twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சின்னத்திரை நடிகர் சங்கத்தேர்தல்: கள்ள ஓட்டை தடுக்கக் கோரி போலீஸ் கமிஷனர் ஆபிசில் மனு

    By Mayura Akilan
    |

    சென்னை: சின்னத்திரை நடிகர் சங்கத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு அமைதியாக நடைபெறும் வகையில் போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து கமிஷனர் டி.கே.ராஜேந்திரனிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

    தென்னிந்திய சின்னத்திரை நடிகர் சங்க நிர்வாகிகளுக்கு இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக சங்கத்திற்குள் பிளவு ஏற்பட்டது. இதையடுத்து சங்க நிர்வாகிகள் அனைவரும் ராஜினாமா செய்தனர். புதிய நிர்வாகிகளை ஒருமனதாக தேர்ந்தெடுக்கும் முயற்சிகளும் நடந்தன. ஆனால் அது தோல்வியில் முடிவடைந்தது.

    TV Actors Union Election: petition on Police commissioner office

    இதையடுத்து நடந்த சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் சின்னத்திரை நடிகர் சங்க தேர்தலை டிசம்பர் மாதம் 13ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மழை வெள்ள பாதிப்பு காரணமாக இன்று நடைபெறுவதாக இருந்த தேர்தல் 25ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

    நடிகர் சங்கத்தேர்தல் பரபரப்பு

    சமீபத்தில் நடந்த தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத் தேர்தல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பொதுத்தேர்தல் போல ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்திய தேர்தலில் நாசர், விஷால், கார்த்தி உள்ளிட்ட பாண்டவர் அணி வெற்றி பெற்றது.

    தற்போது சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சின்னத்திரை சங்கத்தில் கலகக்குரல்

    சின்னத்திரையில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கு என சின்னத்திரை நடிகர்கள் சங்கம் என தனியாக செயல்பட்டு வருகிறது. 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும். இச்சங்கத்திற்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தான் தேர்தல் நடைபெற்று உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். நளினி தலைவியாக தேர்வு செய்யப்பட்டார்.

    சங்கத்தில் அதிருப்தி

    தலைவராக இருந்த நளினிக்கு சங்கத்திற்குள் கடும் எதிர்ப்பு ஏற்படவே, சங்கத்தின் பொருளாளர் வி.டி.தினகர், துணைத் தலைவர் ராஜ்காந்த், இணை செயலாளர்கள் பாபூஸ், கன்யா பாரதி மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் அடங்கிய 16 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்தார்கள். அதனைத் தொடர்ந்து தலைவராக இருந்த நளினியும் தனது ஆதரவாளர்களுடன் ராஜினாமா செய்தார்.

    மீண்டும் தேர்தல்

    இதனையடுத்து வருகிற டிசம்பர் 25ம் தேதி வெள்ளிக்கிழமையன்று சென்னை விருகம்பாக்கம் மார்க்கெட் ரோட்டில் உள்ள ஏ.கே.ஆர் மஹாலில் சின்னத்திரை நடிகர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மொத்தம் 23 நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட வேண்டும்.

    மும்முனை போட்டி

    சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தலில் மூன்று அணியினர் களத்தில் உள்ளனர். மொத்தம் 69 பேர் போட்டியிடுகிறார்கள். பானுபிரகாஷ், மனோபாலா, டெல்லிகணேஷ் ஆகியோர் ஒரு அணியாகவும், சிவன் சீனிவாசன், போஸ் வெங்கட் ஆகியோர் மற்றொரு அணியாகவும் போட்டியிடுகின்றனர்.

    நடிகர் ரவிவர்மா அணி

    சின்னத்திரை நடிகர்கள் சங்கத் தேர்தலில் உழைக்கும் கரங்கள் அணி என்ற அணியினரும் போட்டியிடுகிறது.

    இந்த அணியில் சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் பதவிக்கு நடிகர் ரவிவர்மா போட்டியிடுகிறார்.

    அவர் நேற்று தனது ஆதரவாளர்களோடு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து கமிஷனர் டி.கே.ராஜேந்திரனிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தார்.

    போலீஸ் பாதுகாப்பு

    சின்னத்திரை நடிகர் சங்க தேர்தலை எந்தவித இடையூ றும் இல்லாத வகையில் நடத்த, தேர்தல் முடியும் வரை உறுப் பினர்கள் அல்லாதவர்களையும், வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களையும் உள்ளே அனுமதிக்கக்கூடாது. மொத்த வாக்காளர்கள் 1,360 பேர். இதில் ஒரு அணிக்கு 23 பேர் வீதம் 3 அணிக்கு மொத்தம் 69 பேர் போட்டியிடுகின்றனர். தேர்தல் முறையாக நடைபெற போலீஸார் முழு ஒத்துழைப்பும், பாதுகாப்பும் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று ரவிவர்மா கொடுத்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    தேர்தல் அதிகாரி

    செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரவிவர்மா, சின்னத்திரை நடிகர்கள் சங்கத் தேர்தலில் 1,360 வாக்காளர்கள் ஓட்டுப் போட உள்ளனர். இயக்குனர் லியாகத் அலிகான் தேர்தல் அதிகாரியாக பொறுப்பேற்று உள்ளார். சின்னத்திரை நடிகர் சங்கத்தில் உறுப்பினர் அல்லாதவர்களும் ஓட்டுப்போடுவதற்கு வரக்கூடும் என்ற தகவல் கிடைத்துள்ளது. இதனால் தகராறு ஏற்பட வாய்ப்புள்ளது என்றார்.

    கள்ள ஓட்டு போட வாய்ப்பு

    எவ்வித இடையூறும் இல்லாத வகையில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். வாக்காளர் அல்லாதவர்களை ஓட்டுப்போடுவதற்கு அனுமதிக்க கூடாது என்பது தான் எங்களது கோரிக்கையாகும். வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் என்று ரவிவர்மா கூறியுள்ளார். சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல் மூலம் அடுத்த பரபரப்பு ஆரம்பித்து விட்டது.

    English summary
    Chinnathirai Nadigar Sangam will conduct the election on December 25, 2015. The election has been planned to elect the new office bearers for the post of President, General Secretary, Treasurer and other posts that includes Executive Committee members.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X