ஜீ தமிழ் சீரியல்களில் இதை கவனிச்சீங்களா.. அரைத்த மாவையே அரைக்கறீங்களா? கொஞ்சம் பார்த்து உருட்டுங்க..
சென்னை: சீரியல் என்றாலே ஒரு காலத்தில் இல்லத்தரசிகளுக்கு என்று சொல்லப்பட்டு கொண்டு இருந்தது. அதாவது காலையில் வீட்டு வேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டு 'அப்பாடா' என உட்காரும் நேரத்தில் சீரியல்கள், அதன் பின்னர், மாலையும் அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு டிவி முன் உட்காரும் நேரத்தில் சீரியல்கள் என்பது வழக்கமாகிவிட்டது.
தமிழ் சினிமாவில் படங்கள் அடுத்தடுத்து தோல்வியைத் தழுவினால், பழைய படங்களின் பெயர்களை மீண்டும் பயன்படுத்த தொடங்கினால், உடனே வரும் பேச்சு என்னவாக இருக்கிறது என்றால், " நம்ம தமிழ் சினிமாவுல கதைக்கு வறட்சி, டைட்டிலுக்கு வறட்சி" என்ற பேச்சு ஆரம்பித்துவிடுகிறது. அதேபோல், ஒரு டெம்ப்ளேட்டில் ஒரு படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துவிட்டால், பல தயாரிப்பளர்களும் இயக்குநர்களும் அதே டெம்ப்ளேட்டில் படங்களை எடுக்க தயாராகி விடுகிறார்கள்.

இதன் பிரதிபலிப்பு டிவி ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் எதிரொலித்தது. ஒரு சேனலில் ஒரு ரியாலிட்டி ஷோ வெற்றி பெற்றால், அதேபோல், மற்றொரு சேனலில் அதேபோன்ற ஒரு ரியாலிட்டி ஷோ இன்னும் கொஞ்சம் மசாலா கலந்து ஒளிபரப்படுகிறது. இது வெவ்வேறு சேனல்களில் அதாவது, சந்தையில் நேருக்கு நேர் போட்டியாக களத்தில் நிற்கும் சேனல்களுக்கு இடையில் இந்த போட்டி நடைபெறுகிறது.
ஒரே மாதிரி இருக்குப்பா: இன்றைய காலத்தில் சீரியல் பார்க்கும் ஆண்கள் பெண்களுக்கு நிகரானவர்களாக இருக்கிறார்கள். அதனால்தான் ஆண்களை மைய்யக் கதாபாத்திரங்களாக கொண்ட சீரியல்களும், பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் அளவுக்கு ஆண் கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு எடுக்கப்படுகிறது. இது இப்படி இருக்க ஒரே சேனலில், ஒளிபரப்பாகும் இரண்டு வெவ்வேறு சீரியல்களில் வரும் காட்சிகளும் திரைக்கதை நகர்வும் ஒரே மாதிரி இருப்பது என்பது ஏமாற்றம் அளிக்கிறது.

வீரா - சந்தியா ராகம்: அதாவது, ஜீ தமிழ் சேனலில் மாலை 7.30 மணிக்கு ஒளிபரப்பாகும் வீரா சீரியலும், இரவு 9.45 மணிக்கு ஒளிபரப்பாகும் சந்தியா ராகம் சீரியலும் கிட்டத்தட்ட ஒரே கதை, திரைக்கதையை கொண்டவையாக உள்ளது. அது ரசிகர்களுக்கு சலிப்பூட்டும் விதமாகவும் உள்ளது. அதாவது இரண்டு சீரியல்களிலும் ஜவுளிக்கடை தான் பிரதான தொழிலாக உள்ளது. வீரா சீரியலில் வீராவும் மாறனும் எப்படி வீட்டை விட்டு வெளியேறுகிறார்களோ, அதேபோல் சந்தியா ராகம் சீரியலில் தனாவும் கதிரும் வீட்டை விட்டு வெளியே போய் உள்ளார்கள்.
ஒரே பிளான்: வீரா சீரியலில் வில்லி விஜி, கதிருடன் தனிமையில் இருப்பதற்காக பாலில் போதை மருந்தைக் கலக்குகிறார். ஆனால் இந்த பிளான் சொதப்பிவிடுகிறது. அதேபோல், சந்தியாராகம் சீரியலிலும் இரண்டாம் கட்ட வில்லிகளாக உள்ள பத்மாவும், பார்வதியும் இணைந்து சீனுவுக்கும் சாருவுக்கும் திருமணத்திற்கு முன்னரே முதலிரவு நடத்த பாலில் போதை மருந்தையும் மயக்க மருந்தையும் கலக்குகிறார்கள். இதில் மயக்க மருந்து மாவுக்கு கொடுக்கவும், போதை மருந்தை சீனுவுக்கு கொடுக்கவும் திட்டமிடுகிறார்கள். ஆனால் பிளான் சொதப்பி வருகிறது.

மாத்துங்க: இந்த வார எபிசோடில். வீரா சீரியலில் ராமச்சந்திரனும், சந்தியா ராகம் சீரியலில் ரகுராமும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். வீரா சீரியலில் வீரா- மாறன் தங்கியிருந்த வீடு தீப்பற்றி எரிகிறது. இதேபோல் சந்தியாராகம் சீரியலில் இன்னும் சில வாரங்களில் தனாவும் கதிரும் வீட்டை விட்டு வெளியேறும் காட்சி அமைந்தால் அதில் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இப்படியான காரணங்களாலோ என்னவோ, வீரா சீரியலை பார்த்துவிட்டு சந்தியாராகம் சீரியலைப் பார்க்க போர் அடிக்கிறது. கதையை கொஞ்சம் மாத்துங்க சார் ப்ளீஸ் என் ரசிகர்கள் கோரிக்கை வைக்கும் நிலையில்தான் உள்ளது. அரைத்த மாவையே அரைக்காமல், இரண்டு சீரியல்களுக்கும் வெவ்வேறு திரைக்கதை அமையுங்கள்.


Click it and Unblock the Notifications











