உப்பு கல்லை வைரமாக்கிட்டீங்க.. அப்பா ஹேப்பி.. சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னர் ஜான் சொன்னது என்ன?
சென்னை: கள்ளக்குறிச்சியில் சென்னைக்கு வந்து சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு கிராண்ட் ஃபினாலே வரை வந்து டைட்டில் வின்னராகவே மாறியுள்ளார் ஜான் ஜெரோம். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரம்மாண்ட குரலுக்கான தேடல் நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 10வது சீசன் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியுடன் நிறைவடைந்தது.
சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் இன்று மாலை 3 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. விஜய் டிவி மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் நேரலை ஒளிபரப்பாக சூப்பர் சிங்கர் சீசன் 10 ஒளிபரப்பானது. டாப் 5 போட்டியாளர்களில் யார் வெற்றிப் பெறுவார்கள் என ஆளுக்கொரு கணிப்புகளை பதிவிட ஆரம்பித்தனர்.

விக்னேஷ் தான் அதிகம் பிஆர் புரமோஷன் செய்து வருகிறார். அவருக்குத்தான் டைட்டில் கொடுப்பார்கள் என்றெல்லாம் அதிக பேச்சுக்கள் சோஷியல் மீடியாவில் கிளம்பின. இல்லை இல்லை இந்த முறை டைட்டில் பெண் போட்டியாளருக்குத்தான் எனக் கூறினார்கள். கடைசியாக ஜான் ஜெரோம் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். உடனடியாக இறுதியாக மீண்டும் ஒருமுறை கோல்டன் ஷவரில் நனைந்து விட்டார்.
ரன்னர் அப்: ஜான் ஜெரோம், ஜீவிதா, ஸ்ரீனிதி, வைஷ்ணவி மற்றும் விக்னேஷ் என 5 போட்டியாளர்களை மேடைக்கு கொண்டு வந்த நிலையில், நிகழ்ச்சியின் முன்னணி ஸ்பான்ஸர்கள் மேடைக்கு ஏறினர். 2வது ரன்னர் அப் வைஷ்ணவி என முதலில் அறிவிக்கப்பட்டதும் அரங்கமே அதிர்ந்தது. 2வது ரன்னர் அப் என்றாலும் உங்களுக்கும் பரிசு இருக்கு என 5 லட்சம் ரூபாய் பரிசுக்கான காசோலை வழங்கப்பட்டது. அடுத்ததாக ஜீவிதா ரன்னர் அப்பாக அறிவிக்கப்பட்டார். அவருக்கு 10 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
டைட்டில் வின்னர் ஜான் ஜெரோம்: ஆரம்பமே 2 பெண் போட்டியாளர்கள் ரன்னர் அப் மற்றும் 2வது ரன்னர் அப் ஆன நிலையில், டைட்டில் வின்னர் விக்னேஷா அல்லது ஜானா என ரசிகர்கள் முதல் அங்கிருந்தவர்கள் வரை கணிக்க ஆரம்பித்தனர். ஸ்ரீனிதிக்கு வாய்ப்பு குறைவு தான் என கணிக்கப்பட்டது. அதே போல கடைசியில் ஜான் ஜெரோம் டைட்டில் வின்னர் என அறிவித்தனர். அவருக்கு 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடு பரிசாக வழங்கப்பட்டது. அதற்கான பெரிய சாவி அட்டையை கையில் கொடுத்து டைட்டில் வின்னர் ஷீல்டையும் வழங்கினர்.
அப்பா எமோஷனல்: உப்புக் கல்லையும் வைரக் கல்லாக மாற்றி விட்டீர்கள் இதற்காக விஜய் டிவிக்கும் சூப்பர் சிங்கர் ஷோவின் நடுவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என் பையன் இந்தளவுக்கு பாடி இப்படியொரு இடத்தை பிடிப்பான்னு நினைத்து பார்க்கவில்லை. அவனுடைய கடுமையான முயற்சியில் இந்த வெற்றியை பெற்றுள்ளார். இறைவனுக்கு நன்றி என கையெடுத்துக் கும்பிட்டு உருகிப் போய் விட்டார்.
ஜான் ஜெரோம் உருக்கம்: நான் யாருன்னே எங்க ஊர்ல இருக்குற யாருக்கும் தெரியாது. ஆனால், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு வந்த பிறகு எங்க ஊர்ல பல பேருக்கு என்ன தெரிய வச்சிடுச்சு. ஆரம்பத்தில் இருந்து எப்போது தப்பு பண்ணாலும் இந்த இசை குழுவில் இருப்பவர்கள் எனக்கு ஆதரவு கொடுத்து நிறைய விஷயங்களை கத்துக் கொடுத்தாங்க, மனோ சார், சுஜாதா மேம், அனுராதா மேம், ஷான் ரோல்டன் சார் எல்லாம் ஒவ்வொரு முறையும் நல்லா படுறடா உன்னால முடியும் உன்னால முடியும் என கொடுத்த ஊக்கம் தான் இந்த வெற்றிக்கு காரணம். அனைவருக்கும் நன்றி, எனக்கு ஓட்டுப் போட்ட அனைத்து மக்களுக்கும் என்ன சொல்றதுன்னே தெரியல, இதே போல உங்களுக்காக கடைசி வரை பாடிக் கொண்டே இருப்பேன். அதுதான் என்னோட ஆசை என ஜான் ஜெரோம் பேசி அனைவரையும் கண் கலங்க வைத்து விட்டார்.


Click it and Unblock the Notifications











