200 முட்டை சாப்பிட்டேன்.. வயித்துல அல்சர்.. வாந்தி.. பயத்தை கிளப்பிய நீயா நானா ஷோ!
சென்னை: விஜய் டிவியின் நீயா நானா ஷோவின் இன்றைய எபிசோட் மிக சிறப்பான மற்றும் சுவாரசியமான டாபிக்குடன் களமிறங்கியுள்ளது. இதில் சாப்பாடு போட்டி வீரர்கள் மற்றும் அவர்களை விமர்சிப்பவர்கள் என்பதாக தலைப்பு காணப்பட்டது. இந்த நிகழ்ச்சியிலேயே சாப்பாட்டு போட்டியையும் கோபிநாத் அரங்கேற்றினார்.
இதனிடையே இத்தகைய சாப்பாட்டு போட்டி வீரர்களுக்கு ஏற்படும் உடல் உபாதைகள் குறித்தும் இந்த நிகழ்ச்சி எச்சரிக்கை கொடுத்துள்ளது. இத்தகைய போட்டிகளுக்காக அதிகப்படியாக சாப்பிடுபவர்கள் தொடர்ந்து உடல் உபாதைகளை சந்திப்பதை நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டது கவனத்திற்கு உள்ளாகியுள்ளது.

நீயா நானா ஷோ: விஜய் டிவியின் நீயா நானா ஷோ தொடர்ந்து ஏராளமான ரசிகர்களை பல ஆண்டு காலங்களாக கவர்ந்து மிகப்பெரிய அளவில் மாஸ் காட்டி வருகிறது. இந்த ஷோவின் மிக முக்கியமான அட்ராக்ஷனாக கோபிநாத் பார்க்கப்படுகிறார். நிகழ்ச்சியின் வெற்றிக்கும் அவர் காரணமாக அமைந்து வருகிறார். ஒவ்வொரு வாரமும் இந்த நிகழ்ச்சி மிகச் சிறப்பான தலைப்புடன் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அந்த வகையில் இந்த வாரமும் சுவாரஸ்யமான தலைப்புடன் நீயா நானா நிகழ்ச்சி களமிறங்கியுள்ளது. சாப்பாட்டு போட்டி வீரர்கள் மற்றும் அவர்களை விமர்சிப்பவர்கள் என்பதாக இந்த நிகழ்ச்சியின் இந்த வார தலைப்பு காணப்பட்டது.
சாப்பாட்டு போட்டி வீரர்கள்: இதில் சாப்பாட்டு போட்டிகளில் பங்கேற்பதற்காக அதிகமான முட்டை, சிக்கன், பானி பூரி என பலவற்றையும் சாப்பிட்டது குறித்து போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டனர். இவ்வாறு சாப்பிடுவது முதலில் சுவாரஸ்யத்திற்காக துவங்கப்பட்டு, பின்பு அதுவே பழக்கமாகிவிடும் என்று இந்த நிகழ்ச்சியில் பகிரப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் பங்கேற்ற இத்தகைய சாப்பாட்டு போட்டி வீரர்கள் சிலர், அரங்கத்திலேயே அதிகமான முட்டைகளை சாப்பிட்டு ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்தனர். இதில் போட்டியையும் நடத்தி வைத்தார் கோபிநாத்.
பாதிப்பில் சாப்பாட்டு வீரர்கள்: இந்நிலையில் இது போன்ற போட்டிகளில் பங்கேற்பவர்கள் அதனால் பாதிக்கப்படுவார்களா என்பதாக இந்த நிகழ்ச்சியின் விவாதம் சென்றது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட சாப்பாட்டு போட்டி வீரர்கள், தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். துவக்கத்தில் 200 முட்டைகள் ஏராளமான சிக்கன், 100 பானி பூரி என அடுத்தடுத்து சாப்பிட்டு தான் போட்டிகளில் பங்கேற்றதாகவும் ஆனால் இதனால் கழுத்து வரை எரிச்சல் இருக்கும் என்றும் தொடர்ந்து அல்சர் ஏற்படும் என்றும் இதனால் வாந்தி உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டதாகவும் அவர்கள் தங்களது பிரச்சினைகளை குறிப்பிட்டுள்ளனர்.
வாந்தி.. அல்சர்: சாப்பாட்டு போட்டி குறித்து மிகவும் பாசிட்டிவாக பேசிய நபரும் இதை வேறு வழியில்லாமல் ஒப்புக்கொண்டார். அவருக்கும் அல்சர் பிரச்சனை இருப்பதாகவும், சொல்ல முடியாத பல பிரச்சினைகள் தன்னுடைய உடலில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். துவக்கத்தில் சுவாரசியமாகவே துவங்கும் இந்த சாப்பாட்டு போட்டி, அடுத்தடுத்து உடல் உபாதைகளை ஏற்படுத்தும் என்றும் 200 முட்டைகளை ஒரே நேரத்தில் சாப்பிட்ட தன்னால் தற்போது ஒரு முட்டை கூட சாப்பிட முடியவில்லை என்றும் முதலில் பேசிய போட்டியாளர் தெரிவித்துள்ளார். மேலும் சிக்கனாக உள்ளே தள்ளிய தன்னால் தற்போது ஒரு தோசை கூட சாப்பிட்டு ஜீரணிக்க முடியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ரசிகர்கள் அச்சம்: அடுத்தடுத்த இவர்களது கருத்துக்கள் ரசிகர்களை அச்சத்திற்கு கொண்டு சென்றது. பல திருவிழாக்கள் உள்ளிட்ட நிகழ்வுகளில் இதுபோன்ற சாப்பாட்டு போட்டிகள் வைக்கப்பட்டு அதில் வெற்றி பெறுபவர்களை பார்த்து நாம் ஆசிரியப்படுவதுண்டு. அவர்களுக்கு இது போன்ற உடல் உபாதைகள் ஏற்படுவதை தற்போது இன்றைய நீயா நானா நிகழ்ச்சி மூலம் பலரும் தெரிந்து கொண்டுள்ளனர். எதுவுமே அளவிற்கு மிஞ்சினால் நஞ்சுதான் என்பதை தெள்ளத் தெளிவாக்கியுள்ளது இந்த நிகழ்ச்சி.


Click it and Unblock the Notifications











