ஆளும் புதுசு.. ஆட்டமும் புதுசு.. பிக்பாஸ் 8 நிகழ்ச்சி எப்ப துவங்குது தெரியுமா.. அறிவித்தது விஜய் டிவி!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியாக பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த ஏழு சீசன்களாக மிகவும் சிறப்பாக ரசிகர்களை கவர்ந்து நடை போட்டு வந்தது. இந்த நிகழ்ச்சியின் 8வது சீசன் துவங்க உள்ள நிலையில் நடிகர் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியில் ஆங்கரிங் செய்வதில் இருந்து விலகியுள்ளார்.
கமல்ஹாசனுக்கு பதிலாக நடிகர் விஜய் சேதுபதியை சேனல் தரப்பு புதிய ஆங்கராக களமிறக்கியுள்ளது. விஜய் சேதுபதியின் ஆங்கரங்கில் இந்த நிகழ்ச்சி எப்படி அமையும் என்பது குறித்து ரசிகர்கள் தங்களது எதிர்பார்ப்பை தெரிவித்து வருகின்றனர். இதனிடையே இந்த நிகழ்ச்சி துவங்க உள்ள நாள் மற்றும் நேரம் குறித்து தற்போது விஜய் டிவி அறிவித்துள்ளது.

பிக்பாஸ் தமிழ் 8 ஷோ: விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கடந்த ஏழு சீசன்களாக ஆங்கராக தொடர்ந்து வந்தார் நடிகர் கமல்ஹாசன். இவரது தொகுப்பில் பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களின் மிகப்பெரிய கவனத்தை பெற்று வெற்றிகரமாக நடந்து வந்தது. இந்நிலையில் நிகழ்ச்சியில் இருந்து விலகும் முடிவை கமல்ஹாசன் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார். இதையடுத்து புதிய ஆங்கராக நடிகர் விஜய் சேதுபதியை பிக் பாஸ் தரப்பு களமிறக்கியுள்ளது. இவரது ஆங்கரிங் குறித்து அடுத்தடுத்த ப்ரோமோக்களை சேனல் தரப்பு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
பிக்பாஸ் துவக்கம் குறித்த அறிவிப்பு: விஜய் சேதுபதிக்கு பொதுமக்கள் ஆலோசனை கூறுவதாக அமைந்த ப்ரமோ வீடியோ மிகப் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து டிரெண்ட் ஆனது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சி எப்பொழுது துவங்கப்போகிறது என்பது குறித்து அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. முன்னதாக சமூக வலைதளங்களில் இது குறித்த தகவல்கள் அடுத்தடுத்து வெளியான நிலையில் தற்போது அதை விஜய் டிவி உறுதிப்படுத்தியுள்ளது. வரும் அக்டோபர் 6ம் தேதி மாலை 6 மணிக்கு இந்த நிகழ்ச்சி மிகவும் பிரம்மாண்டமாக துவங்க உள்ளதாக தற்போது விஜய் டிவி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் போட்டியாளர்கள் அப்டேட்: இன்னும் சில தினங்களில் இந்த நிகழ்ச்சி துவங்கவுள்ள நிலையில் நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் குறித்த அப்டேட் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். போட்டியாளர்களில் பிரபல காமெடி நடிகர் செந்தில், சீரியல் நடிகர் ரியாஸ்கான் உள்ளிட்ட பலரும் பங்கேற்க உள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், இந்த சீசனில் நிகழ்ச்சி சிறப்பாகவே களைக்கட்டும் என்று எதிர்பார்க்கலாம். கடந்த சீசனிலேயே 2 பிக் பாஸ் வீடுகள் என அடுத்தடுத்து வித்தியாசத்தை காட்டிய இந்த நிகழ்ச்சி, இந்த சீசனில் எந்த மாதிரியான வித்தியாசங்களுடன் ரசிகர்களை சந்திக்கும் என்று எதிர்பார்ப்பும் காணப்படுகிறது.
ஆங்கர் விஜய் சேதுபதி: இந்த நிகழ்ச்சியில் விஜய் சேதுபதியின் ஆங்கரின் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் வழக்கமாக தன்னுடைய பேட்டிகளிலும் உணர்ச்சி வசப்படும் விஜய் சேதுபதி, இந்த நிகழ்ச்சியை எப்படி கொண்டு செல்வார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இவை அனைத்திற்கும் இன்னும் சில தினங்களில் நிகழ்ச்சி பதிலாக அமையும் என்று எதிர்பார்க்கலாம். இதனிடையே இந்த சீசனில் பிக்பாஸ் வீடு குறித்த எதிர்பார்ப்பும் ஒருபுறும் காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications











