10 வருஷத்தில 20 கார் வாங்குனேன்… நீயா நானாவில் சொன்ன புதுப்பணக்காரர்
பணம் சம்பாதித்ததவர்கள் என்னவெல்லாம் செய்வார்கள் என்பதை இந்தவாரம் நீயா நானா நிகழ்ச்சியில் சொன்னது கொஞ்சம் ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது.பெரிய வீடு மூன்று சிட் அவுட்... அதில் பெரியதாக பொறிக்கப்பட்ட பெயர்... கார் மீது கொண்ட மோகத்தால் 10 ஆண்டில் 20 கார் வாங்கினேன் என்றார் ஒருவர்... குழந்தைகளுக்கு ஒரு ஹோம் தியேட்டர்... வீடு முழுக்க கிரானைட்... என அடுக்கினார் மற்றொருவர். வீட்டில் வாங்கி குவித்துள்ள ஆடம்பரப் பொருட்களையும் பட்டியலிட்டனர்.
மனித வாழ்க்கையில் பணம் மிகப்பெரிய பங்களிப்பை தருகிறது. சிலருக்கு பணம் சம்பாதிக்கத் தெரிகிறது. ஆனால் அதை முறையாக பாதுகாக்கத் தெரிவதில்லை.
பரம்பரை பணக்காரர்களாக இருந்தவர்கள் கூட திடீரென ஏழைகளாக மாறும் நிலை ஏற்படுகிறது. அதேசமயம் ஏழையாக இருந்தவர்கள் திடீரென பணக்காரர்களாக மாறிவிடுகின்றனர். அவ்வாறு உயர்ந்த பின்னர் அவர்களின் தோரணையே மாறிவிடுகிறது.
இந்த வாரம் விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சியில் பணக்காரர்களாக இருந்து வீழ்ந்தவர்களும், ஏழையாக இருந்து பணக்காரர்களாக மாறியவர்களும் தங்களின் இப்போதைய நிலை பற்றி பேசினார்கள்.

பணத்தை தவற விட்டேன்
பணம் இருந்தபோது செலவழிக்கத் தெரியாமல் அனைத்தையும் இழந்து தவிப்பதாக கூறினர் வாழ்ந்து கெட்டவர்கள். பணம் இருந்த போது ஒருமாதிரியாகவும் பணம் இல்லாத போது வேறொரு மாதிரியாகவும் தங்களை இந்த சமூகம் மதிக்கிறது என்று கூறினார்கள் வீழ்ந்தவர்கள்.

ஆடம்பரத்தில் திளைக்கிறோம்
அதேபோல பணம் வந்த பின்னர் ஆடம்பரப் பொருட்களை வாங்குவது அதிகரித்து வருகிறது. அதைத்தான் இப்போது பணக்காரர்கள் ஆனவர்கள் செய்கின்றனர்.

நான் எப்படி இருக்கேன் பார்
ஏழையாக இருந்த போது ஏளனம் செய்தவர்களுக்கு மத்தியில் பணம் சம்பாதித்த பின்னர் தான் எப்படி இருக்கிறேன் பார் என்பதை காண்பிக்கவே ஆடம்பரமாக நடந்து கொள்வதாக கூறினார் திடீர் பணக்காரர்கள்.

மனிதனை அளக்கும் அளவுகோல்
பணம்தான் மனிதர்களை அளக்கும் அளவுகோல் என்பது அதை இழந்த பின்னர்தான் தெரிந்தது என்றார் நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய பெண் ஒருவர். இதன் காரணமாகவே வெளியே எங்கும் செல்வதில்லை. வீட்டிற்குள் முடங்கி கிடக்கிறோம் என்றார் மற்றொருவர்.

எப்போதும் ஒரே மாதிரி
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர் சுரேஷ், வாழ்ந்தாலும் சரி, வீழ்ந்தாலும் சரி எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கவேண்டும் என்றார். உச்சத்தில் இருந்த போது எப்படி மதித்தார்கள். பின்னர் வாய்ப்பே கிடைக்காமல் இருந்தபோது எந்த அளவிற்கு புறக்கணிப்பிற்கு ஆளாக நேரிட்டது என்று கூறினார்.

நேர்மறை எண்ணங்கள் வேண்டும்
தனக்குள் இருந்த பாஸிட்டிவ் எனர்ஜிதான் தன்னை இந்த அளவிற்கு முன்னேற்றியது என்றார். எனவே நேர்மறையான எண்ணங்கள் இருந்தால் எத்தகைய ஏற்றத்தாழ்வுகள் வந்தாலும் எதுவும் செய்ய முடியாது என்றார்.

சேமிக்கத் தெரியணும்
சம்பாதிப்பது மட்டுமே முக்கியமில்லை. அதை எப்படி சேமிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளவேண்டும் என்றார் சிறப்பு விருந்தினரான நிதி ஆலோசகர் புகழேந்தி. சம்பாதிக்க தெரிந்தவர்களுக்கு சேமிக்கத் தெரியவில்லை, வரவுக்கு மேலே செலவு செய்பவர்கள் பணத்தை இழக்கின்றனர் என்றார். அதேபோல பணம் சம்பாதிப்பது ஒரு போதை அதனாலேயே ரிஸ்க் எடுக்கின்றனர். நாளை என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது. எனவே பணத்தை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவேண்டும்.
நிலையான முதலீடுகள் இருந்தால் ஏற்றத்தாழ்வுகளை சமாளிக்க முடியும்.பணம் விசயங்களை குடும்பங்களில் பேசுங்கள் அதுதான் எல்லோருக்கும் பாதுகாப்பானது என்றார் புகழேந்தி.

போலித்தனம் வேண்டாமே
மனதளவில் செல்லவந்தனாக இருப்பதுதான் உண்மையான சொத்து. சொத்தும், நகையும் மட்டுமே மனிதர்களை எடைபோடும் அளவுகோல் என்றால் அது போலித்தனமானது.
தேவையில்லாத பொருட்களை வாங்கி சேகரித்தால் தேவையற்ற பொருட்களை விற்க வேண்டியிருக்கும் என்ற வாரன் பஃப்பெட் கருத்துக்களுடன் நிகழ்ச்சியை முடித்தார் கோபிநாத்.

வாரன் பஃப்பெட் சொல்வதைக் கேளுங்க
உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரரான வாரன் பஃப்பெட் தனது சுய சரிதையில் பணத்தைப் பற்றியும், எவ்வாறு செலவு செய்யவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். நீயா நானா பார்த்த உடன் அவரது வார்த்தைகள் தான் நினைவுக்கு வந்தது. இதை அனைவரும் தெரிந்து கொள்வதில் தவறொன்றுமில்லை.
பணம் மனிதனை உருவாக்கவில்லை, மனிதன்தான் பணத்தை உருவாக்கினான். எவ்வளவு எளிமையாய் வாழமுடியுமோ அவ்வளவு எளிமையாய் வாழுங்கள்.

தேவையற்ற செலவு வேண்டாமே
பெரிய கம்பெனியின் தயாரிப்பு என்பதற்காக எதையும் வாங்காதீர்கள். உங்களுக்கு சௌகரியப்படும் பொருட்கள் எங்கு கிடைத்தாலும், எவ்வளவு விலையிலும் வாங்கி அணியுங்கள்.
தேவைப்படும் செலவுகளைத் தவிர வேண்டாத செலவுகளைச் செய்யாதீர்கள்...
இவை மிகப்பெரிய கோடீஸ்வரரின் பொன்னான வார்த்தைகள். இதை பின்பற்றினால் எல்லோருமே எளிதாக கோடீஸ்வரர் ஆகலாம் இதைத்தான் இந்த வார நீயா நானா நிகழ்ச்சியும் உணர்த்தியது.


Click it and Unblock the Notifications











