Sandhya Ragam: பெண்களின் அபார வளர்ச்சி.. மறையாத கலாச்சாரம்.. மகளிர் தின ஸ்பெஷலாக சந்தியா ராகம் ப்ரமோ
சென்னை: அடுப்படியில் அடைபட்டு கிடந்த பெண்கள் இன்று ஆண்களுக்கு இணையாக சாதிக்க துவங்கியுள்ளனர். பெண்களின் பெருமையை போற்றும்வகையில் வரும் 8ம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படவுள்ளது. எல்லா துறைகளிலும் பெண்கள் சாதித்து சரித்திரம் படைத்து வரும் நிலையில் இன்றைய கல்வி வளர்ச்சி, வேலைவாய்ப்புகள், பெண்களுக்கான சட்டதிட்டங்கள் ஆகியவையும் பெண்கள் முன்னேற்றத்திற்கு முக்கிய காரணங்களாக இருந்து வருகின்றது. இந்த வளர்ச்சிகளால் நமது கலாச்சாரம் மறைக்கப்பட்டு விட்டதா என்றால் நிச்சயம் இல்லை என்பது தான் பெண்களின் பதிலாக இருந்து வருகிறது,
ஜீ தமிழில் தினந்தோறும் இரவு 9.30 மணிக்கு வாரத்தின் 7 நாட்களிலும் ஒளிபரப்பாகி வருகிறது சந்தியா ராகம் சீரியல். இந்த சீரியலிலும் பெண்களின் உரிமை, சுதந்திரம் ஆகியவை கதைக்களங்களாக அமைக்கப்பட்டு அடுத்தடுத்த எபிசோட்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. இந்நிலையில் வரும் மகளிர் தின ஸ்பெஷலாக பெண்களின் பெருமைகளை கொண்டாடும் வகையில் சந்தியா ராகம் சீரியல் கதைக்களம் அமையவுள்ளது. அந்த வகையில் பெண்களுக்கு பூப்பெய்துவதற்காக கொண்டாடப்படும் சடங்குகள் தேவையா என்ற விவாதம் தற்போது எழுந்துள்ளது.

சந்தியா ராகம் தொடர்: ஜீ தமிழில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்துவரும் சீரியல் சந்தியா ராகம். வாரத்தின் 7 நாட்களிலும் இரவு 9.30 மணிக்கு இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த மாயா தனது அம்மாவின் இழப்பால் இந்தியாவிற்கு வர, இங்கு இருக்கும் கலாச்சாரங்கள் பெண்களுக்கு முட்டுக்கட்டைகளாக இருப்பதாக அவர் உணர்கிறார். இதனால் இவற்றையெல்லாம் வெறுக்கிறாள். காலாச்சாரத்தை பெரிதாக பின்பற்றி வாழும் குடும்பத்தில் இருக்கும் மாயா அதை எப்படி எதிர்கொள்கிறாள், நமது கலாச்சாரத்தின் பெருமைகளில் இருந்து மாயா கற்று கொள்வது என்ன? மற்றவர்களுக்கு கற்று கொடுப்பது என்ன என்பது தான் சீரியலின் கதைக்களமாக அமைந்துள்ளது.

சடங்கு குறித்த விவாதம்: இந்த சீரியலின் சமீபத்திய எபிசோடில் இடம்பெற்ற சடங்கு குறித்து அமெரிக்காவில் பிறந்து வளர்ந்து மாயாவின் கோபமும் அதற்கு ரகுராமின் விளக்கமும் அடங்கிய ப்ரோமோ வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. ரகுராம் மற்றும் மாயா இருவரின் கருத்துக்களில் யார் சொல்வது சரி என்பதாக இந்த பிரமோ கேள்வி எழுப்பியுள்ளது. மாயா மற்றும் ரகுராம் இருவரில் ரசிகர்கள் யாருக்கு சப்போர்ட் செய்கிறார்கள் என்றும் இந்த ப்ரமோ கேள்வி எழுப்பியுள்ளது. அதற்கு வாக்களிக்கவும் கேட்டுக் கொண்டுள்ளது. மகளிர் தினத்தையொட்டி இந்த பிரமோ வெளியாகியுள்ளது.

சந்தோஷ தருணம்: இந்த வாக்கெடுப்பில் பெண்களுக்கான சடங்குகள் குடும்பத்தோடு இணைந்து சந்தோசமாக கொண்டாடக்கூடிய ஒன்று. இதெல்லாம் எங்க குடும்பத்தில் நடக்கலையே என்று வருத்தம் இருப்பதாக பலர் கூறியுள்ளனர். இந்த விவாதத்தையொட்டி வெளியிடப்பட்டுள்ள பிரமோ ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளது. மாயா எப்படி நமது கலாச்சாரங்களையும் அதில் மறைந்திருக்கும் மகிழ்ச்சிகளையும் அறிந்து கொள்கிறார் என்ற கோணத்தில் சீரியல் கதைக்களம் அடுத்தடுத்து நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புரிந்து கொள்வாரா மாயா?: ஷாரு, மாயா மற்றும் தனத்திற்கு ரகுராம் குடும்பத்தினர் சடங்கு செய்ய முடிவு செய்கின்றனர். ஆனால் இதை கேள்விப்படும் மாயா, தனக்கு இதில் விருப்பம் இல்லை என்று சத்தம் போடுவதாக காணப்பட்டது. தொடர்ந்து இதுபோன்ற சடங்குகள் எல்லாம் பெண்களை அவமானப்படுத்த அல்ல என்றும் பெண்களை கொண்டாடத்தான் இத்தகைய சடங்குகள் என்றும் ரகுராம் மறைமுகமாக கூறுகிறார். இதை புரிந்து கொள்கிறாள் மாயா. இதையடுத்து என்ன நடக்கும் என்பதை அடுத்தடுத்த எபிசோட்களில் ரசிகர்கள் தெரிந்துக் கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications











