வியில் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்ப தடை விதிக்க மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை செயலாளருக்கு உத்தரவிட வேண்டும். மேலும் ஏற்கனவே படம் பிடிக்கப்பட்டுள்ள எனது குடும்ப வாழ்க்கை குறித்த நிகழ்ச்சியை ஒளிபரப்பவும் தடை விதிக்க வேண்டும் என்றும் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். இதனை ஏற்றுக்கொண்டு மதுரை ஐகோர்ட் குறிப்பிட்ட நிகழ்ச்சியை ஜீ டிவியில் ஒளிபரப்ப தடை விதித்தது.

மேலும் இந்த வழக்கு சம்பந்தமாக மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை செயலாளர், ஜீ டி.வி பொது மேலாளர் ஆகியோர் பதில் அளிக்க நோட்டீசு அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

அதேபோல் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் காதல் திருமணம் செய்து கொண்டவர்களையும், அவர்களின் பெற்றோர்களையும் வரவழைத்து களேபரம் செய்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை போலீசார் வந்து அழைத்து சென்றது பெரிய நிகழ்ச்சியாகிப் போனது. ஆர்பாட்டம் எல்லாம் நடத்தி நிகழ்ச்சிக்கு கூடுதல் வலு சேர்த்தனர்.

இப்போது நான்கு ஆண்டுகளுக்கு முன் கொலை செய்த தந்தையை காட்டிக்கொடுத்த மகள் மூலம் நிகழ்ச்சியின் பரபரப்பு டாப் கியரில் எகிறியிருக்கிறது. இப்பொழுது இந்த நிகழ்ச்சியின் மூலம் கொலையை அம்பலப்படுத்திய கொலைகாரனின் மகளும், மனைவியும் முன்பே போலீசாரிடம் இதை கூறாமல் விட்டது ஏன் என்பதே அனைவரின் கேள்வி.

அதேபோல் நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்து அதன் மூலம் பரபரப்பு தேடிய ஜீ தொலைக்காட்சி நிறுவனம் படப்பதிவின் போதே உண்மை தெரிந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் போலீசில் தகவல் தெரிவிக்காமல் விட்டது ஏன் என்பதும் அனைவரின் கேள்வியாக உள்ளது. அப்படி செய்திருந்தால் குற்றவாளியாக கருதப்படும் முருகனை ஈசியாக கைது செய்திருக்கலாமே என்ற கேள்வியும் எழுகிறது.

இந்த நிகழ்ச்சியின் மூலம் பலரும் தெரிந்து கொண்டது என்னவெனில் பல மாதங்களாக பிரிந்து வாழும் ஜோடியைக் கூட்டி வந்து, ஸ்டுடியோவில் சண்டைபோட வைத்து, எபிசோடு முடியும் போது ரெண்டு பேருக்கும் ஒத்து வரலை பிரிஞ்சுடறது நல்லதுன்னு சொல்லிடறாங்க!. அதான் ஏற்கனவே அவங்க பிரிஞ்சுதானே இருக்காங்க? அப்புறம் நடுவுல இவங்க என்ன பஞ்சாயத்து என்று நேயர்கள் கேட்பது காதில் விழுகிறது.

ரியாலிட்டி என்ற பெயரில் இவர்கள் நடத்தும் அக்கப்போர் கட்டப்பஞ்சாயத்து நிகழ்ச்சிகளை தடை செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

English summary
TV reality shows are becoming very popular nowadays. But many people blame that these programmes are not aimed at the peace in the society but to boost up their TRP ratings.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more