Pandian stores 2: ஊருக்குள்ள என்ன பேசிக்கிறாங்க தெரியுமா.. பழனிவேல் திருமணம் இப்பவாவது நடக்குமா?
சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எளிமையான கதைக்களத்தால் ஏராளமான ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்த சீரியலின் பாண்டியன் -கோமதி தம்பதி ரசிகர்களின் ஃபேவரைட்டாக உள்ள நிலையில் அவர்களது மகன்கள், மருமகள்கள், மகள்கள் மற்றும் வில்லத்தனம் காட்டும் கோமதியின் அண்ணன்கள் என அனைவரும் ரசிகர்களை தங்களுள் ஒருவராக பார்க்க வைக்கின்றனர்.
நம் அன்றாடம் நடக்கும் வாழ்வியல் பிரச்சினைகளை கதைக்களமாக கொண்டு சிறப்பாக நடைபோட்டு வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல். சிறு வயதில் யாரும் இல்லாத அனாதையாக்கப்பட்ட ஒரு நபர் தன்னுடைய வாழ்க்கையில் உயரத்தை தொடும்போது அவர் எதிர்கொள்ளும் நிகழ்வுகள் இந்த சீரியலின் கதையோட்டமாக காணப்படுகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் அடுத்தடுத்த எபிசோட்கள் ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. பாண்டியன் மற்றும் கோமதி தம்பதி இந்த சீரியலின் அடிநாதமாக உள்ள நிலையில் இந்த கேரக்டர்களில் நடித்துவரும் ஸ்டாலின் மற்றும் நடிகை நிரோஷாவிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இந்த சீரியலின் முதல் சீசனில் அண்ணன் -தம்பிகளின் உறவை காட்சிப்படுத்தி ரசிகர்களை நெகிழ வைத்த இயக்குநர், தற்போது இந்த இரண்டாவது சீசனில் அப்பா மற்றும் மகன்களின் பாசப்பிணைப்பை மையமாக வைத்து சீரியலை கொடுத்து வருகிறார்.
பழனிவேல் திருமணம்: இந்த சீரியலில் பாண்டியன் -கோமதி தம்பதிக்கு 3 மகன்கள், 2 மகள்கள் உள்ள நிலையில் மகன்கள் மூவரின் திருமணங்களையும் அடுத்தடுத்து பரபரப்பாக கொடுத்திருந்தார் இயக்குநர். இவர்களில் இருவருக்கு காதல் திருமணம் நடந்த நிலையில் மூத்தவர் சரவணனுக்கு தங்கமயில் என்பவரை பாண்டியன் திருமணம் செய்து வைக்கிறார். இந்த அடுத்தடுத்த திருமணங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. இந்நிலையில் தற்போது தன்னுடைய மச்சான் பழனிவேலுக்கு திருமண ஏற்பாடுகளை செய்கிறார் பாண்டியன். சிறுவயதில் இருந்தே தன்னுடைய அண்ணன்களிடம் இல்லாமல் தன்னுடைய அக்கா மற்றும் பாண்டியனுடன் இருக்கிறார் பழனிவேல்.
அவமானத்தில் முத்துவேல் -சக்திவேல்: பழனிவேலுக்கு பாண்டியன் திருமண ஏற்பாடுகளை செய்வதை அவருடைய அண்ணன்கள் முத்துவேல் மற்றும் சக்திவேல் அவமானக்குறைவாக பார்க்கின்றனர். முன்னதாக பாண்டியன் ஏற்பாடு செய்த திருமணத்தை அவர்கள் குலைத்த சம்பவமும் நடந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் பெண் பார்த்து நிச்சயத்துள்ளார் பாண்டியன். இந்த திருணத்தையும் அவர்கள் அவமானமாக பார்க்கின்றனர். இந்நிலையில் ஊராரும் அவர்களை கேள்வி கேட்பதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது. அண்ணன்கள் இருக்கும்போது எப்படி பாண்டியனை திருமணம் செய்ய விட்டீர்கள் என்பதாக ஊரார் பேசுவதாக ஒருவர் கூற, முத்துவேல் மற்றும் சக்திவேல் ஆத்திரப்படுவதாகவும் இன்றைய எபிசோடில் காணப்பட்டது.
பழனிவேல் திருமணம் நடக்குமா?: இதனிடையே, பழனிவேல் திருமண ஏற்பாடுகளை மும்முரமாக செய்கிறார் பாண்டியன். குடும்பத்தினர் அனைவருக்கும் வேலைகளை பகிர்ந்து கொடுக்கிறார். 40 வயதை நெருங்கிய நிலையில் திருமணம் ஆகாமல் இருக்கிறார் பழனிவேல். அவரது அண்ணன்களுக்கும் பாண்டியனுக்கும் இடையிலுள்ள பகையும் அவரது திருமணத்திற்கு தடையாக உள்ள நிலையில், இந்த முறையாவது அவரது திருமணம் நடக்குமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதனிடையே, இந்த முறை அவரது திருமணம் கண்டிப்பாக நடக்கும் என்று தன்னுடைய மாமியாரிடம் முத்துவேலின் மனைவி வடிவு கூறுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.


Click it and Unblock the Notifications











