பார்த்தாலே பதறுதே.. ஒரு காலை இழந்த லொள்ளு சபா உதயா.. வீட்டுக்குச் சென்று நலம் விசாரித்த தங்கதுரை!
சென்னை: தமிழ் சினிமாவில் இருந்த பல காமெடி நடிகர்கள் கொரோனாவுக்குப் பிறகு தொடர்ந்து உயிரிழந்தது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. ஹீரோக்களை போல காமெடி நடிகர்கள் எல்லாம் தங்கள் உடல்நலனில் பெரிதாக அக்கறை செலுத்தாததே அதற்கு காரணம் என்கின்றனர். விவேக், மயில்சாமி, மனோபாலா, போண்டா மணி, லொள்ளு சபா சேசு உள்ளிட்ட பலர் உயிரிழந்து விட்டனர்.
மாரடைப்பு, குடிப்பழக்கத்தால் உடல்நலக்குறைவு என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணங்கள் கூறப்பட்டன. லொள்ளு சபா சேசுவை தொடர்ந்து உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்த லொள்ளு சபா உதயா சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது அறுவை சிகிச்சை மூலம் அவரது ஒரு காலை அப்படியே துண்டாக வெட்டி எடுத்துள்ளனர்.

அவரை நேரில் சந்தித்து சக காமெடி நடிகர்கள் அவருக்கு உதவிகளை செய்தும் ஆறுதல்கள் கூறியும் வருகின்றனர். முன்னணி ஹீரோக்கள் பெரிதாக உதவ முன் வராத நிலையில், பழைய ஜோக் தங்கதுரை நேரில் சந்தித்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தப்பித்த ரோபோ சங்கர்: உடலில் சர்க்கரை அளவு அதிகரித்து விட்டால் அதை சரியாக கவனித்துக் கொள்ள வேண்டும். ரோபோ சங்கருக்கு உடல் எடை திடீரென குறைந்ததுமே பலரும் அதிர்ச்சியடைந்தனர். அவருக்கு என்ன ஆனதோ என பதறினர். ஆனால், அவரது குடும்பத்தினர் சரியான நேரத்தில் கவனித்துக் கொண்ட நிலையில், தனது மகள் இந்திரஜாவின் திருமணத்தை ஜாம் ஜாம் என நடத்தி முடித்தார். மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.
ஒரு காலே போய்விட்டது: லொள்ளு சபா மூலம் பிரபலமானவர் தான் உதயா. சந்தானம் நடிப்பில் வெளியான சில படங்களிலும் இவர் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார். சர்க்கரை நோய் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த இவர், சர்க்கரை அளவு அதிகரித்த நிலையில், தற்போது தனது ஒரு காலையே அறுவை சிகிச்சை மூலம் இழக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஒரு காலை இழந்து அவர் வாழ்ந்து வரும் நிலையில், விஜய் டிவி பிரபலங்கள் மற்றும் சக நடிகர்கள் அவரை சந்தித்து வருகின்றனர்.
தங்கதுரை வெளியிட்ட போட்டோ: ஒரு கால் இல்லாமல் ரசிகர்களை பல ஆண்டுகளாக சிரிக்க வைக்க நடித்து வந்த ஒரு நடிகரை பார்க்கவே நெஞ்சம் பதறுகிறது. "லொள்ளுசபா மற்றும் திரைப்பட நகைச்சுவை நடிகர் அண்ணன் உதயா அவர்கள் சர்க்கரை வியாதியால் ஒரு கால் அறுவைசிகிச்சை மூலம் அகற்றப்பட்டு, தற்போது சிகிச்சை எடுத்து வருகிறார் இன்று அவரது வீட்டில் அவரை சந்தித்து நலம் விசாரித்து முடிந்த உதவியை செய்தேன். மேலும் உதவி செய்ய விரும்பும் நண்பர்கள் தொடர்புக்கு 7010734646 Gpay" என மற்றவர்களும் அவருக்கு உதவி செய்திட தங்கதுரை வழிவகை செய்துள்ளார்.
நலிவடைந்த கலைஞர்கள்: சினிமாவில் சான்ஸ் கிடைத்துவிட்டாலே கோடீஸ்வரர்கள் ஆகிவிடலாம் என்பதெல்லாம் வெறும் மாயை மட்டும் தான். முன்னணி நடிகர்களை தவிர மற்ற துணை நடிகர்கள் எல்லாம் இப்படி தினமும் பலவிதமான போராட்டங்களில் அல்லாடிக் கொண்டு தான் இருக்கின்றனர். ஹீரோக்களுக்கும் ஹீரோயின்களுக்கு மட்டும் தான் கோடிகளில் சம்பளம் மற்றவர்களுக்கான ஊதியம் எல்லாம் ரொம்ப ரொம்ப குறைவு. சிவகார்த்திகேயனின் சம்பளத்தையே பாதி பிடுங்கிக் கொள்ளும் சில தயாரிப்பாளர்கள், இவர்களை போன்றவர்களுக்கு எல்லாம் வாய்ப்பு மட்டுமே கொடுப்பார்கள் என்றும் சம்பளமே தர மாட்டார்கள் என்றும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











