அவங்களை கூப்பிட்டு அன்பா விசாரிக்கலாமா.. ஒரு முடிவோட தான் இருக்காரு விஜய் சேதுபதி.. பிக்பாஸ் 8 பிரமோ
சென்னை: விஜய் டிவியின் பிக்பாஸ் 8 நிகழ்ச்சியின் இன்றைய தினம் வாரயிறுதி எபிசோடிற்கான முதல் பிரமோ வெளியாகியுள்ளது. இன்றும் நாளையும் நிகழ்ச்சியின் ஹோஸ்ட் விஜய் சேதுபதி என்ன மாதிரியான அதிரடிகளை கொடுப்பார் என்றும் போட்டியாளர்களுக்கு எதிரில் நின்றுக் கொண்டு எப்படி சாட்டையை சுழற்றுவார் என்பது குறித்தும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
அவர்களது எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் தற்போது வெளியாகியுள்ள இந்த நிகழ்ச்சிக்கான பிரமோவில் நடிகர் விஜய் சேதுபதி, போன வாரத்தில் இருந்த போட்டியாளர்கள் தற்போது தங்களது செயல்பாட்டில் முன்னேற்றம் கண்டுள்ளதை சுட்டிக் காட்டியுள்ளார். அவர்கள் மேலும் போக வேண்டிய தூரத்தையும் அவர் குறிப்பிட்டு பேசியுள்ளார்.

பிக்பாஸ் தமிழ் 8 ஷோ: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியாக கடந்த 7 சீசன்களாக களைகட்டிய பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 8வது சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது. கடந்த 7 சீசன்களாக மாஸாக நிகழ்ச்சியை கொண்டு சென்ற நடிகர் கமல்ஹாசன் இந்த சீசனில் விலகிக்கொள்ள, தற்போது அவரது அந்த ஹோஸ்டிங் போஸ்டை கையிலெடுத்துள்ளார் நடிகர் விஜய் சேதுபதி. கடந்த 6ம் தேதி பிரம்மாண்டமான துவக்க விழாவுடன் துவங்கிய இந்த நிகழ்ச்சியின் புதிய ஹோஸ்டாக களமிறங்கியுள்ள விஜய் சேதுபதி, அவர் குறித்த ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் நடைபோட்டு வருகிறார்.
ஹோஸ்ட் விஜய் சேதுபதி: துவக்க விழா நிகழ்ச்சியிலேயே அனைத்து 18 போட்டியாளர்களையும் சிறப்பாக அறிமுகம் செய்து, சிலரை கட்டிப்பிடித்து அவரது ஸ்டைலில் முத்தம் கொடுத்து பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைத்தார் விஜய் சேதுபதி. அவரது பிரசென்ஸ் இந்த நிகழ்ச்சிக்கு மேலும் மெருகூட்டியுள்ளது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரயிறுதியில் தோன்றிய விஜய் சேதுபதி, அனைத்து போட்டியாளர்களையும் லெஃப்ட் ரைட் வாங்கி தன்னுடைய சாட்டையை சுழற்றினார். முதல் எவிக்ஷனாக தயாரிப்பாளர் ரவீந்தர் வெளியேறிய நிலையில், அவருக்கும் இயக்குநர் ரஞ்சித்திற்கும் இடையிலான பிணக்கையும் கட்டிப்பிடி வைத்தியம் மூலம் சரி செய்திருந்தார் விஜய் சேதுபதி.
இரண்டாவது வாரயிறுதி: இந்நிலையில் இந்த வாரத்திற்கான வாரயிறுதி நிகழ்ச்சியான இன்றும் நாளையும் விஜய் சேதுபதியின் நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் சரவெடியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வாரயிறுதி நிகழ்ச்சிகள் மிகப்பெரிய அளவில் டிஆர்பியிலும் அதிக புள்ளிகளை பெற்ற நிலையில், இந்த வாரயிறுதி நிகழ்ச்சிகளும் சிறப்பாக களைக்கட்டும் என்று எதிர்பார்க்கலாம். இதனிடையே இன்றைய தினத்திற்கான முதல் பிரமோ தற்போது வெளியாகியுள்ளது. இதில் தோன்றும் நடிகர் விஜய் சேதுபதி, போனவாரம் என்னடா இப்படி விளையாடுகிறார்கள் என்று தோன்றிய நிலையில், கடந்த வார நாட்களில் என்னடா இப்படியெல்லாம் விளையாடுறாங்க என்று போட்டியாளர்கள் தோன்ற வைத்துள்ளதாக பாராட்டியுள்ளார்.
வாரயிறுதி எபிசோடின் முதல் பிரமோ: சிறிதாக இருந்த அவர்களின் நடவடிக்கை தற்போது மிகப்பெரிய அளவில் மாற்றம் கண்டுள்ளதாகவும் ஆனால் அவர்கள் இன்னும் போக வேண்டிய தூரம் அதிகம் என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார். இதுகுறித்து இன்றிரவு அவர்களை கூப்பிட்டு என்ன ஏதுன்னு கொஞ்சம் அன்பாக விசாரிப்போமா என்றும் இந்த பிரமோவில் ட்விஸ்ட்டுடன் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் குறைவான ஓட்டுகளுடன் தர்ஷா குப்தா மற்றும் அர்ணவ் இருந்த நிலையில், அர்ணவ் இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது போட்டியாளராக எலிமினேட் ஆகியுள்ளதாக தற்போது உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











