வசூல் டாக்டர்கள் ராஜாங்கம்… அம்பலப்படுத்திய 'என் தேசம் என் மக்கள்'
என் கணவருக்கு புற்றுநோய்.... 35 லட்சம் செலவு செய்தும் அவரை காப்பாற்ற முடியவில்லை. நோயினால் ஏற்பட்ட வலி ஒரு பக்கம், மருத்துவ செலவுகளினால் கடன் ஒரு பக்கம் என கணவர் தடுமாறிப் போனார். ஒட்டு மொத்த குடும்பமும் போராடியும் என் கணவரை கடைசியில் காப்பாற்ற முடியவில்லை.... இது வயதான ஒரு மனைவியின் ஆதங்கம்.
அம்மாவின் நோயை குணப்படுத்த லட்சக்கணக்கில் பணம் செலவு செய்த மகளின் வேதனைக்குரலும் இவ்வாறுதான் ஒலித்தது. மகளின் மருத்துவ செலவுகளை சமாளிக்க முடியாமல் கடன் பட்டு ஒட்டு மொத்த குடும்பமும் தற்கொலை செய்து கொண்ட சம்பவமும் நிகழ்ந்துள்ளது. அதில் தப்பிப் பிழைத்த ஒரு சிறுவன் தன் குடும்பத்தில் நேர்ந்த அவலத்தை தடுமாற்றத்தோடு பகிர்ந்து கொண்டான்.
விஜய் டிவியில் ஞாயிறு காலை பத்துமணிக்கு ஒளிபரப்பான என்தேசம் என்மக்கள் நிகழ்ச்சியில் மருத்துவத்துறையில் நடைபெறும் உண்மை நிகழ்வுகளை அம்பலப்படுத்தினார் கோபிநாத்.
நாடு முழுவதும் பயணம் செய்து மக்களின் பிரச்சினைகளைப் பற்றி அறிந்து கொண்டதில் பல விசயங்கள் தெரியவந்ததாக கூறிய கோபிநாத், முதலாவதாக மருத்துவத்துறையில் நடக்கும் ஊழல்களை பாதிக்கப்பட்டவர்களின் மூலமாக வெளிக்கொண்டுவந்தார்.

கன்சல்டிங் பீஸ் கண்ணைக் கட்டுதே….
சாதாரண காய்ச்சல், தலைவலி என்று போனாலே இன்றைக்கு 500 ரூபாய்க்கு மருத்து மாத்திரை எழுதி தாளித்து விடுகின்றனர் சில மருத்துவர்கள். காரணம் அவர்கள் எழுதும் மருந்துகளுக்கு ஏற்ப கமிஷன் கிடைப்பதுதான். இதில் கன்சல்டிங்பீஸ் வேறு 200க்கு அழவேண்டும். இதுபோன்ற சின்னச் சின்ன மருத்துவ செலவுகளைக்கூட சமாளிக்க முடியாமல் நடுத்தர, ஏழை மக்கள் தடுமாறிக் கொண்டிருக்கின்றனர்.

பல் பிடுங்க 2 ஏக்கர் நிலம்
இந்தியாவில் அரசு மருத்துவ மனைக்கு செல்பவர்கள் 32 சதவிகிதம், தனியார் மருத்துவ மனைக்குச் செல்பவர்கள் 68 சதவிகிதம் என்று அதிரவைக்கிறது ஒரு புள்ளி விபரம்.
பல் பிடுங்க 2 ஏக்கர் நிலத்தை விற்றேன் என்று கூறி அதிரவைத்தார் ஒருவர். ஆஸ்துமான்னு போனேன் 7 லட்சம் செலவு செய்துவிட்டேன் என்று அழுதார் ஒருபெண்.

ஒன்றரை கோடி செலவு….
கிட்னி நோய்க்காக ஒன்றரை கோடி ரூபாய் மருத்துவ செலவு செய்தேன் என்று கூறி அதிர்ச்சி ஏற்படுத்தினார் தியாகராய நகரைச் சேர்ந்த ஜெயந்தி.
திருமணமாகி மூன்று மாதத்தில் கணவரின் சிறுநீரக கோளாறு தெரியவரவே சிகிச்சைக்காக சென்றிருக்கிறார். 150 முறை டயாலிசிஸ் செய்திருக்கிறார். ஒவ்வொரு முறையும் 2500 ரூபாய், செலவானது.
2004ல் கிட்னி மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. ஒவ்வொரு முறையும் 25000 ரூபாய்க்கு மருந்துகள். இதுவரை 80 லட்ச ரூபாய் மருந்துக்காக செலவு செய்துவிட்டதாக கூறினார். சொத்துக்களை விற்றுதான் செலவு செய்தோம் என்றார் அவர்.

தோல் நோய்க்கு ரூ. 50 லட்சம்
மொத்த சொத்தையும் விற்றும் தாயை காப்பாற்ற முடியாத மகள், தீராத தோல் நோயால் அவதிப்படும் மோகனரங்கன், 50 லட்சம் செலவு செய்துள்ளார்
பணக்காரர்கள் சொத்தை விற்கலாம். ஆனால் ஏழைகளுக்கு அரசு குறைந்த செலவில் மருந்துகளை கொடுக்கலாம் என்பது பாதிக்கப்பட்ட நடுத்தர மக்களின் கோரிக்கை.

கேஸ் போடலாம்…
ஏமாற்றப்பட்டோம் என்று தெரிந்தால் கண்டிப்பாக கேஸ் போடலாம் என்றார் நுகர்வோர் குறைதீர்ப்பு மைய ஆலோசகர் புஷ்பவனம்.
டாக்டர்கள் நோயாளிக்கு புரியும் வகையில் நோயை தெரிவிக்க வேண்டும் என்று கூறிய அவர், நுகர்வோர் குறை தீர்க்கும் மையத்தில் வழக்குத் தொடுக்கலாம். மருத்துவ செலவு பற்றி ஆய்வு செய்து நிரூபிக்க வேண்டும் என்றார்.

எங்கெல்லாம் ஏமாற்றப்படுகிறோம்
மாத்திரையில் தொடங்கி லேப், ஸ்கேன் என ஒவ்வொரு இடத்திலும் எவ்வாறு ஏமாற்றப்படுகிறோம் என்று விளக்கினார் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள். மருந்து ஒன்றுதான் ஆனால் விலைதான் வேறுபடுகிறது.
மெடிக்கல் ரெப்பரசென்டேவிவ்கள் டாக்டர்களுக்கு கமிசன் தருகின்றனர். இன்றைக்கு பெரும்பாலான டாக்டர்கள் கமிஷன் வாங்குகின்றனர் என்றனர் பார்மா துறையில் பணிபுரிந்த வெங்கடேஸ், அஜீத்.
வெளிநாட்டு மருந்துகள் டாக்டர்களுக்கு தேவையான பரிசுகளைக் கொடுத்து அவர்களின் விலை உயர்ந்த மருந்துகளை எழுதவேண்டும் என்று நிர்பந்திக்கின்றனர். மருத்துவர்களும் கமிசனுக்கு ஆசைப்பட்டு ஏழை மக்கள் என்றும் பார்க்கமால் விலை உயர்ந்த மருந்துகளை எழுதுகின்றனர்.

கோடி கோடியாய் செலவு….
75 லட்சம், ஒரு கோடி என்று செலவு செய்து படித்துவிட்டு அதை வசூல் செய்யும் வசூல் ராஜாக்களாக மாறிவிடுகின்றனர் மருத்துவர்கள். கன்சல்டிங் பீஸ், மாத்திரையில் கமிஷன், லேப், ஸ்கேன்சென்டரில் கமிஷன் என மொத்தமாக வசூல் செய்துவிடுகின்றனர்.

அரசு மருத்துவமனைகள் அழகாகுமா?
தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியா முழுவதும் அரசு மருத்துவமனைகளை விடுத்து தனியார் மருத்துவமனைகளை நாடுவதற்கு காரணம் அதன் பிரம்மாண்டமும், அழகும்தான். அரசு மருத்துவமனைகள் சுத்தமில்லாமல் இருப்பதும், ஒருவித அறுவெருக்கத்தக்க வாசனையோடும் இருப்பதும் மக்களை தனியார் மருத்துவமனைகளை நாடவைக்கிறது. இதனாலேயே காசுகளை கறந்துவிடுகின்றன தனியார் மருத்துவமனைகள். எனவே உலகத்தரம் வாய்ந்த சிகிச்சைகள் அரசு மருத்துவமனைகளில் அளிக்கப்பட்டாலும் அந்த மருத்துவமனைகளை சுத்தமாக பராமரிக்கவேண்டும் என்பதும் பெரும்பாலோனோரின் கோரிக்கை.
இந்த நிகழ்ச்சியில் பேசியது ஒரு சதவிகிதம்தான்... ஆனால் தனியார் மருத்துவமனைகளை நாடும் 100 சதவிகித மக்கள் சொத்துக்களை விற்றும், பணத்தை இழந்தும் கடைசிவரை உயிரோடு மீட்க முடியாமல் போவதுதான் சோகம்....


Click it and Unblock the Notifications











