மாத்தி யோசிச்சா, நீங்கதாங்க உண்மையான லீடர்... ஹட்சன் சந்திரமோகன்

தொழிலதிபர்களின் வெற்றியின் ரகசியத்தை அறிந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிறு காலை 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இதனை கோபிநாத் தொகுத்து வழங்குகிறார். இந்த வாரம் 'உன்னால் முடியும்' நிகழ்ச்சியில் அருண் ஐஸ்கிரீம், ஆரோக்கியா பால் உரிமையாளரான ஹட்சன் ஆர்.ஜி. சந்திரமோகன் பங்கேற்று தனது தொழில் வெற்றியின் ரகசியங்களை பகிர்ந்து கொண்டார்.
ஆரோக்கியா பால் நிறுவனத்தில் மட்டும் நான்கு லட்சம் விவசாயிகளை தொழில் முனைவோர்களாக மாற்றியிருக்கிறோம் என்று பெருமிதப்பட்ட சந்திரமோகன், பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து பாலை வாங்கவும், அதை விநியோகம் செய்யவும் மட்டும் ஹட்சன் நிறுவன வாகனங்கள் தினசரி 4 லட்சம் கிலோ மீட்டர் தூரம் பயணிப்பதாக கூறினார்.
இது உலகத்தை 10 முறை சுற்றுவதற்குச் சமம் என்றும் பூமியில் இருந்து நிலாவிற்கு ரோடு போட்டால் பாதிதூரம் சென்று திரும்பி விடுவோம் என்றும் கூறியது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
எந்த ஒரு தொழிலையும் ஜெயிக்க ஐடியா முக்கியம். ஆரோக்கியா பாலினை மக்களிடம் கொண்டு சேர்க்க "அர்ஜூன் அம்மா யாரு?" என்ற விளம்பரத்தை உருவாக்க பல லட்சம் ரூபாய் செலவு செய்ததையும் தெரிவித்தார்.
தனது தந்தை, ஆசிரியர், நண்பர்கள் அனைவருமே தனக்கு இன்ஸ்பிரேசனாக இருந்தவர்கள் என்று கூறிய சந்திரமோகன், "எதையுமே மாற்றி யோசிப்பவர்கள் மட்டுமே உண்மையான லீடராக முடியும்" என்று தனது ஆசிரியர் கூறியதை இதுநாள் வரை பின்பற்றி வருவதாக கூறினார்.
என்னை நன்றாக படிக்கவைக்கவேண்டும் என்று என் அப்பா ஆசைப்பட்டார். ஆனால் பியுசியில் நான் தோல்வியடைந்துவிட்டேன். இதனாலேயே அப்பாவின் ஆசையை நிறைவேற்ற முடியவில்லையே என்ற குற்ற உணர்வு தனக்கு உண்டு என்றார்.
தன்னால் டிகிரி படிக்க முடியாவிட்டாலும், இந்தியாவில் உள்ள மிகச்சிறந்த பிசினஸ் பள்ளிகளில் உரை நிகழ்த்தியுள்ளதாக கூறினார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் "இந்திய விவசாயமும் ஹட்சனின் பங்கும்" என்ற தலைப்பில் உரையாற்றியதை நினைவுகூர்ந்தார். அன்றைய தினம் தனது தந்தையின் பிறந்தநாள் என்பதுதான் சிறப்பம்சம் என்றும் கூறினார்.
உன்னால் முடியும் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கோபிநாத்தின் கேள்விகள் மிக நேர்த்தியாக இருந்தது. கடந்த வாரங்களில் இந்த நிகழ்ச்சியில் இதயம் அதிபர் ,சக்தி மசாலா அதிபர், பவர்சோப் அதிபர்கள் பங்கேற்று தாங்களின் வெற்றி குறித்தும் வளர்ச்சி குறித்தும் பகிர்ந்து கொண்டனர்.
வருங்கால தொழில் முனைவோர்களுக்கும், தொழில் தொடங்கவேண்டும் என்று ஆசைப்படுபவர்களுக்கும் பயன்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சியில் எம்பிஏ மாணவர்கள் பார்வையாளர்களாக பங்கேற்பது மற்றொரு சிறப்பம்சம்.


Click it and Unblock the Notifications











