Sangamam episodes: திருமணம் முடிந்து வீடு வந்த கதிர் -ராஜி.. அடிக்கப் பாய்ந்த முத்துவேல் குடும்பத்தினர்!
சென்னை: விஜய் டிவியின் சீரியல்கள் அடுத்தடுத்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. அந்த வகையில் சேனலில் முதல் ஐந்து இடங்களில் இடம்பெற்றுள்ள பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடர்களின் சங்கமம் எபிசோடுகள் தற்போது ஒளிபரப்பாகி வருகின்றன. இந்த இரு சீரியல்களுமே தனித்தனியாக ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து அதிக டிஆர்பி புள்ளிகளை பெற்று வரும் நிலையில் இரண்டு சீரியல்களும் இணைந்து தற்போது சங்கமம் எபிசோடுகளாக ஒளிபரப்பாகி வருவது ரசிகர்களுக்கு மேலும் சுவாரசியத்தை கூட்டி உள்ளது. தற்போது கதிர் மற்றும் ராஜியின் திருமணத்தை ஒட்டி நடந்து வரும் பரபரப்புகள் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.
காதலனால் கைவிடப்பட்டு தற்கொலைக்கு முயற்சிக்கும் தன்னுடைய அண்ணன் மகளின் வாழ்க்கையையும் தன்னுடைய அண்ணன்களின் கௌரவத்தையும் நினைத்து கோமதி அதிரடியான முடிவை எடுக்கிறார். தன்னுடைய மகன் கதிருக்கும் அண்ணன் மகள் ராஜிக்கும் திருமணம் செய்து வைக்க நினைத்து அதற்காக தன்னுடைய மகனை சம்மதிக்க வைக்கிறார். முதலில் ஒப்புக் கொள்ளாவிட்டாலும் பின்னர் தன்னுடைய தந்தையை நினைத்து இந்த திருமணத்திற்கு ராஜியும் தலையாட்ட அவர்களது திருமணம் பாக்கியா தலைமையில் நடந்து முடிகிறது. இதனால் ஏற்படும் அடுத்தடுத்த குழப்பங்கள் வரும் வாரத்தில் ஒளிபரப்பாகவுள்ளது. இதையொட்டிய பிரமோ தற்போது வெளியாகியுள்ளது.

சங்கமம் எபிசோட்கள்: விஜய் டிவியில் சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகள் இரண்டுக்குமே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. சீரியல்கள் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வரும் விஜய் டிவி சேனல். சன் டிவிக்கு அடுத்தபடியாக சீரியல்களில் இரண்டாவது இடத்தை பிடித்து மாஸ் காட்டி வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை, ஆஹா கல்யாணம், பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ஆகிய தொடர்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. இந்நிலையில் தற்போது பாக்யலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்களின் சங்கமம் எபிசோடுகள் கடந்த சில தினங்களாக சேனலில் ஒளிபரப்பாகி வருகிறது.
பாக்கியா சமையல் கான்டிராக்ட்: அமைச்சரின் மூலம் மாநாட்டிற்கான சமையல் கான்ட்ராக்ட் பெற்ற பாக்கியலட்சுமி, அதற்காக திருச்செந்தூர் சென்ற நிலையில் அங்கு சாமி கும்பிட வந்த கோமதி மற்றும் அவரது குடும்பத்தினருடன் முதலில் மோதலும் பிறகு சிறப்பான நட்பும் ஏற்படுகிறது. அந்த வகையில் பாக்யலட்சுமி தன்னுடைய சமையல் கான்ட்ராக்டில் ஆட்கள் பற்றாக்குறையால் கஷ்டப்பட்ட நேரத்தில் அவருக்கு சிறப்பாக கை கொடுக்கிறார் கோமதி. அந்த விஷயத்தில் தன்னுடைய மகன் மற்றும் மருமகளையும் ஈடுபடுத்துகிறார். இதையடுத்து தன்னுடைய சமையல் கான்ட்ராக்ட்டை சிறப்பாக முடித்து அமைச்சரிடம் பாராட்டும் பெறுகிறார் பாக்கியலட்சுமி.
கோமதியின் அதிரடி முடிவு: இதையடுத்து கோமதியின் அண்ணன் மகள் ராஜி திருமணத்தின்போது வீட்டை விட்டு ஓடுவதும் அதனால் கோமதி மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைவதும் நடக்கிறது. அந்த வகையில் ராஜி குறித்து கோமதி மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகிறார். 28 வருடங்களுக்கு முன்பு தான் செய்த அதே தவறை தற்போது தன்னுடைய அண்ணன் மகளும் செய்து தன்னுடைய அண்ணன்களுக்கு மீளாத துயரத்தை கொடுத்துள்ளதை நினைத்து அவர் மருகுகிறார். பாக்கியலட்சுமி மூலம் தன்னுடைய அண்ணன் மகள் தன்னுடைய காதலனுடன் தான் தங்கி இருந்த அதே ஹோட்டலில் இருந்தது தெரிய வருகிறது.

எஸ்கேப் ஆன காதலன்: ராஜியின் திருமணத்திற்கு முந்தைய நாள் அவளை வீட்டிலிருந்து யாருக்கும் தெரியாமல் கூட்டிவந்த ராஜியின் காதலன் கண்ணன், அவளுக்கு தெரியாமல் அவளது வீட்டிலிருந்து எடுத்துவந்த பணம் மற்றும் நகையுடன் எஸ்கேப் ஆகிறார். இதனால் ஏமாற்றம், ஆத்திரம் மற்றும் குழப்பத்தில் இருக்கும் ராஜியை மீட்டு அடைக்கலம் கொடுக்கிறார் பாக்யா. இதனிடையே பாக்யா மூலம் ராஜி குறித்து கோமதிக்கு தெரியவருகிறது. தன்னுடைய அண்ணன் மகளின் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என்று மிகுந்த துயரத்தில் ஆள்கிறார் கோமதி. இதனிடையே அதிரடியாக அவர் ஒரு முடிவெடுக்கிறார்.
கதிர் -ராஜி திருமணம்: தன்னுடைய மகன் கதிர் மற்றும் ராஜிக்கு திருமணம் செய்து வைக்க அவர் முற்படுகிறார். கதிரும் ராஜியம் முன்னதாக எலியும் பூனையுமாக சண்டையிட்டுக் கொண்டிருந்த நிலையில் இந்த திருமணம் அவர்களுக்கு ஏற்றுக்கொள்ளாததாக இருக்கிறது. ஆனாலும் தன்னுடைய அம்மா தன்னுடைய காலில் விழுந்து கதறியதை நினைத்து கதிர் இந்த திருமணத்திற்கு ஒப்புக்கொள்கிறார். ராஜியும் தன்னுடைய அப்பாவை நினைத்து திருமணத்திற்கு சம்மதிக்கிறார். அவர்களது திருமணம் கோயிலில் எளிமையாக நடக்கிறது. இதனிடையே இவர்கள் இருவரையும் ஊருக்கு கொண்டு வந்து சேர்க்கும் பொறுப்பை பாக்யாவிடம் கேட்கிறார் கோமதி.
ஊர் திரும்பிய கதிர் -ராஜி: அவரும் சம்மதிக்க முன்னதாக எதுவும் தெரியாதது போல கோமதி ஊருக்கு செல்கிறார். தொடர்ந்து கதிர் மற்றும் ராஜியை பாக்யா ஊருக்கு அழைத்து வருகிறார். அங்கே ராஜியின் அப்பா மற்றும் அவரது சொந்தங்கள் இணைந்து கதிரை அடிக்க பாய்கின்றனர். அப்போது வீட்டில் இருந்து எடுத்துச் சென்ற நகையும் பணமும் எங்கே அதை உன்னுடைய அப்பாவிடம் கொடுத்து விட்டாயா என்று அவர்கள் அவமானப் படுத்துகிறார்கள். இதனால் ஆத்திரமடையும் பாண்டியன் அங்கே வந்து தன்னுடைய மகன் கதிரை அடித்து துவைப்பதாக அடுத்த வாரத்திற்கான பிரமோ வெளியிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











