Pandian stores: கேன்சர் குறித்த ஐஸ்வர்யா வீடியோ.. கலவரமான குடும்பத்தினர்.. இனி என்ன நடக்கும்?
சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடர்களில் ஒன்றாக மாறியுள்ளது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்.
இந்த வார சேனலின் டிஆர்பி ரேட்டிங்கில் பாக்கியலட்சுமி தொடரை பின்னுக்கு தள்ளி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இந்தத் தொடரில் கடந்த சில வாரங்களாக கொண்டாட்டங்களுக்கும் சென்டிமெண்ட் காட்சிகளுக்கும் பஞ்சமில்லாமல் உள்ளது.

ஐஸ்வர்யாவின் யூடியூப் வீடியோவால் கலவரமான குடும்பத்தினர்: விஜய் டிவியின் முன்னணி தொடர்களில் ஒன்றாக மாறியுள்ளது பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த வார சேனலின் டிஆர்பியில் அதிக புள்ளிகளை பெற்று இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. முதலிடத்தில் சிறகடிகக ஆசை தொடரும், மூன்றாவது இடத்தில் பாக்கியலட்சுமி தொடரும் உள்ள நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் இரண்டாவது இடத்திற்கு தாவியுள்ளது. கடந்த வாரத்தில் மூன்றாவது இடத்தில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
அண்ணன் -தம்பிகள் பாசத்தை மையமாக கொண்டு ஒளிபரப்பாகி வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர். தமிழில் நேரடியாக களமிறங்கியுள்ள இந்தத் தொடர், சகோதரர்களின் பாசம், அரவணைப்பு, பிரச்சினைகள், ஒன்றாக இருந்து அதை தீர்க்கும் பலம், ஒருவரையொருவர் எந்த சூழலிலும் விட்டுக் கொடுக்காத குணம் போன்றவற்றை மையமாக கொண்டு ஒளிபரப்பாகி வருகிறது. சகோதரர்கள் மட்டுமில்லாமல் அவர்களின் மனைவிகளும் குடும்பத்தின் ஒற்றுமைக்காக சிறப்பாக செயல்பட்டு வருவது இந்தத் தொடரின் சிறப்பு.

சீரியல்கள் என்றால் கண்டிப்பாக சிறப்பாக வாழ்பவர்களை குலைக்க, தனியாக சதித்திட்டம் போடுவதற்காக கூட்டமே இருப்பதாக காட்டப்படும். குறிப்பாக இந்த செயல்களில் பெண்கள் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். ஆனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் சூழல்களே வில்லன்களாக காட்டப்படுகிறது. அதிலிருந்து மீளும் வழியில் சகோதரர்கள் இணைப்பாக செயல்படுவது கூட்டுக் குடும்பம் செயலிழந்து போன இந்தக் காலக்கட்டத்தில் பார்ப்பவர்களுக்கு அதிகமான ஆறுதலை கொடுத்து வருகிறது.
கடந்த சில வாரங்களாக இந்தத் தொடரில் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனம், அவரது கடமைகளை ஒவ்வொன்றாக செயல்படுத்தியதை பார்க்க முடிந்தது. உடல்நிலை சரியில்லாத தன்னுடைய கணவனுக்கு இந்த விஷயம் தெரியாமல் அவர் பார்த்துக் கெண்டார். தான் நினைத்ததை போலவே புதிய வீட்டில் அண்ணன் -தம்பிகளை ஒன்றாக வாழவும் அவர் வழி செய்திருந்தார். இந்நிலையில் குடும்பத்தினருக்கு தெரியாமல் அவருக்கு முதல்கட்ட அறுவை சிகிச்சையையும் முல்லை மற்றும் மீனா செய்து முடிக்கின்றனர்.
இந்த விஷயம் தற்போது கதிருக்கும் தெரியவந்த நிலையில், அடுத்தக்கட்ட ஆபரேஷனுக்கான பணத்தை தயாரிக்க அவர் முனைப்பு காட்டி வருகிறார். இதனிடையே, வீட்டில் தனம், மீனா மற்றும் முல்லை இவர்களுடன் கதிரும் இணைந்து தனியாக சென்று பேசுவதை பார்க்கும் ஐஸ்வர்யாவிற்கு சந்தேகம் வர, ஒருகட்டத்தில் அவர் உண்மையை கண்டுபிடிக்கிறார். இதனால், மீனா மற்றும் முல்லை ஐஸ்வர்யாவிடம் உண்மையை கூறும் சூழல் உருவாகிறது.

இதனிடையே, மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகும் ஐஸ்வர்யா, கேன்சர் குறித்தும் தங்களது வீட்டில் கேன்சரால் ஒருவர் பாதித்துள்ளதாகவும் தன்னுடைய யூடியூப் சேனலில் பதிவிடுகிறார். இதைப் பார்க்கும் மீனா, முல்லை, தனம் உள்ளிட்டவர்களின் பெற்றோர் மற்றும் அண்ணன் உள்ளிட்டவர்கள் வீட்டிற்கே படையெடுக்கின்றனர். இந்த வீடியோ குறித்து அறியும் தனத்தின் கணவன் மூர்த்தி மிகுந்த அதிர்ச்சியுடன் ஐஸ்வர்யாவிடம் விசாரிப்பதாக இன்றைய எபிசோட் காணப்படுகிறது.
முன்னதாக வெளியான இந்த வாரத்திற்கான ப்ரமோவில், தனத்திற்குதான் மார்பக புற்றுநோய் என்பதை மூர்த்திக்கு அழுகை, ஏமாற்றத்துடன் ஐஸ்வர்யா வெளிப்படுத்துவதாகவும் அவர் அதிர்ச்சியின் உச்சத்திற்கே போவதாகவும் காணப்பட்டது. ஏற்கனவே உடல்நிலை சரியில்லாத மூர்த்தி, தன்னுடைய உயிராக நினைக்கும் தன்னுடைய மனைவிக்கு இத்தகைய உடல்நல பாதிப்பு இருப்பது குறித்து தெரியவந்துள்ள நிலையில் எந்தமாதிரி ரியாக்ட் செய்வார் என்பதை நாளைய எபிசோடில் பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











