வாடகைத்தாய் கலாச்சாரத்தை அசிங்கப்படுத்தும் டிவி சீரியல்
டிவி சீரியல்களில் ஹீரோயின்களின் திருமணம், குழந்தை பிறப்பு ஆகியவைகளை தடுக்க வில்லிகள் செய்யும் செயல்கள் ஏராளம்.
வாடகைத்தாய் பற்றி அதிகம் பேசிய அத்திப்பூக்கள் தொடர் இல்லத்தரசிகளிடம் அமோக ஆதரவைப் பெற்றது.
இன்றைக்கு சன்டிவியில் முந்தானை முடிச்சு தொடரில் வாடகைத்தாய் என்பவரையே அசிங்கப்படுத்தும் நோக்கத்துடன் ஒளிபரப்பப்படுகிறது என்கின்றனர் நேயர்கள்.
சகலவிதமான முட்டாள்தனங்களுடன் புனைப்பட்ட கதைதான் முந்தானைமுடிச்சு என்கின்றனர் இந்த தொடரினை ஆயிரம் எபிசோடுகளுக்கு மேலாக பார்ப்பவர்கள்.

கணவனுக்கு இரண்டாம் திருமணம்
தனக்கு நோய் ஏற்பட்டுள்ளதை அறிந்து வீட்டு வேலைக்கார பெண் தேனுவை தனது கணவன் முத்துவுக்கு இரண்டாம் திருமணம் செய்து வைக்கிறாள் கவிதா.

வில்லியான கவிதா
திடீரென்று நோய் குணமான உடன் கணவனின் இரண்டாம் மனைவியை எதிரியாக நினைத்து வில்லத்தனம் செய்கிறார்.

மாமன் மகனுடன் திருமணம்
இதையறிந்த தேனு, தன்னை விரும்பிய மாமன் மகனை இரண்டாவதாக திருமணம் செய்துகொள்கிறாள்.

சந்தேகப்படும் கணவன்
தன்னை திருமணம் செய்து கொண்டாலும், முத்து உடன் மனைவிக்கு தொடர்பு இருக்கிறது என்று சந்தேகப்படுகிறான் தேனுவின் இரண்டாவது கணவன். இதனால் முத்துவை கொலை செய்ய முயற்சிக்க அதில் கவிதாவின் கர்ப்பப்பை பாதிக்கப்படுகிறது. இதில் தேனுவின் கணவன் சிறை செல்கிறான்.

வாடகைத்தாய்
கவிதாவினால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என்பதை அறிந்து தேனு வாடகைத்தாயாக வருகிறாள். ஆனால் அதற்கும் சந்தேகத்தை கிளப்பி முத்துவிற்கும் தேனுவின் கணவனுக்கும் இடையை சண்டையை மூட்டிவிடுகிறாள் வில்லி பிரேமா.

கொலைப்பழி
தேனுவின் கணவனை கொலை செய்து அந்தப்பழியை முத்துவின் மீது போட்டு சிறைக்கு அனுப்புகிறாள் பிரேமா. முத்துவின் குழந்தைதான் தேனுவின் வயிற்றில் வளர்கிறது என்றும் தவறான தொடர்பில் ஏற்பட்டதுதான் என்றும் அவளது மாமனாரையும் நம்ப வைக்கிறாள் பிரேமா.

தலை சுத்துதா?
இப்படி போகும் இந்த சீரியலின் 4 எபிசோடு கதைச்சுருக்கத்தை படிப்பவர்களுக்கே தலை சுற்றினால் ஆயிரம் எபிசோடுகளுக்கு மேல் அசராமல் பார்த்துக்கொண்டிருக்கும் வாசகர்களின் மனதைரியத்தைப் பாராட்டித்தான் ஆகவேண்டும். இதுபோன்ற சீரியல்களைத் தேடி பிடித்து ஒளிபரப்பும் சேனல்களை என்ன சொல்வது.

விலங்கு சேனல்களைப் பாருங்க
ஏன் இப்படி கதைகளை ஒளிபரப்புகிறீர்கள் என்று கேட்டால் எல்லாம் டிஆர்பிக்காகத்தான் என்கின்றனர். சீரியல் பிடிக்கலையா?சேனல் மாத்திக்கலாம். ஆனால் எல்லா சேனலிலும் இதேபோன்ற சீரியலை ஒளிபரப்பினால்? வேறு வழியே இல்லை. ராஜநாகத்தையும், பறவைகளின் காதலையும் ஒளிபரப்பும் சேனல்களைப் பார்க்க வேண்டியதுதான்.


Click it and Unblock the Notifications











