Pandian stores 2 serial: நான் நல்ல அப்பாவா இல்லையா.. பாண்டியனுக்கு வந்த டவுட்.. ஆடிப்போன சரவணன்!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியல்கள் வரிசையில் இடம்பெற்றுள்ளது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல். இந்தத் தொடரில் முதல் சீசன் கடந்த சில வாரங்களுக்கு முன்பு முடிக்கப்பட்டு, இரண்டாவது சீசனும் உடனடியாக துவங்கப்பட்டது. முதல் சீசனில் அண்ணன் -தம்பிகள் பாசம் மையமாக இருந்த நிலையில், இரண்டாவது சீசனில் அப்பா -மகன்களின் உறவை மையமாக கொண்டு எபிசோட்கள் வெளியாகி வருகின்றன. முதல் சீசனில் மூத்த அண்ணனாக நடித்திருந்த ஸ்டாலின், இரண்டாவது சீசனில் அப்பாவாக நடித்து வருகிறார். அவருக்கு மனைவியாக நிரோஷா கோமதி என்ற கேரக்டரில் நடித்து அனைவரையும் கவர்ந்து வருகிறார்.
இதேபோல முதல் சீசனில் மீனாவாக நடித்திருந்த நடிகை ஹேமா, இந்த சீசனிலும் மீனா என்ற கேரக்டரிலேயே நடித்து வருகிறார். இந்த அவரது கேரக்டர் முதல் சீசனை போலவே இந்த சீசனிலும் ரசிகர்களை கவரும்வகையில் அமைந்துள்ளது. பாண்டியன் மற்றும் நிரோஷா தம்பதி 28 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து வீட்டை விட்டு வெயேறி திருமணம் செய்துக் கொண்ட நிலையில் தற்போது அவர்களது மகன் செந்தில் இதேபோல மீனாவை திருமணம் செய்துக் கொள்கிறார். இதனால் உடைந்துப் போனாலும் அவர்களை ஏற்றுக் கொள்கிறார் பாண்டியன். இந்நிலையில் அடுத்த மகன் கதிரின் வாழ்க்கையிலும் இதேபோல ஒரு சூழல் ஏற்படுகிறது. ஆனால் இதற்கு கோமதியே காரணமாக அமைகிறார்.

சங்கமம் எபிசோட்கள்: விஜய் டிவியின் அடுத்தடுத்த சீரியல்கள் ரசிகர்கள் வெகுவாக கவர்ந்து டிஆர்பியிலும் அதிகமாக புள்ளிகளை பெற்று வருகின்றன. சன் டிவியை தொடர்ந்து ரசிகர்களை கவரும்வகையில் சீரியல்களை கொடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளது விஜய் டிவி. இந்த சேனலின் சிறகடிக்க ஆசை, பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2, ஆஹா கல்யாணம் என அடுத்தடுத்த சீரியல்கள் ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. கடந்த சில தினங்களாக பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்களின் சங்கமம் எபிசோட்கள் அடுத்தடுத்து ஒளிபரப்பாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடர்: இந்நிலையில் இந்த சங்கமம் எபிசோடின் முக்கியமான கட்டமான கதிர் மற்றும் ராஜியின் திருமணம் நடந்து முடிந்துள்ளது. இந்த திருமணத்தை கோமதியே தன்னுடைய கணவன் பாண்டியனுக்கு தெரியாமல் நடத்தி வைக்கிறார். தன்னுடைய அண்ணன் மகளின் வாழ்க்கையை காப்பாற்றும்வகையிலும் அண்ணன்களின் கௌரவத்தை காக்கும்வகையிலும் கோமதி இந்த முடிவை எடுத்துள்ளார். இந்த அவரது அதிரடி முடிவிற்கு பாக்கியலட்சுமி தொடரின் பாக்கியா, அவரது மகன் மற்றும் மருமகளும் துணையாக நிற்கின்றனர். இந்நிலையில் கதிர் மற்றும் ராஜியை குன்னக்குடிக்கே கொண்டுவந்து விட்டு செல்கிறார் பாக்கியா.
மனம் வெறுத்த பாண்டியன்: அவரது இந்த செயலால் அவரது வீட்டிலும் பூகம்பம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த சங்கமம் எபிசோட்கள் நிறைவடைந்து சீரியல்கள் தனித்தனியாக வழக்கம்போல மாறியுள்ளது. முன்னதாக செந்திலின் திருமணம் காதல் திருமணமாக வீட்டிற்கு தெரியாமல் நடந்த நிலையில் மனமுடைந்து போனார் பாண்டியன். அதிலிருந்து அவர் மீள்வதற்குகூட அவகாசம் இல்லாதவகையில் தற்போது அடுத்த மகன் கதிரின் திருமணமும் அதேபோல நடந்துள்ளது. வீட்டை விட்டு ஓடிவந்து காதலனால் ஏமாற்றப்பட்ட ராஜியின் வாழ்க்கையை மீட்டெடுக்கும்வகையில் கோமதி தன்னுடைய மகன் கதிருக்கே ராஜியை திருமணம் செய்து வைத்துள்ளார்.
அவமானப்படுத்தப்படும் பாண்டியன்: இந்த திருமணத்தையடுத்து பாண்டியன்தான் இது எல்லாவற்றிற்கும் காரணம் என்று குற்றம் சாட்டி முத்துவேல் குடும்பத்தினர் பாண்டியனை அவமானப்படுத்துகின்றனர். இதனால் மனமுடைந்த அவர் வீட்டை விட்டு வெளியேறி, தன்னுடைய கடைக்கு வருகிறார். அங்கு அவரைத்தேடி மூத்த மகன் சரவணன் வருகிறார். அவரிடம் தன்னுடைய குடும்பத்திற்காக தன்னுடைய ஆசாபாசங்களை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு தான் செயல்பட்டு வந்துள்ளதை சுட்டிக்காட்டும் பாண்டியன், தான் நல்ல அப்பா இல்லையா, ஏன் செந்தில் மற்றும் கதிர் இருவரும் தனக்கு இத்தகைய அவமானத்தை பெற்றுத் தந்தனர் என்று கேள்வி எழுப்புகிறார்.
பாண்டியன் கேள்வி: ஊரில் குடும்பத்தை தவிக்கவிட்டுவிட்டு அதிகமானோர் செயல்படும் நிலையில் குடும்பத்திற்காகவே வாழும் தனக்கு ஏன் இதுபோன்ற ஒரு அவமானம் என்று பாண்டியன் கேள்வி எழுப்ப, அவரை சமாதானப்படுத்தும் வழி தெரியாமல் சரவணன் ஆடிப் போகிறார். தன்னுடைய கணவனின் இந்த நிலை குறித்து மனம் வெதும்பும் கோமதி, சாப்பிடக்கூட தோன்றாமல் அழுகிறார். அவரை சமாதானப்படுத்தும் மீனா, மற்றவர்களையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுவதாக இன்றைய எபிசோடில் காணப்படுகிறது. இடையிடையே தன்னுடைய கணவனுக்கு வரும் டவுட்களையும் போக்கும் சூழல் அவருக்கு ஏற்படுகிறது.


Click it and Unblock the Notifications











