பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய கமல்ஹாசன்.. அடுத்த ஹோஸ்ட் பார்த்திபனா? விஜய்சேதுபதியா?
சென்னை: பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கப்போவது இல்லை என அறிவித்து விட்டார். பிக் பாஸ் சீசன் 8 மட்டுமில்லை, இனிமேல் அந்த பக்கமே கமல்ஹாசன் போகமாட்டார் என்றும் அந்தளவுக்கு அவர் மனம் கஷ்டப்பட்டு விட்டது என அந்தணன் சமீபத்திய வீடியோவில் பேசியுள்ளார்.
பிரதீப் ஆண்டனிக்கு ஆதரவாக அவரது ரசிகர்கள் கமல்ஹாசனையும் மாயாவையும் கோர்த்து விட்டு ட்ரோல் செய்தது தான் இதற்கு மேல் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போவதில்லை என்கிற முடிவை கமல்ஹாசன் எடுக்க காரணம் என்றும் கூறியுள்ளார்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கவில்லை என்றால் சிம்பு தான் அடுத்த ஹோஸ்ட்டா என நினைத்த ரசிகர்களுக்கு சிம்பு இல்லை என்றும் கண்டிப்பாக இந்த முறை புதிய தொகுப்பாளர் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போகிறார் என்கின்றனர்.
அடிபடும் விஜய்சேதுபதி பெயர்: பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகர் விஜய்சேதுபதி தொகுத்து வழங்கப்போவதாக சினிமா வட்டாரத்தில் ஒரு தகவல் ஓடிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே சன் டிவியில் ஒளிபரப்பான மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியை விஜய்சேதுபதி தொகுத்து வழங்கி இருந்தார். இந்த ஆண்டு ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 5ல் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு மகாராஜா படத்தை புரமோட் செய்திருந்தார். இந்நிலையில், விஜய்சேதுபதி புதிய ஹோஸ்ட்டாக வர வாய்ப்புகள் இருப்பதாக கூறுகின்றனர்.
பார்த்திபனுக்கு வாய்ப்பு: இன்னொரு பக்கம் அந்தணன் கமல்ஹாசனுக்கு பதிலாக பார்த்திபன் பெயர் தான் சிபாரிசில் இருப்பதாக கூறியுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்த பார்த்திபன் சரியான தேர்வாக இருப்பார் என்றும் கமல்ஹாசன் மாதிரி டபுள் மீனிங்கில் பேசவும் புரிந்தும் புரியாமலும் பேசவும் அவர் தான் சரியான நபராக இருப்பார் என்றும் கூறியுள்ளார்.
கடுப்பில் கமல்ஹாசன்: பிக் பாஸ் நிகழ்ச்சியால் நல்ல வருமானம் கிடைத்தாலும், சமீப காலமாக அதிகளவில் மன உளைச்சலுக்கு கமல்ஹாசன் ஆளானது தான் இந்த முடிவை அவர் எடுக்க காரணம் என்றும் கூறுகின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சியின் டிஆர்பியும் படிப்படியாக குறைந்து விட்ட நிலையில், நிகழ்ச்சியின் நிர்வாகமும் கமலுக்கு பதிலாக வேறு ஒரு ஹோஸ்ட்டை கொண்டு வர முயற்சித்து தான் முன்பே சிம்புவை கொண்டு வந்தனர். ஆனால், கமல் மறுபடியும் வருகிறேன் என்று சொன்னதும் வேறு வழியில்லாமல் இருந்தவர்கள் தற்போது கமல்ஹாசனின் முடிவை முழு மனதுடன் ஏற்றுக் கொண்டதாக கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











