எதிர்நீச்சல் 2 கதை என்ன தெரியுமா? சீரியலில் இணையும் வில்லி நடிகை.. அப்போ தரமான சம்பவம் இருக்கு!
சென்னை: இல்லத்தரசிகளுக்கு மிகவும் பிடித்தமான சீரியலாக இருந்தது திருச்செல்வத்தின் எதிர்நீச்சல் சீரியல். இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த இந்த சீரியல் டிஆர்பியில் டாப்பில் இருந்த போது திடீரென முடிக்கப்பட்டது. இதனால், மனம் நொந்துப்போன ரசிகர்களுக்கு ஆறுதலாக எதிர்நீச்சல் சீரியல் 2 திங்கள் முதல் சனிவரை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாக போக உள்ளது. இதன் கதைக்களம் எப்படி இருக்கும் என்று கதையின் சுருக்கத்தை திருச்செல்வம் கூறியுள்ளார்.
இயக்குநர் திருசெல்வம் 2002ம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் மெட்டி ஒலி சீரியலில், இணை இயக்குனராக பணியாற்றினார். அதன்பிறகு திருச்செல்வம் இயக்குனராக கோலங்கள் என்ற தொடர் மூலம் அறிமுகமானார். இதில் தேவயானி அபி என்ற ரோலில் நடித்திருந்தார். ரசிகர்களின் மனம் கவர்ந்த இந்த தொடர் 2003ம் ஆண்டு தொடங்கி 2009ம் ஆண்டு முடிவடைந்தது. மிக பெரிய அளவில் ஹிட் கொடுத்த இந்த தொடருக்காக பல விருதுகளையும் அவர் வாங்கி இருக்கிறார். அதன்பின் அல்லி ராஜ்ஜியம், மாதவி, பொக்கிஷம், சித்திரம் பேசுதடி, கைராசி குடும்பம் போன்ற பல சூப்பர் ஹிட் சீரியல்களை இயக்கினார்.

எதிர்நீச்சல்: பல தொடர்களை இயக்கி திறமையான இயக்குநர் என்று பெயர் எடுத்த திருச்செல்வம் அவர்களின் இயக்கத்தில், சன் தொலைக்காட்சியில் எதிர்நீச்சல் சீரியல் 2022 ஆம் ஆண்டு ஒளிபரப்பானது. இதில், ஆணாதிக்கம் நிறைந்த வீட்டில் உள்ள ஆண்களை திருமணம் செய்து கொண்டு, பல கஷ்டத்தை அனுபவிக்கும் பெண்களை மையப்படுத்தி இதன் கதைக்களம் இருந்தது. டிஆர்பியில் முதல் இடத்தில் இருந்த இந்த சீரியலில், குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த மாரிமுத்து இறந்ததை தொடர்ந்து, அந்த கதாபாத்திரத்தில் வேலராமமூர்த்தி நடித்தார்.
எதிர்நீச்சல் 2: ஆனால் அதுவரைக்கும் ஆதி குணசேகரனாக இருந்த கேரக்டர், வேலராம மூர்த்திக்கு வித்தியாசமாக இருந்ததால் டிஆர்பியில் சற்று சறுக்கல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஜூலை மாதத்தோடு சீரியல் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து, நாளையில் இருந்து, எதிர்நீச்சல் 2 இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. இதில், சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணியாக நடித்த சல்மா அருண் நடிக்கவுள்ளார். அவர் வில்லியாக நடிக்கப் போகிறாரா? அல்லது பாசிட்டிவ் கேரக்டரில் வரப்போகிறாரா? என்பது தெரியவில்லை.
கதை சுருக்கம்: இதன் கதை குறித்து பேசிய திருச்செல்வம், மக்கள் எதிர்பார்த்தபடி அவர்களுடைய ஆதங்கத்தை பூர்த்தி பண்ணும் விதமாக எதிர்நீச்சல் 2 சீரியலின் கதை இருக்கும். வெவ்வேறு குடும்பத்தில் இருந்து வந்த பெண்கள் ஒரு வீட்டுக்கு மருமகளாக வந்த பிறகு அவர்களுடைய கனவுகள் அனைத்தும் புதைக்கப்பட்ட நிலையில் ஒரு பெண் தன்னுடைய கனவுகளை யாருக்காகவும் எதற்காகவும் கைவிடக்கூடாது என்று தைரியத்தை எதிர்நீச்சல் 2 நிச்சயம் சொல்லும்.
பெண்களின் முன்னேற்றம்: ஜனனி கதாபாத்திரம் என்னவென்றால் படித்துவிட்டு சுயமாக சம்பாதிக்க முடியாமல் அவஸ்தைப்படும் ஒவ்வொரு இல்லத்தரசிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக அவர்களுக்கு ஊக்குவிக்கும் விதமாக ஜனனி ஒரு ஸ்டாராக இருக்கப் போகிறார். மேலும், எப்போதும் சோகமாக இருந்த ஈஸ்வரி சந்தோஷத்தை எப்படி கொண்டாடலாம் என்று ஒரு துணிச்சலான பெண்ணாக இந்த இரண்டாம் பாதியில் இருப்பார். அத்துடன் தனக்கு தெரிந்த சமையல் விஷயத்தை வைத்து படிப்படியாக முன்னேறி காட்டுவார். மொத்தத்தில் எதிர்நீச்சல் 2 பெண்களை முன்னேற்றும் தொடராக இருக்கப்போகிறது. மேலும், அதில், நையாண்டி, காமெடி, என அனைத்தும் கலந்த ஒரு தொடராக இருக்கும் என்று திருச்செல்வம் கூறியுள்ளார். இந்த சீரியலை பார்க்க இல்லத்தரசிகள் தயாராக உள்ளனர்.


Click it and Unblock the Notifications











