Bigg Boss: அந்த மாதிரி பிக் பாஸ் மட்டும் வேண்டவே வேண்டாம்.. கதறும் ரசிகர்கள்.. என்னப்பா கேட்டுச்சா?
சென்னை: இன்னும் நான்கு தினங்களில் பிக் பாஸ் சீசன் 8 தொடங்கவுள்ளது. இந்த சீசனில் இருக்ககூடிய மிகப்பெரிய மாற்றம் மற்றும் எதிர்பார்ப்பு என்றால் அது விஜய் சேதுபதிதான். கடந்த 7 சீசன்களாக கமல்ஹாசன் மிகவும் பிரமாதமாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். அப்படி இருக்கையில், இந்த சீசனில் இருந்து அவரின் சொந்த காரணங்களுக்காக பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இது பிக் பாஸ் ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. இப்படியான நிலையில் விஜய் சேதுபதிதான் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போகின்றார் என்றதும் ரசிகர்களுக்கு ஆறுதல் அளித்தது. இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் பிக் பாஸ் ரசிகர்கள் தரப்பில் மகிழ்ச்சியோடு சேர்ந்து ஒரு பெரும் வருத்தமும் ஆட்கொண்டுள்ளது. அது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.
பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழில் ஒளிபரப்பு செய்யப்படப்போகின்றது என்ற தகவல் 7 ஆண்டுகளுக்கு முன்னர் அறிவிப்பு வெளியான போது பலரும் இணையத்தில் இது கலாச்சார சீர்கேடு எனக் கூறினார்கள். ஆனால் இந்தக் கருத்து இன்றைக்கு வரைக்கும் நீடித்து வந்தாலும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான வரவேற்பு என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு உள்ளது. வருடத்தின் 365 நாட்களில் 100 நாட்கள் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகின்றது. சில சீசன்கள் இதைவிடவும் நாட்கள் அதிகமாகக் கூட ஒளிபரப்பு செய்யப்படுகின்றது.

பிக் பாஸ் நிகழ்ச்சி பிரமாண்டமான வெற்றியைப் பெற முக்கிய காரணம், போட்டியாளர்கள், ரசிகர்களின் குணாதிசயத்துடன் ஒன்றிப் போனதால், ரசிகர்களின் ஈடுபாடுதான். இது போட்டியாளர்களுக்கும் நிகழ்ச்சிக்குமான மவுசை மக்கள் மத்தியில் அதிகரிக்கச் செய்தது. ஆனால் இப்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் அச்சமும் வருத்தமும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மீது ஏற்பட்டுள்ளது. ஆமாம், கடந்த சீசனில் ரசிகர்கள், பிக் பாஸ் நிகழ்ச்சியை வெறுக்கும் அளவிற்கு பல நிகழ்வுகள் ஆட்டத்தின் முதல் நாளில் இருந்தே நடைபெற்றது.
புது அனுபவம்: பிக் பாஸின் முதல் சீசனில் போட்டியாளர்களுக்கும் ரசிகர்களுக்குமே அனைத்தும் புதுமையான அனுபவம்தான். ஆனால் அப்படி இருக்கும்போதும் கூட, ரசிகர்களுக்கு மிகவும் சுவாரஸ்யமான போட்டியை மக்களுக்கு அளித்தனர். முதல் ஐந்து சீசன்களில் ரசிகர்களுக்கு பிக்பாஸ் போட்டியின் மீதான ஆர்வம் தொடர்ந்து அதிகரித்தது. ஆனால் 6வது சீசனில் பிக் பாஸ் மீதான பார்வை கொஞ்சம் மாறியது. ஆனால் 7வது சீசனில் இது முற்றிலுமாக மாறிபோனது.
பரிசுத் தொகை: போட்டி தொடங்கிய முதல் நாளில் இருந்து, போட்டியாளர்கள் பரிசுத்தொகையை மைய்யமாகக் கொண்டு ஓடினார்கள். ஆனால் அதற்கு முன்னர் நடைபெற்ற சீசன்களில் மக்கள் மனம் வெல்ல போட்டியாளர்கள் தங்களது கவனத்தைச் செலுத்தினர். முதல் சீசனின் வெற்றியாளராக ஆரோவ் இருந்தாலும், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றவர்கள் என்றால் அது, ஹரீஷ் கல்யாண், ஓவியா மற்றும் சினேகன் உள்ளிட்டோருக்கு மக்கள் மத்தியில் நல்ல அபிப்ராயம் ஏற்பட்டது. இப்படி ஒவ்வொரு சீசனுக்கும் சிலரைக் கை காட்டலாம். குறிப்பாக வனிதா விஜய்குமார், கவின், சாண்டி மாஸ்டர் உள்ளிட்டோரும் இந்த வரிசையில் வருவார்கள்.

டைட்டில் வின்னர்கள் இல்லை: கவினோ, ஹரீஸ் கல்யானோ, சாண்டி மாஸ்டரோ, வனிதா விஜயகுமாரோ போட்டியை வென்றவர்கள் இல்லை. ஆனால் இவர்கள் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பிசியாக இருக்கின்றனர். போட்டியாளர்கள் தங்களுக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய ஃப்ளாட்ஃபாரத்தைக் கொண்டு, மக்களின் மனதை வெல்ல தங்களது கவனத்தைக் குவிக்காமல், மற்ற போட்டியாளர்களை வீட்டுக்கு அனுப்புவதில்தான், இன்னும் சொல்லப்போனால் மற்றப் போட்டியாளர்களை காலி செய்வதில்தான் மிகவும் கவனமாக செயல்பட்டனர். இது பிக் பாஸின் வழக்கமான ரசிகர்களுக்கு எரிச்சலைத்தான் ஏற்படுத்தியது.
பி.ஆர்.டீம்: ஆட்டத்தில் போட்டியாளர்களின் நடவடிக்கையைப் பொறுத்து ரசிகர்களாகவே அவர்களுக்கு ஆதரவாக, சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வந்தனர். அவர்களுக்கு ஆதரவாக அணிகளாகவே செயல்பட்டனர். ஆனால் போட்டியாளர்கள் தங்களுக்காக வேலை செய்ய பி.ஆர். டீமை தாங்களாகவே செட் செய்துவிட்டு போட்டியில் கலந்து கொள்கின்றனர். கடந்த சீசனில் பல போட்டியாளர்களின் செயல்பாடு அப்படித்தான் இருந்தது. முந்தைய சீசன்களில் போட்டியாளர்களுக்கு மத்தியில் எத்தனை போட்டிகள் இருந்தாலும், போட்டி இறுதி கட்டத்தை நெருங்கும்போது, மீதம் இருக்கும் போட்டியாளர்கள் தங்களுக்குள்ம் இருக்கும் வெறுப்புகளை மறந்து, அன்பாக பழகி, ரசிகர்களுக்கு ஒரு ஃபீல் குட் மொமண்ட்டை ஏற்படுத்தினார்கள். ஆனால் கடந்த சீசனில் அப்படியெல்லாம் இல்லாமல், ஆட்டத்தின் கடைசி நாள் வரை வெறுப்பைக் கக்கிக்கொண்டு இருந்தார்கள்.

தவறான முன்னுதாரணம்: இன்னும் சொல்லப்போனால், கொரியன் வெஃப் சீரிஸான ஸ்குவிட் கேம் போல், அடுத்தவரை எலிமினேட் செய்தால் போட்டியாளர்களின் எண்ணிக்கை குறைகின்றது என்ற எண்ணத்தில் விளையாடினார்கள். அன்பை வெளிப்படுத்தாமல், முழுக்க முழுக்க வெறுப்பை வெளிப்படுத்தி வந்தார்கள். இது ரசிகர்களுக்கு போட்டியாளர்கள் மீது வெறுப்பைத்தான் ஏற்படுத்தியது. எனவே இந்த சீசனில் களமிறங்கும் போட்டியாளர்கள் மக்கள் மத்தியில் நல்ல பெயரைப் பெற, மக்கள் மத்தியில் தங்களுக்கான பிம்பத்தை நல்லவிதமாக கட்டமைக்க முயற்சி செய்யுங்கள். கூடுமானவரை நல்ல உதாரணமாகத் திகழ முயற்சி செய்யுங்கள். நீங்கள் பிக்பாஸில் போட்டியிட பல காரணங்கள் இருக்கலாம், அதற்காக ஒருபோதும் தவறான முன்னுதாரணமாக மாறிவிடாதீர்கள் என ரசிகர்கள் புலம்பி வருகின்றார்கள். பிக் பாஸ் சீசன் 8இல் கலந்துகொள்ளவுள்ள போட்டியாளர்களுக்கு வாழ்த்துகள்.


Click it and Unblock the Notifications











