கேரளால என்ன யார் மதிக்கிறாங்க.. ஆனா தமிழ்நாட்ல.. ஷாலின் ஜோயா பேட்டி
சென்னை: கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட நடிகை ஷாலின் ஜோயா, குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் அறிமுகமாகி இன்று தமிழ் ரசிகர்களின் மனதிலும் தனி இடம் பிடித்துள்ளார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியை மா.பா.க ஆனந்துடன் இணைந்து தொகுத்து வழங்கி வரும் அவர், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கருத்து சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. குறிப்பாக "கேரளாவில் என்னை யாரும் மதிக்கவில்லை; தமிழ்நாட்டில் என்னை வீட்டு பெண்ணாக பார்க்கிறார்கள்" என்ற அவரது உருக்கமான பேசி உள்ளார்.
நடிகை ஷாலின் ஜோயா, குழந்தை நட்சத்திரமாக ஷோபிஸ் திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதன்பின் ஆட்டோகிராப் படத்தின் மூலம் கவனம் பெற்ற அவர், எல்சம்மா என்ன ஆண்குட்டி, மல்லு சிங், கர்மயோதா, ரெபெக்கா ஊதுப் கிழக்கேமாலா, விசுதன், தமகா உள்ளிட்ட பல மலையாள படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். பின்னர் தமிழ் சினிமாவிலும் காலடி பதித்த அவர், ராஜா மந்திரி, கண்ணகி உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றி பாராட்டைப் பெற்றார்.

நடிகை ஷாலின் ஜோயா: சினிமாவை தாண்டி சின்னத்திரையிலும் தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ள ஜோயா, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். ஜீ டிவியில் சமையல் எக்ஸ்பிரஸ் நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்த அவர், தற்போது விஜய் டிவி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில்புதிய முகத்தை காட்டி வருகிறார். அவரது இயல்பான பேச்சும், உற்சாகமான தொகுப்பும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
யாரும் மதிக்கல: இந்நிலையில், சமீபத்திய நிகழ்ச்சியில் பேசிய ஷாலின் ஜோயா, "மலையாள மீடியாவா? தமிழ் மீடியாவா? என்று கேட்டால் நான் தமிழ் என்று தான் சொல்வேன். ஏனென்றால் என்னை அங்கீகரித்தது தமிழ் மக்கள் தான். அன்பு, பாசம், மரியாதை எல்லாம் இங்கே தான் கிடைத்தது. கேரளாவில் என்னை யாரும் அந்த அளவுக்கு கொண்டாடவில்லை. ஆனால், தமிழ்நாட்டில் என்னை அவர்கள் வீட்டுப் பெண்ணாக பார்க்கிறார்கள். ஒருவரை மதிக்காத இடத்தில் இருப்பதை விட, நேசிக்கும் மக்களுடன் இருப்பதே மகிழ்ச்சி. தமிழ்நாடு எனக்கு ஒரு இரண்டாவது வீடு இல்லை, அது என் வீடு. என்னை கொண்டாடும் இந்த மக்களையும், இந்த மண்ணையும் நான் அதிகமாக நேசிக்கிறேன் என்றும் ஜோயா கூறியுள்ளார். ஷாலின் ஜோயாவின் இந்த பேச்சு தமிழ் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications