Pandian stores 2: கதிரை அடித்து துவைத்த குமரன்.. ராஜியிடம் எரிந்து விழுந்த கதிர்!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியல்களில் ஒன்றாக மாறியுள்ளது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல். இந்தத் தொடரில் கட்டுக்கோப்பாக தன்னுடைய குடும்பத்தை வைத்து வருகிறார் பாண்டியன். ஆனால் அவரது விருப்பத்திற்கு எதிராக குடும்பத்திற்கு தெரியாமல் தான் விரும்பிய மீனாவை திருமணம் செய்கிறார் செந்தில். இதனால் குடும்பத்தினர் மிகுந்த அதிர்ச்சியையும் அவமானத்தையும் எதிர்கொள்கின்றனர். மேலும் தான் பகையாளியாக கருதும் முத்துவேல் குடும்பத்தினரும் அவமானப்படுத்துவதை பாண்டியனால் பொருத்துக் கொள்ள முடியவில்லை. இதனால் அவர் மிகுந்த ஆத்திரமும் மன உளைச்சலும் பெறுகிறார்.
இருந்தபோதிலும் மீனாவின் நல்ல பண்புநலன்களால் ஈர்க்கப்பட்டு அவரை மருமகளாக ஏற்றுக் கொள்கிறார். தன்னுடைய மகன் செந்திலையும் மன்னிக்கிறார். இதனிடையே சந்தர்ப்ப சூழலால் தன்னுடைய மகன் கதிருக்கும் அண்ணன் மகள் ராஜிக்கும் திருமணம் செய்கிறார் கோமதி. இதை ஏற்க முடியாமல் மிகுந்த கோபமடையும் பாண்டியன் தன்னுடைய மகன் கதிர் தன்னுடைய மகனே இல்லை என்று கூறுகிறார். முன்னதாக ராஜியின் பணம் மற்றும் நகைகளை கதிர்தான் எடுத்து சென்றதாக முத்துவேல் குடும்பத்தினர் குற்றம் சாட்டியதையடுத்து அந்தப் பணத்தை கொடுக்குமாறு பாண்டியன் கூற, அவரிடம் கதிர் கோபப்பட்டதும் இதற்கு காரணம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடர்: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் தொடர்ந்து அடுத்தடுத்த பரபரப்பான எபிசோட்களால் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு துவங்கப்பட்ட இந்த சீரியல் தொடர்ந்து டிஆர்பியிலும் நான்காவது இடத்தை தக்க வைத்து வருகிறது. இதன் முதல் சீசனும் அதிகமான டிஆர்பி புள்ளிகளுடன் முன்னணியில் இருந்த நிலையில் தற்போது இந்த சீசனும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. முதல் சீசனில் அண்ணன் -தம்பிகளின் பாசத்தை மையமாகக் கொண்டு வெளியான இந்த தொடர் தற்போது அப்பா மற்றும் மகன்களின் பாசத்தை முன்னிலைப்படுத்தி வருகிறது.
கதிர் -ராஜி திருமணம்: இந்த சீரியலில் பாண்டியன் மற்றும் கோமதி தம்பதிகள் மற்றும் அவர்களின் மகன் மற்றும் மகள்கள் இவர்களை சுற்றி கதைகளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 28 ஆண்டுகளுக்கு முன்பு தான் காதலித்த பாண்டியனை வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொண்ட கோமதி தற்போது வரை தன்னுடைய அண்ணன்கள் மற்றும் அம்மாவின் பாசத்தை பெற முடியாமல் தவித்து வருகிறார். இந்நிலையில் தன்னுடைய அண்ணன் மகள் ராஜியும் தன்னைப் போலவே வீட்டை விட்டு வெளியேறி காதலனால் ஏமாற்றப்படும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டதை பார்த்து அதிரடியாக தன்னுடைய மகன் கதிருக்கும் ராஜிக்கும் திருமணம் செய்து வைக்கிறார்.
கோமதி அதிரடி முடிவு: இதன் மூலம் ராஜியின் வாழ்க்கையை காப்பாற்றவும் தன்னுடைய அண்ணன்களின் கௌரவத்தை மீட்டெடுக்கவும் அவர் திட்டமிடுகிறார். ஆனால் ராஜி மற்றும் கதிரின் திருமணத்தை அவரது அண்ணன்கள் முத்துவேல், சக்திவேல் உள்ளிட்டோர் ஏற்க மறுக்கின்றனர். ராஜியை தலைமுழுகுவதாக கூறுகின்றனர். மேலும் ராஜி வீட்டிலிருந்து எடுத்துச் சென்ற 100 சவரன் நகை மற்றும் பணத்தை கதிர் ஏமாற்றியதாகவும் இதற்கு உடந்தையாக பாண்டியன் இருந்ததாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த குற்றச்சாட்டை பாண்டியனால் ஏற்க முடியவில்லை.

அவமானத்தில் பாண்டியன்: 28 ஆண்டுகளுக்கு முன்னதாக கோமதியை காதலித்து திருமணம் செய்த போதும் தன்னுடைய கையில் ஒரு பைசா இல்லாத போதும் அவர், கோமதியின் அண்ணன்களின் பணத்தை எதிர்பார்க்காத நிலையில் தற்போது தான் சிறப்பாக வாழ்ந்து வரும் சூழலில் அந்த பணத்தை எடுத்ததாக கூறப்படுவதை அவரால் ஜீரணிக்க முடியவில்லை. இதையடுத்து தன்னுடைய மகன் கதிரை அந்த பணம் மற்றும் நகையை திருப்பிக் கொடுக்குமாறு வலியுறுத்துகிறார். ஆனால் ராஜியின் காதலன் கண்ணன் இந்த நகை மற்றும் பணத்தை எடுத்துக் கொண்டு ஓடி விட்டதால் கதிரால் எதுவும் சொல்ல முடியவில்லை.
பழியை ஏற்கும் கதிர்: தன்னுடைய அம்மாவை காப்பாற்றும் வகையில் கதிர் தன்னுடைய அப்பாவின் வெறுப்பை சம்பாதிக்கிறார். இந்நிலையில் கதிரை வழியில் பார்க்கும் ராஜியின் அண்ணன் குமரன் பணம் மற்றும் நகையை கேட்டு அவரை அடித்து துவைக்கிறார். இவ்வாறாக இந்த வார பிரமோ அமைந்துள்ளது. உடம்பெங்கும் காயங்களுடன் வீட்டிற்கு வரும் கதிரிடம் ராஜி தன்னுடைய அண்ணனின் செயலுக்காக மன்னிப்பு கேட்கிறார். ஆனால் அவன் ராஜியை திருமணம் செய்ததற்காக தன்னை அடிக்கவில்லை என்றும் பணம் மற்றும் நகையை கேட்டு மீண்டும் மீண்டும் தன்னை அடித்ததாகவும் கதிர் கோபத்துடன் கூறுகிறார். ராஜியையும் திட்டி தீர்க்கிறார். இந்த பிரமோவையொட்டி அடுத்த வார எபிசோட்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











