இந்த வார டாப் 10 சீரியல்கள்.. விஜய் டிவியின் முன்னணி சீரியல்கள் நிலை தெரியுமா?
சென்னை: ஒவ்வொரு வாரமும் புதிய புதிய படங்கள் வெளியாகி மிகப்பெரிய மாஸை கொடுத்துவருகின்றன. மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகும் படங்களையும் அதிகமான ரசிகர்கள் பார்க்காத சூழல் ஏற்பட்டு வருகிறது. இதற்கு முக்கியமான காரணங்களாக ஓடிடியில் அந்தப் படங்கள் வெளியாவது காரணங்களாக அமைந்து வருகிறது.
ஆனாலும் டிவியில், ஓடிடியில் வெளியாகிவரும் சீரியல்களும் ரசிகர்களை அதிகமாக திரையரங்குகளுக்கு வரவிடாமல் செய்வதாக கூறப்படுகிறது. சினிமாவிற்கு இணையாக தற்போது டிவி சீரியல்கள் காணப்படுகின்றன. தனியாக ஸ்டண்ட் மாஸ்டர் வைத்து செயல்படுத்தப்படும் ஸ்டண்ட் காட்சிகளும் தொலைக்காட்சி தொடர்களில் இடம்பெற்று வருகின்றன.

மாஸ் காட்டும் சீரியல்கள்: தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்கள் என்றாலே பெண்கள்தான் பார்ப்பார்கள் என்ற நிலை ஒரு காலகட்டத்தில் இருந்தது. அந்த வகையில் அழுகை, சென்டிமெண்ட் காட்சிகள் மட்டுமே இந்தத் தொடர்களில் இடம்பெற்று வந்தன. ஆனால் தற்காலங்களில் சினிமாவிற்கே டஃப் கொடுக்கும் வகையில் சீரியல்கள் மாற்றமடைந்துள்ளன. காதல், ரொமான்ஸ், காமெடி, சண்டைக் காட்சிகள் என டிவி தொடர்கள் மாஸ் காட்டி வருகின்றன.இவற்றுடன் அழுகை, சென்டிமெண்டும் இணைந்துதான் கொடுக்கப்படுகின்றன. சினிமாவிற்கு ஈடுகொடுக்கும் வகையில் இந்த சீரியல்கள் காணப்படுவதால், தற்போதெல்லாம் ஆண்கள், சிறுவர்கள் என அனைத்துத் தரப்பினரும் சீரியல்களை பார்த்து வருகின்றனர்.
இந்த வார டாப் சீரியல்கள்: சன்டிவி, விஜய் டிவி என அடுத்தடுத்த சேனல்களில் ஒளிபரப்பாகிவரும் இந்த தொடர்கள், டிஆர்பி அடிப்படையில் அடுத்தடுத்த வாரங்களில் வரிசைப்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் இந்த வார டிஆர்பியில் முதல் 10 இடங்களில் இடம்பெற்றுள்ள சீரியல்களை இந்த கட்டுரையில் பார்க்கலாம். இந்த 10 தரவரிசையில் அதிகமான இடங்களை சன் டிவி சீரியல்கள்தான் பிடித்துள்ளன. முதல் 5 இடங்களில் உள்ள சீரியல்களில் 4 இடங்களை சன் டிவி சீரியல்கள் பிடித்துள்ள நிலையில் 5வது இடத்தில் விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் இடம் பெற்றுள்ளது. இதேபோல கடந்த வாரங்களில் முதல் 5 இடங்களில் இருந்த பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்கள் இந்த வாரத்தில் கீழிறங்கியுள்ளன.
முதல் இடங்களில் சன் டிவி சீரியல்கள்: இந்த வார பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது சன் டிவியின் சிங்கப்பெண்ணே சீரியல். கடந்த சில வாரங்களுக்கு முன்பு தன்னுடைய இடத்தை விட்டுக் கொடுத்திருந்த இந்த சீரியல் இந்த வாரம் 9.92 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து சன் டிவியின் மூன்று முடிச்சு சீரியல் 9.73 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. இதேபோல சன் டிவியின் கயல் சீரியல் இந்த வாரம் 9.28 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் 4வது இடத்தில் சன் டிவியின் மருமகள் சீரியல் 8.46 புள்ளிகளுடன் உள்ளது. இந்த பட்டியலில் விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை தொடர் 8.14 புள்ளிகளுடன் 5வது இடத்தை பிடித்துள்ளது.

கீழிறங்கிய விஜய் டிவி சீரியல்கள்: இதேபோல 6வது இடத்தில் சன் டிவியின் அன்னம் சீரியல் 7.53 புள்ளிகளுடன் உள்ளது. தொடர்ந்து சன் டிவியின் எதிர்நீச்சல் 2 சீரியல் 7.23 புள்ளிகளுடன் 7வது இடத்தை பிடித்துள்ளது. இந்த சீரியல் துவங்கி சில வாரங்களே ஆன நிலையில் முதல் 10 இடங்களில் இடம்பிடித்துள்ளது. இதன் முதல் பாகம் மிகச்சிறப்பாக அமைந்த நிலையில், அடுத்தடுத்த வாரங்களில் இந்த சீரியல் மேலும் கவனம் ஈர்க்கும் என்று எதிர்பார்க்கலாம். சன் டிவியின் ராமாயணம் தொடர் 6.73 புள்ளிகளுடன் 8வது இடத்தை பிடித்துள்ளது. இந்த காலத்திலும் ராமாயணம் போன்ற இதிகாசங்களில் மக்களுக்கு ஆர்வம் அதிகமாக இருப்பதை இது காட்டுகிறது.
மாற்றம் ஏற்படுமா?: தொடர்ந்து விஜய் டிவியின் பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்கள் அடுத்தடுத்து 9வது மற்றும் 10வது இடங்களை 6.34 மற்றும் 6.27 புள்ளிகளுடன் இடம்பிடித்துள்ளது. இதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் தற்போது பழனிவேலின் திருமணத்தையொட்டிய பரபரப்பான காட்சிகள் இடம் பெற்றுள்ளதால் இந்த பட்டியலில் அந்த சீரியல் அடுத்த வாரத்தில் மேலும் முன்னேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











