இவ்வளவு பிரம்மாண்டமா நடக்க இருக்கா பிக்பாஸ் 8.. வெளியான பிரமோ.. ஆனாலும் டயலாக்கை மாத்த மாட்டேங்குறாரே
சென்னை: நடிகர் விஜய் சேதுபதி புதிய ஹோஸ்ட்டாக இணைந்துள்ள பிக்பாஸ் தமிழ் 8 ஷோ இன்றைய தினம் மிகவும் பிரம்மாண்டமாக துவங்கவுள்ளது. இதற்கான அடுத்தடுத்த பிரமோக்களை விஜய் டிவி தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. சமூக வலைதளப்பக்கம் சென்றாலே, ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்று விஜய் சேதுபதிதான் கையை நீட்டிக் கொண்டிருக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் பங்கேற்கவுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், தர்ஷா குப்தா, தயாரிப்பாளர் ரவீந்திரன், நடிகர் ரஞ்சித், சின்னத்திரை நடிகை அர்ஷிதா, சீனியர் நடிகை ஐஸ்வர்யா பாஸ்கரன், தொகுப்பாளினி ஜாக்குலின், மக்காமிஷி பாடலை எழுதிய பால் டப்பா எனப்படும் அனீஷ் உள்ளிட்டவர்கள் பங்கேற்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பிக்பாஸ் 8 ஷோ: விஜய்டிவியின் முன்னணி நிகழ்ச்சியாக 7 சீசன்களை கடந்துள்ளது பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் கடந்த 7 சீசன்களிலும் ஹோஸ்ட்டாக இருந்தவர் கமல்ஹாசன். இந்நிலையில் இன்றைய தினம் இந்த நிகழ்ச்சியின் 8வது சீசன் துவங்கவுள்ளது. இந்த சீசனிலிருந்து நடிகர் கமல்ஹாசன் விலகியுள்ள நிலையில், அடுத்த ஹோஸ்ட்டாக நடிகர் விஜய் சேதுபதி இணைந்துள்ளார். இந்த நிகழ்ச்சியின் அடுத்தடுத்த பிரமோக்கள் பட்டையை கிளப்பி வரும் நிலையில், இன்று மாலை இந்த நிகழ்ச்சி மிகவும் பிரம்மாண்டமாக தன்னுடைய பயணத்தை துவங்கவுள்ளது. இதற்கான சூட்டிங் முன்னதாகவே நிறைவடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஹோஸ்ட் விஜய் சேதுபதி: இந்த நிகழ்ச்சி விஜய் டிவியின் முக்கியமான மற்றும் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த நிகழ்ச்சியாக காணப்படும் நிலையில், இன்றைய தினம் பிரம்மாண்ட துவக்கவிழாவுடன் துவங்கவுள்ள இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இவர்கள் ஒவ்வொருவராக நிகழ்ச்சியின் ஹோஸ்ட் விஜய் சேதுபதி சிறப்பான அறிமுகத்துடன் பிக்பாஸ் வீட்டில் அனுப்பி வைக்கவுள்ளார். இந்த சீசனில் பிக்பாஸ் வீடு மேலும் பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பிக்பாஸ் புது வீடு ரொம்ப அழகாக இருக்கு என்று பிரமோவில் பேசியிருந்தார் விஜய் சேதுபதி.
பிக்பாஸ் 8 புதிய பிரமோ: அடுத்தடுத்த பல பிரமோக்களை விஜய் டிவி வெளியிட்டு வரும் நிலையில், நேற்றைய தினம் வெளியான இந்த பிரமோவில் பிக்பாஸ் வீட்டின் லுக் மட்டுமில்லாமல் விஜய் சேதுபதியின் லுக்கும் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது. மீசை, தாடி இல்லாமல் விஜய் சேதுபதி இந்த புதிய லுக்கில் காணப்பட்டார். இதனிடையே இன்றைய தினமும் புதிய பிரமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. பிரம்மாண்டமான இந்த நிகழ்ச்சியில் பாரம்பரிய நடனக் கலைஞர்கள் சூழ படியேறி வரும் விஜய் சேதுபதி, இந்த நிகழ்ச்சிக்கான ட்ரேட்மார்க் புன்னகையை வெளிப்படுத்த தவறவில்லை.
பிரம்மாண்ட துவக்கம்: தொடர்ந்து ரசிகர்களுடன் கைக்குலுக்கியபடியே வரும் விஜய் சேதுபதி, அதே டயலாக்கை இந்த பிரமோவிலும் பேசுவதாக அமைந்துள்ளது. புது வீடும் ரெடி, புது ஆளுங்களும் ரெடி, புது ஹோஸ்ட் நானும் ரெடி என்று அவர் கூறுவதாக இந்த பிரமோவில் காணப்படுகிறது. தொடர்ந்து பல நாட்களாக, சமூக வலைதளங்களை அடுத்தடுத்த பிரமோக்களால் அலறவிட்ட இந்த நிகழ்ச்சி, இன்று மாலை துவங்கவுள்ள நிலையில், அதிகமான கலைநிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











