Pandian stores 2 serial: நிச்சயதார்த்தம் கோலம் போட்ட மீனா -ராஜி.. அட கலைச்சிட்டாங்களேப்பா!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக துவக்கம் முதலே மாஸ் காட்டி வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல். இந்த சீரியலின் முதல் சீசன், கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிறைவடைந்த சூழலில் சில தினங்களிலேயே இரண்டாவது பாகம் துவங்கப்பட்டது. முற்றிலும் வித்தியாசமான கதைக்களமாக இருந்தபோதிலும் இந்த சீசனிலும் குடும்ப பாசம் மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட சில விஷயங்கள் முதல் சீசனை ஒத்திருக்கின்றன.
இரண்டாவது சீசனில் அப்பா-மகன்கள் உறவை மையமாக கொண்டு எபிசோட்களை கொடுத்து வருகிறார் இயக்குநர். முதல் சீசனில் மூத்த அண்ணனாக நடித்திருந்த ஸ்டாலின் இந்த சீசனில் அப்பாவாக நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக பிரபல நடிகை நிரோஷா நடித்து வருகிறார். இவர்களின் மூன்று மகன்கள், மகள்கள், அண்ணன்கள் அவர்களின் பகைமை என ஒரு குடும்பத்தில் நியாயமாக இருக்கும் விஷயங்களையே இவர் கதைக்களமாக எடுத்துக் கொண்டுள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக கடந்த சில மாதங்களாக மாஸ் காட்டி வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல். இந்த சீரியலில் அப்பா -மகன்களின் உறவை மையமாக வைத்து எபிசோட்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் தன்னுடைய குடும்பத்தை கட்டுக்கோப்பாக வைத்துவரும் பாண்டியனுக்கு செந்தில் மற்றும் கதிரின் அடுத்தடுத்த திருமணங்கள் இடியாக இறங்குகின்றன. இதனால் அவர் ஊரார் மத்தியில் அவமானப்படுவதுடன் மூத்த மகன் சரவணனின் வாழ்க்கையும் கேள்விக்குறியாகிறது. இதையடுத்து சபதம் மேற்கொண்டு சரவணனுக்கு தங்கமயில் என்ற பெண்ணை நிச்சயம் செய்கிறார்.
நிச்சயதார்த்தம் நடக்குமா?: இவர்களின் திருமணத்தை முறியடிக்க கங்கணம் கட்டிக் கொண்டு அலையும் கோமதியின் அண்ணன் சக்திவேல் மற்றும் அவரது மகன் குமரன் ஒருபுறம் இருக்க, பாண்டியன் நினைத்ததற்கு மாறாக, தங்கமயில் உட்பட அவரது குடும்பத்தினரே, அடாவடிப் பேர்வழிகளாக இருப்பதை அடுத்தடுத்த எபிசோட்கள் பார்க்க முடிந்தது. தற்போது நிச்சயதார்த்தம் வரையில் இந்த நிகழ்வு வந்துள்ள நிலையில், திருமணமானால் என்ன நடக்கும் என்பதாக ரசிகர்கள் யோசித்து வருகின்றனர். தங்கமயிலின் அம்மா, அவருக்கு 80 சவரன் நகைகள் போடுவதாக கூறுகின்றார். ஆனால் பின்பு கவரிங் போட்டுக் கொள்ளலாம் என்று கூலாக பேசியதை பார்க்க முடிந்தது.
மீனா -ராஜியை வம்பிழுக்கும் குழலி: இதனிடையே, நிச்சயதார்த்தத்திற்காக பெண் -மாப்பிள்ளைக்கு புடவை, வேட்டி போன்றவற்றை எடுப்பதற்காக அனைவரும் இணைந்து ஜவுளிக்கடைக்கு போனதையும் பார்க்க முடிந்தது. இந்நிலையில் இன்றைய எபிசோடில் நிச்சயதார்த்தத்தையொட்டி மீனா மற்றும் ராஜி இருவரும இணைந்து வீட்டை நிறைக்கும்வகையில் பிரம்மாண்டமான கோலம் போடுகின்றனர். கோமதி கூறியதற்கு இணங்க, கலர் போட போகும்போது அங்குவரும் பாண்டியனின் மூத்த மகள், குழலி, கோலம் சிறியதாக இருப்பதாக கூறி தண்ணீர் ஊற்றி கலைத்து விடுகிறார். மேலும் தானே கோலம் போடுவதாக கூறி அதே போன்றதொரு கோலத்தை போட்டு கடுப்பேற்றுகிறார்.
மீனா -ராஜி நெகிழ்ச்சி: இதையடுத்து அனைவரும் நிச்சயதார்த்தத்திற்காக தங்கமயில் வீட்டிற்கு செல்வதற்காக புறப்படுகின்றனர். மீனா மற்றும் ராஜி இருவரும் விற்கும் நகைகளை அணிந்துக் கொண்டு கிளம்புகின்றனர். ஆனால், குழலியோ அவர்களை மீண்டும் வம்பிழுக்கும் வகையில், முறையாக திருமணம் செய்திருந்தால், அவர்கள் வீட்டில் நகைகள் போட்டிருப்பார்கள் என்று கூறுகிறார். இதனால் ராஜி -மீனா இருவரும் கடுப்பாக, கோமதியோ, அவர்களை உள்ளே அழைத்துச் சென்று அரசியின் நகைகளை கொடுத்து போட்டுக் கொள்ள சொல்கிறார். இதனால் அவர்கள் நெகிழ்ச்சிக்குள்ளாகின்றனர்.
கோமதியின் அண்ணன்களிடம் வம்பு: இதனிடையே வீட்டை விட்டு வெளியில் வரும் அனைவரும் காரில் ஏற முற்படுகின்றனர். அங்கே வரும் தன்னுடைய அம்மாவிடம் ஜாடையிலேயே, சரவணனுக்கு நிச்சயதார்த்தம் என்பதை கூறுகிறார் கோமதி. இதையடுத்து அவர் சைகையாலேயே வாழ்த்துகிறார். இதனிடையே, வெளியில் வரும் பாண்டியன், தாங்கள் எப்போது வெளியில் சென்றாலும் வம்பிழுக்கும் வகையில் வெளியில் வருவார்களே எங்கே காணோம் என்று ஜாடை பேசுகிறார். இதனால் உள்ளே அமர்ந்திருக்கும் முத்துவேல், சக்திவேல் ஆகியோர் ஆத்திரமடைவதாக இன்றைய எபிசோட் காணப்பட்டது.


Click it and Unblock the Notifications











