காரில் ஜிபிஎஸ் ட்ராக்கர்.. ஆங்கரை கடத்தி காதல் டார்ச்சர்.. திரிஷா அதிரடி கைது.. ஷாக் பின்னணி
ஹைதராபாத்: காதல் என்பது இயற்கையானது. அதுவாக நிகழ வேண்டும் என்று விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் கௌதம் மேனன் ஒரு வசனம் எழுதியிருப்பார். அதுவாகவே நிகழும் காதல்களுக்கு ஆயுள் எப்போதுமே அதிகம். ஆனால் சில காதல்கள் ஒருவரின் வற்புறுத்தலால் சிக்கி சின்னாபின்னமாகிறது. அப்படித்தான் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்திருக்கிறது.
ஹைதராபாத்தை சேர்ந்தவர் பிரணவ். இவர் ஒரு மென்பொருள் பொறியாளராக பணியாற்றிவருகிறார். இருந்தாலும் கலை மீது ஆர்வம் உடைய அவர் பிரபல தெலுங்கு சேனல் ஒன்றில் ஆங்க்கராக பகுதிநேர பணி செய்துவருகிறார். இவர் தொகுத்து வழங்குவது மக்களுக்கும் பிடிக்கத்தான் செய்யும். அதேபோல் சமூக வலைதளங்களிலும் ஃபேமஸான அவருக்கு பெண் ரசிகைகள் பலர் இருக்கிறார்கள். சூழல் இப்படி இருக்க கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மேட்ரிமோனி தளத்தில் தனது புகைப்படத்தை பதிவிட்டு திருமணம் செய்துகொள்ள பெண் வேண்டும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

தொழிலதிபர் திரிஷா: மேட்ரிமோனியில் பிரணவ்வின் புகைப்படத்தை பார்த்த ஹைதராபாத்தை சேர்ந்த இளம் தொழிலதிபர் திரிஷா என்ற பெண் பிரணவ்வை திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்தார். பிறகு பிரணவ் தரப்பும் இந்தத் திருமணத்துக்கு சம்மதம் வந்ததால் மகிழ்ச்சியடைந்த திரிஷா தொடர்ந்து பிரணவ்விடம் ஃபோனிலும், சாட்டிங்கிலும் பேசி வந்திருக்கிறார்.
ட்விஸ்ட்: ஆனால் திரிஷா எதிர்பார்க்காத விதமாக பெரும் ட்விஸ்ட் ஒன்று இருந்தது. அந்தக் கணக்கில் இருந்து பேசியது பிரணவ்வே இல்லை; அவரது பெயரில் போலி கணக்கு தொடங்கி வேறு யாரோ பேசியிருக்கிறார். இந்த விஷயம் ஒருகட்டத்தில் திரிஷாவுக்கு தெரியவும் செய்தது. பிறகு அந்த போலியான நபருக்கு எச்சரிக்கை கொடுத்து அனுப்பிவிட்டார் திரிஷா. இருந்தாலும் பிரணவ் மீதான காதல் திரிஷாவுக்கு துளியும் குறையவில்லை.
காதலித்தது உங்களைத்தான்: காதலை மறக்க முடியாத திரிஷா ஒரிஜினல் பிரணவ் பற்றிய தகவல்களை திரட்டி அவரை சந்திக்க நேராக சென்றிருக்கிறார். பிரணவ்வை சந்தித்து போலியான நபரிடம் ஏமாந்த விஷயத்தை சொல்லிவிட்டு; தான் பேசியது யாரிடமோ இருக்கலாம் ஆனால் உங்களைத்தான் காதலித்தேன். உங்களை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என கூறியிருக்கிறார். ஆனால் பிரணவ்வோ திருமணம் செய்துகொள்ள மறுத்துவிட்டார்.
கடத்தலும், காதல் டார்ச்சரும்: திரிஷாவோ விடுவதாக இல்லை. பிரணவ்வின் காரில் ஜிபிஎஸ் ட்ராக்கர் வைத்து தொடர்ந்து கண்காணித்துக்கொண்டே இருந்தார். தொடர்ந்து பிரணவ்விடம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கெஞ்சவும் செய்தார். ஒருகட்டத்தில் டென்ஷன் ஆன திரிஷா அடியாட்கள் சிலரை செட் செய்து பிரணவ்வை கடத்தி தன்னுடைய அறையில் பத்து நாட்கள் வைத்து காதல் டார்ச்சர் செய்ததாக கூறப்படுகிறது. அறையை விட்டு வெளியே வர முடியாமல் தவித்த தொகுப்பாளர் பிரணவ்; எப்படியோ அங்கிருந்து தப்பித்து அருகே இருக்கும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
திரிஷா கைது: அதனைத் தொடர்ந்து அந்தப் புகாரின் அடிப்படையில் இளம் தொழிலதிபர் திரிஷாவை காவல் துறையினர் கைது செய்திருக்கின்றனர். மேலும் பிரணவ்வை கடத்திய நான்கு அடியாட்களையும் தீவிரமாக தேடிவருகின்றனர். ஒரு ஆணை பெண் கடத்தி காதல் டார்ச்சர் செய்த சம்பவம் தெலங்கானாவில் பெரும் பேசுபொருளாக மாறியிருக்கிறது. தன்னை பலரும் திருமணம் செய்துகொள்ள தயாராக இருக்கும்போது பிரணவ் ஒத்துக்கொள்ளாதது திரிஷாவை ஆத்திரம் அடைய செய்ததாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











