காதலரை மணந்த சீரியல் நடிகை..அவசர அவசரமாக நடந்த திருமணம்!
சென்னை : யாரடி நீ மோகினி சீரியல் மூலம் பிரபலமான நட்சத்திரா தனது நீண்ட நாள் காதலரை மணந்தார். திருமண புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை நட்சத்திராவின் திருமணம் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்து முடிந்துள்ளதாக கூறப்படுகிறது.
திருமணமான இந்த தம்பதிக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நடிகை நட்சத்திரா
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி சீரியலில் வெகுளிப்பெண்ணாக அழகான தனது கதாபாத்திரத்தை வெளிப்படுத்தி இருப்பார் நடிகை நட்சத்திரா. அந்த சீரியல் முழுக்க முத்து மாமா.. முத்து மாமா என அவரது மாமாவை சுற்றி சுற்றி வருவார். இவர் நடித்த வெண்ணிலா கதாபாத்திரம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போகவே இல்லத்தரசிகளின் பேவரைட் கதாநாயகியானார் நட்சத்திரா.

காதல் திருமணம்
நட்சத்திரா தற்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் வரும் வள்ளி திருமணம் சீரியலில் நடித்து வருகிறார். நடிகை நட்சத்திரா ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சில சீரியல்களின் தயாரிப்பு நிர்வாகப் பணிகளை மேற்கொண்டு வரும் விஷ்வா என்பவரை கடந்த சில வருடங்களாக காதலித்து வந்துள்ளார். விஷ்பா சினிமா தயாரிப்பாளரும், நடிகர் விஜய்யின் உறவினருமான சேவியர் பிரிட்டோ குடும்பத்துடனும் நெருங்கிய தொடர்பில் இருக்கிறார்.

எளிமையான முறையில்
இந்நிலையில், நடிகை நட்சத்திராவுக்கு விஷ்வாவுக்கும் இரு தினங்களுக்கு முன்பு இரு வீட்டாரின் சம்மதத்துடன் மிகவும் எளிமையான முறையில் கோவிலில் திருமணம் நடந்து முடிந்துள்ளது. நட்சத்திராவின் தாத்தாவுக்கு தற்போது உடல் நிலை சரியில்லாததால், அவர் தனது பேத்தியின் திருமணத்தை பார்க்க ஆசைபட்டதாக கூறப்படுகிறது. இதனால், நட்சத்திரா - விஷ்வா திருமணம் அவசர அவசரமாக நடந்து முடிந்தாக கூறப்படுகிறது.

விரைவில் ரிசப்ஷன்
அவசரமாக நடந்த இவர்களது திருமணத்தில் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். சின்னத்திரை நண்பர்களுக்காக விரைவில் சென்னையில் வரவேற்பு நடக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. திருமண புகைப்படத்தை நடிகை நட்சத்திரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவருக்கு ரசிகர்களும்,சின்னத்திரை பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நடிகை ஸ்ரீநிதி கதறல்
கடந்த சில மாதங்களுக்கு முன் நடிகை ஸ்ரீநிதி, நட்சத்திரா காதலிக்கும் நபர் சரியானவர் அல்ல என்றும், அவருடன் நட்சத்திராவுக்கு திருமணம் நடந்தால், நடிகை சித்ராவின் நிலைதான் ஏற்படும். அவரைக் காப்பாற்ற வேண்டும் என இன்ஸ்டாகிராமில் கதறி அழுதபடி வீடியோ வெளியிட்டு இருந்தார். அதன்பிறகு நட்சத்திராவும் இதற்கு விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.


Click it and Unblock the Notifications











