தமிழ் தொலைக்காட்சிகளில் சுடச் சுட சுவையான சமையல் நிகழ்ச்சிகள்…
இன்றைக்கு சமையல் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பாத டிவி சேனல்களே இல்லை எனலாம். ஏனெனில் குறைந்த செலவில் நிறைவான வருமானம் தருவது சமையல் நிகழ்ச்சிதான்.
கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு.... கிச்சன் சூப்பர் ஸ்டார்ஸ், அஞ்சரைப்பெட்டி, சுவையோ சுவை, அறுசுவை இது தனி சுவை, கிச்சன் கில்லாடிகள், ஆரோக்கிய சமையல், நீங்களும் சமைக்கலாம், சுவையோ சுவை, அறுஞ்சுவை அடுக்ககம், நம் உணவு நமக்கு மருந்து, எங்கேயும் சமையல், நளபாகம் இதெல்லாம் தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் சில சமையல் நிகழ்ச்சிகளின் பெயர்கள்.
மதிய நேரத்தில் டிவி சீரியல்களை ஒளிபரப்பும் சேனல்களைத் தவிர வேறு எந்த சேனலை திருப்பினாலும் சமையல் நிகழ்ச்சிகள்தான். யாராவது எதையாவது சமைத்துக்கொண்டும், அதை சுவைத்துக்கொண்டும் இருப்பார்கள்.

சமையல் நிகழ்ச்சிகள்
ஸ்டூடியோவில் ஒரு கிச்சன் செட்டு, நான்கைந்து காய்கறிகள் கொஞ்சம் எண்ணை உப்பு, மிளகாய், ஒரு ஸ்டவ் அடுப்பு, சமைக்க தெரிஞ்ச ஒருவர், அதை தொகுக்க அழகான தொகுப்பாளினி, ஒரு கேமராமேன், ஒரு லைட்மேன் இருந்தால் சமையல் புரோக்ராம் ரெடி.

உணவின் வரலாறு
ஊர் ஊராக சென்று அந்தந்த ஊர் சமையலை நிகழ்ச்சியாக்கினார்கள். அந்த உணவின் சுவையோடு உணவு வந்த வரலாறு பற்றியும் சொல்லி அசத்தினார்கள்.

சூப்பர் ஸ்டார் பட்டம்
சின்னத்தரை நடிகர் நடிகைகளை கொண்டு சமையல் போட்டி நடத்துகின்றனர். கிச்சன் சூப்பர் ஸ்டார் என்ற பட்டமும் கொடுத்து, பரிசும் கொடுக்கின்றனர்.

வீட்டுக்கே வருகிறோம்
சமையல் வித்தியாசம் காட்ட நேயர்களின் வீட்டுக்கே சென்று அவர்கள் சமைப்பதை காட்டினார்கள். இதனால் பார்வையாளர்களாக மட்டுமே இருந்த இல்லத்தரசிகள் பங்கேற்பாளர்களாகவும் மாறினார்கள்.

பறவை முனியம்மா சமையல்
கிராமத்து பாட்டிகளை அழைத்து வந்து பாட்டி சமையல், ஆச்சி சமையல் என்றார்கள். அதிலும் பிரபல பாடகி பறவை முனியம்மா பாடிக்கொண்டே சமைக்கும் சமையல் டிவி சேனல்களில் பிரபலம்.

ஆஹா என்ன ருசி
மறைந்த செஃப் ஜேக்கப் அவுட்டோருக்கு சென்று அழகாய் சமைத்துக் காட்டி இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்தார். பிரபல ஓட்டலுக்குள் நுழைந்து அந்த ஓட்டலின் ஸ்பெஷல் அயிட்டங்களை செய்து காட்டி அசத்தினார். இல்லத்தரசிகளின் கைமணத்தையும் உலகறியச் செய்தார்.

பெண்களுக்கு பிடித்தமானது
எல்லா சேனல்களும் இப்படி சமையல் நிகழ்ச்சியை வரிந்து கட்டிக் கொண்டு தயாரித்து ஒளிபரப்பக் காரணம் குறைந்த செலவில் எடுக்கப்படும் இந்த நிகழ்ச்சியை மதிய வேளையில் ஒளிபரப்பினால் பெண்கள் ஆர்வத்துடன் உட்கார்ந்து பார்க்கிறார்கள் என்பதுதான்.

குட்டீஸ்கள் ஆர்வம்
பெரியர்களைப் போல, இப்போது குட்டீஸ்களும் சமையல் நிகழ்ச்சிகளைப் பார்ப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர் எனவே சத்தான சமையல் எது என்பதைத் தெரிந்து அதை வீட்டில் செய்து தரச் சொல்லி நச்சரிக்க ஆரம்பிக்கின்றனர்.

பிரபல நடிகைகள்
தமிழ் நேயர்களின் சமையல் நிகழ்ச்சி ஆர்வத்தை புரிந்து கொண்டு சில ஆங்கில சேனல்கள் கூட புகழ்பெற்ற மாஸ்டர் செஃப், ஸட்ரீட் புட் அரவுண்ட் தி வோர்ல்ட் போன்ற நிகழ்ச்சிகளை தமிழில் டப் செய்து ஒளிபரப்புகிறார்கள்.

விளம்பரம் தாராளம்
இந்த நிகழ்ச்சிகளுக்கு சமையல் தொடர்புடைய மசாலாபொடி, சமையல் எண்ணை, மிக்சி, குக்கர் விளம்பரங்கள் எளிதாக கிடைத்து விடுகிறது. அதனால்தான் டிவி சேனல்கள் சமையல் நிகழ்ச்சியில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்கின்றனர் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள்.


Click it and Unblock the Notifications











