Second Love ப்ரோமோவை இறக்கிய விஜய் டிவி.. வெச்சு விளாசிய நெட்டிசன்ஸ்.. என்ன கான்செப்ட்டு இது?
சென்னை: ரியாலிட்டி ஷோக்களுக்கு எப்போதும் தனி ரசிகர் பட்டாளம் இருக்கும். அதே நேரத்தில், சில நிகழ்ச்சிகள் அறிவிக்கப்படும் தருணத்திலேயே சர்ச்சையையும், கடுமையான விமர்சனங்களையும் சந்திப்பதும் வழக்கமாகிவிட்டது. அந்த வரிசையில் தற்போது விஜய் டிவியின் புதிய ரியாலிட்டி ஷோவான "Second Love" சமூக வலைதளங்களில் பெரிய விவாதத்தை கிளப்பியுள்ளது.
விஜய் டிவி மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் ஒளிபரப்பாகவுள்ள இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியை நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்குகிறார். ஏற்கனவே ஒரு முறை காதலில் தோல்வியை சந்தித்த ஆறு ஆண்களும், ஆறு பெண்களும் ஒரே வீட்டில் தங்கவைக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு பல்வேறு டாஸ்க்கள் கொடுக்கப்பட்டு, அந்த பயணத்தின் முடிவில் புதிய காதல் உருவாகிறதா, புதிய ஜோடிகள் உருவாகிறார்களா என்பதுதான் நிகழ்ச்சியின் முக்கிய கான்செப்ட்டாக கூறப்படுகிறது.
ஆனால், ப்ரோமோ வெளியான சில மணி நேரங்களிலேயே சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் இந்த நிகழ்ச்சியை கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர். "இது வேற எதுவும் இல்லை... பிக்பாஸ் வீட்டில் நடக்கும் காதல் டிராக்கை தனியாக ஒரு ஷோவாக மாற்றியிருக்கிறார்கள்" என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

18+: ப்ரோமோவில் போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் நெருக்கமாக பழகும் காட்சிகளும், காதல் தொடர்பான டாஸ்க்களும் இடம்பெற்றிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது. அதில் ஒரு போட்டியாளர், "கொஞ்சம் 18+ டாஸ்க்ஸ் இருந்தா நல்லா இருக்கும் என்று நினைத்தேன்" என்று பேசும் காட்சியும் இடம்பெற்றுள்ளது. அதே நேரத்தில் மற்றொரு பெண் போட்டியாளர், "என்னால் இப்படிப்பட்ட டாஸ்க்களில் ஈடுபட முடியாது. எனக்கு இதில் விருப்பம் இல்லை" என்று கூறி விலகுவது போன்ற காட்சியும் ப்ரோமோவில் இடம்பெற்றுள்ளது.
எல்லை தாண்டாமல்: இதையடுத்து, "இது முழுக்க முழுக்க ஸ்கிரிப்ட்டட் ஷோ மாதிரி தெரிகிறது. காதல், சண்டை, ரொமான்ஸ், கிரிஞ்ச் என எல்லாவற்றையும் கலந்து கண்டெண்ட் உருவாக்க முயற்சி செய்கிறார்கள்" என்று நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். இன்னும் சிலர், "18 பிளஸ் எல்லையை மட்டும் தாண்டாமல் இருந்தால் போதும்", "என்ன கான்செப்ட்டுடா இது?" என்ற ரீதியிலும் கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.

பிக்பாஸ் வாடை அடிக்குதே: இத்தோடு, இந்த நிகழ்ச்சியை பலரும் பிக்பாஸுடன் ஒப்பிட்டு பேச ஆரம்பித்துள்ளனர். ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் தொடங்கியபோதும், வெளிநாட்டு ஃபார்மேட்டை கொண்டு வந்து தமிழ் கலாச்சாரத்திற்கு பொருந்தாத விஷயங்களை காட்டுகிறார்கள் என்று பல்வேறு தரப்பில் எதிர்ப்புகள் எழுந்தன. அந்த நிகழ்ச்சியிலேயே காதல், சண்டை, உறவுகள் போன்றவை அதிகம் பேசுபொருளாக மாறிய நிலையில், தற்போது அதையே மையமாக வைத்து தனியாக ஒரு ரியாலிட்டி ஷோ உருவாக்கப்பட்டிருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இதில் மேலும் கவனம் ஈர்த்திருப்பது ரம்யா கிருஷ்ணனின் வருகைதான். பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு கட்டத்தில் கமல்ஹாசனுக்கு பதிலாக தொகுத்து வழங்கிய அனுபவம் கொண்ட அவர், தற்போது இந்த நிகழ்ச்சியையும் முழுமையாக தொகுத்து வழங்குகிறார். அதனால், "இது பிக்பாஸின் இன்னொரு வெர்ஷன்... ஆனால் முழுக்க முழுக்க காதலை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட வடிவம்" என்ற கருத்தும் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், ஜூலை 13 முதல் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ப்ரோமோவுக்கு கிடைத்திருக்கும் எதிர்மறை விமர்சனங்கள் நிகழ்ச்சியின் வரவேற்பை பாதிக்குமா அல்லது சர்ச்சையையே பலமாக மாற்றி ரசிகர்களை ஈர்க்குமா என்பது நிகழ்ச்சி தொடங்கிய பிறகே தெரியவரும். தற்போது மட்டும் சமூக வலைதளங்களில் "Second Love" ப்ரோமோதான் பரபரப்பாக பேசப்படும் டாபிக்காக மாறியுள்ளது.


Click it and Unblock the Notifications