Sangamam episode: ராஜியை தலைமுழுகிய முத்துவேல் குடும்பத்தினர்.. அவமானத்தில் குறுகிய பாண்டியன்!
சென்னை: விஜய் டிவியின் அடுத்தடுத்த சீரியல்கள் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்து வருகிறது. அந்த வகையில் டிஆர்பியில் அதிக புள்ளிகளை பெற்று சேனலில் முதல் ஐந்து இடங்களில் இடம்பெற்றுள்ள பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்களின் சங்கமம் எபிசோடுகள் கடந்த சில நாட்களாக ஒளிபரப்பாகி வருகிறது. ரசிகர்களையும் சிறப்பாக கவர்ந்து வருகிறது. தனித்தனியாக பார்ப்பது சந்தோஷம் என்றால் சங்கமமாக பார்க்கும்போது அதற்கேற்ப கதையில் மாற்றங்கள் இருக்கும் என்பதால் இத்தகைய சங்கமம் எபிசோட்களை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அந்த வகையில் பாக்யா மற்றும் கோமதி இருவரும் திருச்செந்தூரில் சந்தித்து நண்பர்களாக மாறுவதாக இந்த சங்கமம் எபிசோடில் காணப்பட்டது. சமையல் கான்ட்ராக்டில் ஆட்கள் போதாமல் பாக்கியா தவித்த நிலையில் கை கொடுக்கிறார் கோமதி. இதேபோல கோமதியின் அண்ணன் மகள் ராஜியின் திருமணத்தில் ஏற்பட்ட பிரச்சனையை தீர்ப்பதற்கு கோமதிக்கு பாக்யா உதவி செய்வதாக கடந்த சில நாட்களாக அடுத்தடுத்த எபிசோட்கள் காணப்பட்டன. இந்நிலையில் கோமதியின் மகன் அண்ணன் மகளின் திருமணம் நடக்க பாக்கியா உதவி செய்கிறார். அவர்களின் திருமணம் முடிந்து தற்போது அவர்களை குன்னக்குடிக்கு அழைத்து வந்து குடும்பத்தினரிடம் ஒப்படைக்கிறார் பாக்யா.

சங்கமம் எபிசோட்கள்: விஜய் டிவியில் ரசிகர்களின் ஃபேவரைட் சீரியல்களான பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்களின் சங்கமம் கடந்த சில தினங்களாக நடந்து வருகிறது. இதில் சிறிய மோதலுக்குப் பிறகு பாக்யா மற்றும் கோமதி குடும்பத்தினர் திருச்செந்தூரில் நண்பர்களாக மாறுகின்றனர். அப்போது சமையல் கான்ட்ராக்டில் ஆட்கள் போதாக் குறையால் தவித்துக் கொண்டிருந்த பாக்யாவிற்கு சரியான நேரத்தில் கைக்கொடுக்கிறார் கோமதி. இதேபோல கோமதியும் ஒரு இக்கட்டில் சிக்கிக் கொள்ள பெரிய அளவில் அவருக்கு உதவியாக இருக்கிறார் பாக்யா. இந்த சங்கமம் எபிசோடுகளில் ரசிகர்களை கவரும் பல்வேறு அம்சங்களை காண முடிந்தது.

தடைபட்ட ராஜியின் திருமணம்: கோமதியின் அண்ணன் மகள் ராஜி, திருமணத்திற்கு முன் தினம் தன்னுடைய காதலனுடன் சேர்ந்து வீட்டை விட்டு வெளியேறுகிறார். அவருக்கு பிடிக்காத திருமணத்தை பெற்றோர் நிச்சயித்ததால் இந்த முடிவுக்கு அவர் வருகிறார். மேலும் ராஜி இல்லை என்றால் தான் தற்கொலை செய்து கொள்வேன் என்று அவரது காதலன் கண்ணன் மிரட்டியதும் அவர் வீட்டை விட்டு வெளியேற காரணமாக அமைகிறது. இதனால் ராஜியின் திருமணம் நிற்க, கோமதியின் அண்ணன்கள் முத்துவேல் மற்றும் சக்திவேல் இருவரும் அவமானத்தால் கூனிக் குறுகுகின்றனர்.

ராஜியை விட்டு ஓடிய காதலன்: இந்நிலையில் திருச்செந்தூருக்கே ராஜி மற்றும் அவரது காதலன் இருவரும் வருகின்றனர். அதிலும் கோமதி தங்கியிருக்கும் ஹோட்டலிலேயே அவர்களும் தங்குகின்றனர். இதனிடையே ராஜிக்கு தெரியாமல் அவரது வீட்டில் இருந்து எடுத்து வந்த பணம் மற்றும் நகையுடன் கண்ணன் அவரை தனியாக தவிக்க விட்டு ஓடிவிடுகிறார். இதையடுத்து நட்ட நடு ரோட்டில் தனிமையாக பரிதவிக்கும் ராஜியை மீட்கும் பாக்யா, அவருக்கு அடைக்கலம் கொடுப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு எபிசோடுகளில் காணப்பட்டன. பாக்கியா மூலம் ராஜி குறித்து அறிந்து கொள்ளும் கோமதி, தன்னுடைய அண்ணன் மகள் வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனையை தீர்ப்பதற்காகவும் அண்ணன்களின் கௌரவத்தை காப்பதற்காகவும் அதிரடியாக ஒரு முடிவு எடுக்கிறார்.

கதிர் -ராஜி திருமணம்: தன்னுடைய மகன் கதிருக்கு ராஜியை திருமணம் செய்து வைக்கிறார் கோமதி. இந்த திருமணத்திற்கு மறுக்கும் மகன் கதிரை, காலில் விழுந்து சம்மதிக்க வைக்கிறார். இதனிடையே பாக்யாவின் உதவியுடன் ராஜி மற்றும் கதிரின் திருமணம் நடந்து முடிகிறது. மேலும் அவர்களை வீட்டிற்கு அழைத்து வந்து ஒப்படைக்கும் பொறுப்பையும் கோமதி பாக்கியவிடம் வேண்டுகிறார். இதற்கு சம்மதித்து அவர்கள் இருவரையும் வீட்டிற்கு அழைத்து வருகிறார் பாக்யா. மகளை காணாமல் பரிதவித்து வந்த முத்துவேல் தன்னுடைய பகையாளியாக கருதும் பாண்டியனின் மகனை ராஜி திருமணம் செய்தது குறித்து ஆத்திரம் அடைந்து அவனை வெட்ட பாய்கின்றனர்.
ஆத்திரத்தில் முத்துவேல் குடும்பம்: மேலும் தாலியை கழற்றி போட்டுவிட்டு ராஜியை வீட்டுக்குள் வருமாறு அவரது அப்பா முத்துவேல் கூறுகின்றார். ஆனால் இதற்கு ராஜி சம்மதிக்காத நிலையில் அவளை தலைமுழுகுவதாக முத்துவேல் கூறுகிறார். மேலும் தனக்கு ஒரு மகள் இருப்பதையே தான் மறந்து விடுவதாகவும் தெரிவிக்கிறார். சமாதானம் பேச முயலும் பாக்யாவின் செயலும் அங்கு எடுபடாமல் போகிறது. அந்த திருமணத்திற்கு வந்திருந்த ராதிகா, கோபி மற்றும் இனியா ஆகியோரும் பாக்யாவின் இந்த செயலால் அதிர்ச்சி அடைகின்றனர். வீட்டிலிருந்து எடுத்துச் சென்ற நகை மற்றும் பணத்தை கதிர் அவரது அப்பா பாண்டியனிடம் கொடுத்து விட்டதாக முத்துவேல் மற்றும் சக்திவேல் குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.
அவமானத்தில் பாண்டியன்: இதனால் பாண்டியன் அவமானத்தால் நொருங்கிப் போகிறார். தன்னுடைய மகனால் தனக்கு ஏற்பட்ட இந்த அவமானத்தை நினைத்து அவர் கூனிக் குறுகுகிறார். தனக்கு அப்படிப்பட்ட நிலை ஏற்படாது என்றும் அவர் கோபத்துடன் கூறுகிறார். ஆனாலும் தொடர்ந்து முத்துவேல் குடும்பத்தினர் அவரை அவமானப்படுத்துகின்றனர். இதனிடையே பாக்யாவின் வேண்டுகோளை கேட்டு கதிர் மற்றும் ராஜியை வீட்டிற்குள் அனுமதிக்கின்றனர். அவர்களிடம் சொல்லிவிட்டு பாண்டியனிடமும் அவரது மகனையும் மருமகனையும் ஏற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்திவிட்டு அங்கிருந்து பாக்யா செல்வதாக இன்றைய எபிசோடு காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications











