இந்த சீரியல்களை பார்ப்பதும் பார்க்காததும் அவரவர் விருப்பம்!!
என்னதான் சீரியல் பத்தி விமர்ச்சித்து எழுதினாலும் சில சேனல்களில் ஒளிபரப்பாகும் சில சீரியல்கள் பார்த்து ரசிக்கும்படியாக இருக்கும். அவற்றை சொல்வதும் எங்களின் கடமைதானே. மின் தடை பிரச்சினையிலும் விடாமல் சீரியல்களை பார்க்கும் ரசிகர்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதை பட்டியலிட்டுள்ளோம் படியுங்களேன்.

சரவணன் மீனாட்சி ஜோடி அற்புதம்
விஜய் டிவியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் சரவணன் மீனாட்சி தொடரில் இந்த ஜோடியின் கெமிஸ்ட்ரி சூப்பராக ஒர்க் அவுட் ஆகிறது. நிஜ காதலர்கள் போலவே இயல்பாக நடிக்கும் செந்தில், ஸ்ரீஜாவின் நடிப்புக்கு இளசுகள் மத்தியில் வரவேற்பு அதிகம். சரவணன் மீனாட்சிக்கு திருமணம் முடிந்த பின்னரும் இந்த ஜோடியின் ஜாலி லூட்டி சூப்பர் என்கின்றனர் சீரியல் ரசிகர்கள்.

நாதஸ்வரம் நல்ல ரசனை
அண்ணன் - தம்பி ஒற்றுமையை எடுத்துக்கூறும் தொடர் நாதஸ்வரம். சன் தொலைக்காட்சியில் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. மெட்டி ஒலி இயக்கிய திருமுருகன் இந்த தொடரில் குடும்ப உறவுகளை மையப்படுத்தி எடுத்துள்ளார். அதிலும் சொக்கலிங்கம், மயிலு ஆகியோரின் இயல்பான நடிப்பிற்காகவே இந்த தொடரை பார்க்கின்றனராம் ரசிகர்கள்

வைராக்கியம் நகைச்சுவை கலாட்டா
கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும் வைராக்கியம் தொடர் ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பு. காமெடி கலாட்டாவிற்காகவே இதனை விரும்பிப் பார்க்கின்றனராம் ரசிகர்கள். இதுவரை வில்லனாகவே நடித்து வந்த ராஜ்காந்த் இதில் நகைச்சுவைக்கு மாறியிருப்பது ரசிகர்களை கவர்ந்துள்ளது.

சாந்திநிலையம் சாதனை
பாலசந்தர் இயக்கிய தொடர்களுக்கு தனி வரவேற்பு உண்டுதான். ஜெயாடிவியில் ஒளிபரப்பாகும் சாந்தி நிலையம் தொடர் மருத்துவமனையை பின்னணியாகக் கொண்ட கதை இது. திரைப்பட நடிகை ரதி இதில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். பாலசந்தரின் இயக்கத்திற்காகவும், இயல்பான கதைக்காகவும் இதனை ரசிப்பதாக கூறுகின்றனர் ரசிகர்கள்.

7சியின் கலாட்டா மாணவர்கள்
விஜய் டிவியில் மாணவர்களை பற்றிய தொடர்கள் அடிக்கடி ஒளிபரப்பாகிறது. 7 சி தொடர் பள்ளியில் நடைபெறும் கதை. இதில் ஆசிரியர்களின் அலம்பல் கொஞ்சம் அதிகம்தான் என்றாலும் மாணவர்களின் நடிப்பு இயல்பாக இருப்பதாலேயே இந்த தொடர் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

கண்ணுக்கு அழகான துளசி
சந்திரா லட்சுமணன் கதாநாயாகியாக நடித்துள்ள துளசி தொடர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. பழி வாங்கும் காட்சிகள் இந்த தொடரில் இருந்தாலும் சஞ்சீவ், சந்திரா லட்சுமணன் நடிப்பிற்காகவே பெரும்பாலான ரசிகர்கள் இந்த தொடரை பார்க்கின்றனராம்.
இது எங்களின் சொந்த கருத்து அல்ல ரசிகர்களின் கருத்துதான். இந்த சீரியல்களை பார்ப்பதும் பார்க்காததும் அவரவர் விருப்பம்.


Click it and Unblock the Notifications











