சாராவுக்கு நடந்த ஆபத்தான அறுவை சிகிச்சை.. 8 வயதில் மரண போராட்டம்.. வி.ஜே அர்ச்சனா பேட்டி!
சென்னை: அனைவருக்கும் பிடித்த தொகுப்பாளினியாகவும், நடிகையாகவும் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் வி.ஜே அர்ச்சனா. இவரும் இவரது மகள் சாராவும் இணைந்து செய்யும் யூடியூப் வீடியோக்களுக்கு எப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. சாரா எப்போதும் தனது வயதைத் தாண்டிய மெச்சூரிட்டியுடன் பேசுவதாகப் பலரும் பாராட்டும் வேளையில், அதற்குப் பின்னால் இருக்கும் ஒரு கண்ணீர் பின்னணியை அர்ச்சனா அண்மையில் அளித்த பேட்டியில் போட்டுடைத்துள்ளார்.
8 வயதில் வந்த மரண பயம்: மரணத்தை மிக அருகில் பார்த்துவிட்டு வந்த குழந்தைகளுக்கு ஏன் இவ்வளவு முதிர்ச்சி இருக்கிறது என்று யாரும் கேட்கவே கூடாது. சாரா எட்டு வயதாக இருக்கும்போது ஒரு மிகப்பெரிய அறுவை சிகிச்சை நடந்தது. அவளுக்கு அப்போது உயிர் போய்விட்டு வந்தது என்றுதான் சொல்ல வேண்டும். அவளைக் காப்பாற்ற முடியுமா? முடியாதா? என்றே தெரியாத ஒரு இக்கட்டான சூழ்நிலையில் நாங்கள் நின்றுகொண்டிருந்தோம். அவளது உடலில் இருக்கும் இரண்டு ஓவரிகளில் இருந்து ஒரு சிறிய பைப் போன்ற நரம்பு கர்ப்பப்பையுடன் இணைக்கப்பட்டிருக்கும். அதில் ஒரு ஓவரியில் பலமுறை நரம்புகள் ஒன்றோடு ஒன்று சுற்றிக்கொண்டன. இதனால் அவளுக்குக் கடுமையான வலி மற்றும் பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக அதைச் சரிசெய்துவிட்டு, பர்மனென்ட்டாக அங்கு கிளிப் செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் கூறினார்கள்.

தாயாக முடியுமா முடியாதா?: அறுவை சிகிச்சையின் போது மருத்துவர்கள், அந்த அறுவை சிகிச்சை நடக்கும்போது, சாராவுக்குக் கடுமையான பாதிப்பு இருந்தால் அவளது கர்ப்பப்பையையே எடுக்க வேண்டிய சூழ்நிலை கூட வரலாம் என்று சொன்னார்கள். அந்த வார்த்தையைக் கேட்டதும் ஒரு தாயாக என் உலகமே இருண்டுவிட்டது. எட்டு வயதே நிரம்பிய ஒரு சிறுமிக்குத் தன் கர்ப்பப்பையை எடுக்க வேண்டும் என்றால், எதிர்காலத்தில் இவள் தாயாக முடியுமா முடியாதா? என்ற ஒரு கொடுமையான நிலையில்தான் அவள் ஆபரேஷன் தியேட்டருக்குள் இருந்தாள். உள்ளே அவளுக்குப் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. வெளியே நாங்கள் அழுதுகொண்டே துடித்துக் கொண்டிருந்தோம். ஆனால், அது கடவுளின் அனுகிரகமோ, இல்லை நான் செய்த புண்ணியமோ, என் பெற்றோர்கள் செய்த புண்ணியமோ தெரியவில்லை. அறுவை சிகிச்சை முடிந்து மீண்டு வந்துவிட்டாள், அவளுக்கு இனி எந்தவிதமான பிரச்சனையும் இல்லை, கர்ப்பப்பை மிகவும் சிறப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறது என்று சொன்னார்கள். அதைக் கேட்ட பிறகுதான் எங்களுக்கு உயிரே வந்தது என்று அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications