Pandian stores 2: அப்பா -மகன் இடையே முற்றும் சண்டை.. அதிரடி முடிவெடுக்கும் ராஜி!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியல்களில் ஒன்றான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் அடுத்தடுத்து சிறப்பான எபிசோட்களுடன் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. பாக்கியலட்சுமி சீரியலுடன் இணைந்து இந்த சீரியலின் சங்கமம் எபிசோட்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒளிபரப்பான நிலையில் தற்போது சீரியல் அடுத்தக்கட்டத்திற்கு நகர்ந்துள்ளது. கதிர் மற்றும் ராஜி இருவருக்கும் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக கோமதியே திருமணத்தை நடத்தி வைக்க நேர்கிறது. தன்னுடைய அண்ணன்களின் கௌரவம் மற்றும் ராஜியின் வாழ்க்கையை மனதில் வைத்து கோமதி இந்த முடிவை எடுக்கிறார்.
விருப்பமில்லாமல் கதிர் மற்றும் ராஜி இருவருக்கும் இடையில் திருமணம் நடக்கிறது. இதனால் ராஜியின் அப்பா மற்றும் சொந்தகளின் அதிகமான வெறுப்பிற்கு உள்ளாகிறார் கதிர். அவரை தூண்டிவிட்டதாக பாண்டியனையும் அவர்கள் கைக்காட்டுகின்றனர். இதனால் மனம் வெறுத்து அவரும் வீட்டை விட்டு வெளியேறி கடையிலேயே தங்குவதாக கடந்த எபிசோட்களில் காட்டப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்த வாரத்திற்கான பிரமோவை சீரியல் டீம் வெளியிட்டுள்ளது. இதில் அப்பா பாண்டியன் மற்றும் கதிருக்கிடையில் சண்டை மூள்வதாக காட்டப்பட்டுள்ளது. இதனால் குடும்பம் மொத்தமும் பரிதவிக்கிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியல்கள் வரிசையில் முதல் 5 இடங்களில் உள்ளது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடர். இந்தத் தொடரில் அப்பா மற்றும் மகன்களின் பாசத்தை முதன்மையாக கொண்டு கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த தொடரின் முதல் பாகத்தில் அண்ணன் -தம்பிகளின் பாசம், உறவுமுறை உள்ளிட்டவற்றை மையமாக கொண்டு கதைக்களம் அமைக்கப்பட்டிருந்தது. 5 ஆண்டுகளை தாண்டி இந்த சீரியல் ரசிகர்களை கவர்ந்து வந்தது. இதனிடையே கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்த சீரியல் நிறைவு செய்யப்பட்டு உடனடியாக சீரியலின் 2வது சீசன் துவங்கியது.
பரபரப்பான எபிசோட்கள்: தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து அடுத்தடுத்த பரபரப்பான எபிசோட்களை கொடுத்து வருகிறது. கடந்த 28 ஆண்டுகளுக்கு முன்பு பாண்டியனை காதலித்து வீட்டை விட்டு வெளியேறும் கோமதி, தன்னுடைய அண்ணன்கள் மற்றும் அம்மாவின் பாசத்திற்காக ஏங்குகிறார். ஆண்டுகள் பல கடந்தும் அவர்களின் அன்பை அவர் பெற முடியாத நிலை ஏற்படுகிறது. இந்நிலையில் தற்போது தன்னுடைய அண்ணன் மகள் ராஜியும் தான் செய்த அதே தவறை செய்வதை பார்க்கிறார். மேலும் ராஜி மோசமானவனை நம்பி வீட்டை விட்டு வெளியேறி பணம்,. நகையையும் இழந்துவிட்டு நடுத்தெருவில் நிற்பதை பார்க்கிறார்.
கதிர் -ராஜி திருமணம்: இதனால் தன்னுடைய அண்ணன்களின் கௌரவத்தையும் ராஜியின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு, தன்னுடைய மகன் கதிர் மற்றும் ராஜிக்கு திருமணம் செய்து வைக்கிறார். இதில் பாக்கியலட்சுமி மற்றும் அவரது மகன், மருமகளும் கோமதிக்கு கைக்கொடுக்கின்றனர். சங்கமம் எபிசோட்களில் இதனை பார்க்க முடிந்தது. இதனிடையே தன்னுடைய மகளிடம் இருந்த 100 சவரன் நகைகள் மற்றும் பணத்தை கதிர் மற்றும் அவரது தந்தை பாண்டியன் ஏமாற்றியதாக முத்துவேல் குடும்பத்தினர் ஊரார் முன்னிலையில் குற்றம் சாட்டி அவமானப்படுத்துகின்றனர். இதனால் மனம் வெறுத்து பாண்டியன், வீட்டை விட்டு வெளியேறி கடையில் தங்குகிறார். அவரை மூத்த மகன் சரவணன் சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்து வருகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 இந்த வார ப்ரமோ: இதனிடையே தற்போது வெளியாகியுள்ள இந்த வார பிரமோவில் வீடு திரும்பும் பாண்டியன், தன்னுடைய மகன் கதிரிடம் சண்டை பிடிப்பதாக காட்டப்படுகிறது. ராஜியிடம் இருந்து பெற்ற நகை மற்றும் பணத்தை திரும்பி அவரது பெற்றோரிடம் கொடுக்கும்படி அவர் சண்டை பிடிக்கிறார். இதையடுத்து பதில் பேசும் கதிர், தான் அந்த பணம் மற்றும் நகைகளை செலவழித்ததாகவும் இது தன்னுடைய வாழ்க்கை என்றும் யாரும் இதில் குறுக்கிட வேண்டாம் என்று கோபத்துடன் கூறுகிறார். இதனால் மனமுடையும் பாண்டியன் செய்வதறியாமல் திகைக்கிறார். இனி அவன் தன்னுடைய மகன் இல்லை என்றும் தான் அவனுக்கு அப்பா இல்லை என்றும் கூறுகிறார்.
தந்தை -மகன் இடையில் வலுக்கும் பிரச்சினை: இதனிடையே தன்னுடைய தவறால் தந்தை -மகன் இடையில் பெரிய அளவில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதை பார்க்கும் ராஜி, உண்மையை கூறும் முனைப்பில் வருவதாக தற்போதைய பிரமோவில் காட்டப்பட்டுள்ளது. தன்னுடைய காதலன் கண்ணன், தன்னுடைய நகைகளை ஏமாற்றி எடுத்துக் கொண்டு ஓடிய நிலையில், தன்னுடைய அப்பாவும் தன்னுடைய திருமணம் நின்றதால் தற்கொலைக்கு முயன்றதை எண்ணி ராஜியும் திருச்செந்தூரில் தற்கொலை முடிவை எடுத்திருந்தார். அவரை கோமதி மற்றும் பாக்கியா உள்ளிட்டோர் இணைந்து தடுத்து தேற்றினர். இந்நிலையில் அடுத்தடுத்து கதிர் தன்னால் அவமானப்படுவதையொட்டி உண்மையை கூறும் முடிவை ராஜி எடுத்துள்ளார். இதையடுத்து என்ன நடக்கும் என்பதை அறிய ரசிகர்கள் அதிகமான ஆர்வம் காட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











